நடுவானில் விமானத்தில் புகை: பத்திரமாக தரையிறக்கப்பட்டது
டெல்லி: டெல்லியில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டு சென்ற விமானத்தில் திடீரென புகை கிளம்பியதை தொடர்ந்து அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் டெல்லியில் இருந்து இன்று காலை 7 மணிக்கு லண்டனுக்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்ட அரைமணி நேரத்தில் பைலட்டுகள் அறையில் திடீரென்று புகை கிளம்பியது. இதை பார்த்த பைலட்டுகள் உடனே விமான நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த விமானம் மீண்டும் டெல்லி விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸூகள் தயார் நிலையில் இருந்தன.
அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை. விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டனர்.
இன்ஜினீயர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் விமானத்தில் ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் பயணிகளிடம் பதட்டத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது