For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நானே பிரபாகரனை அறிவுறுத்தினேன்-ப.சிதம்பரம்

By Staff
Google Oneindia Tamil News

காரைக்குடி: இலங்கை பிரச்சனையை போர் மூலம் தீர்க்க முடியாது என்று நானே பல முறை பிரபாகரனை சந்தித்து அறிவுறுத்தினேன். ஆனால் விடுதலைப் புலிகள் அமைதி பாதைக்கு வரவில்லை என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

மேலும் இலங்கைக்கு இந்திய அரசு ராணுவ தளவாடங்களைத் தரவில்லை, அது தவறான பிரச்சாரம் என்றும் கூறினார்.

காரைக்குடியில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

நவம்பர் முதல் தேதி திருச்சி-மானாமதுரை அகல ரயில் பாதையில் 2வது ரயில் போககுவரத்து தொடங்கப்படவுள்ளது. அகல ரயில் பாதை குறித்து தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

அமெரிக்காவில் ஏற்பட்ட அந்த பொருளாதார நில அதிர்வின் காரணமாக உலகின் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவும் ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், நமது வங்கிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. வங்கிகளில் வைப்புத் தொகை வைத்திருப்பவர்களுக்கு எந்த அச்சமும் தேவையில்லை. அனைத்து வங்கிகளும் முறையாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் சில விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் நடைபெற்று உள்ளன. தமிழ்நாடு அரசும் அதற்கு நடவடிக்கை எடுத்து உள்ளது. இலங்கை பிரச்சனையை பொறுத்தவரை ஒன்றுபட்ட இலங்கையில் சிங்கள மக்களுக்கு கிடைக்கக்கூடிய அனைத்து உரிமைகளும், வாய்ப்புகளும் தமிழர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் இந்திய அரசின் கொள்கை.

கடந்த 30 ஆண்டு காலமாக காங்கிரஸ் கட்சி இதனை வலியுறுத்தி வந்துள்ளது. இதற்காக ராஜீவ் காந்தி காலத்தில் பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து உடன்பாடுகூட ஏற்பட்டது.

ஆனால் விடுதலைப் புலிகள் அதற்கு ஒத்துழைப்பு தரவில்லை. மாறாக போர் மூலம் வெற்றி பெற முடியும் என நம்பினார்கள்.

இது தவறான நம்பிக்கை என நாங்கள் அவர்களுக்கு பல முறை அறிவுரை தந்து இருக்கிறோம். நானே பல முறை பிரபாகரனை சந்தித்து இந்த வழி சரியான வழி அல்ல. ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளே தமிழர்களுக்கு கிழக்கு, வடக்கு பகுதிகளில் ஒன்று அல்லது இரண்டு மாநிலங்கள் என பேச்சு வார்த்தையில் முடிவு செய்ய முடியும். எனவே பேச்சுவார்த்தைக்கு செல்லுங்கள் என்று பலமுறை அறிவுறுத்தி உள்ளேன்.

ஆனால் விடுதலைப் புலிகள் அவர்கள் எடுத்துக்கொண்ட பாதையில் இருந்து விலகி அமைதி பாதைக்கு வருவதாகத் தெரியவில்லை.

இந்த போரிலே இலங்கை அரசு ராணுவ ரீதியாக தீர்வு காண முயற்சிப்பதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்வு காண வேண்டும். இதை பலமுறை வலியுறுத்தி உள்ளோம்.

போரினால் அப்பாவி தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் அந்த நாட்டுக்குள்ளே அகதிகளாக உள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட வேண்டும்,
போர் நிறுத்தப்பட வேண்டும்ம், பேச்சுவார்த்தைக்கு இருதரப்பும் வரவேண்டும் என்றும் இந்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

இலங்கையை பிரிப்பது பிரச்சினைக்கு வழி அல்ல. ராணுவ தீர்வும் வழி அல்ல.

இதற்கிடையே தமிழ்நாட்டில் சில விபரீத பேச்சுகளும், விபரீத நிகழ்வுகளும் தலையெடுத்துள்ளன. இதற்கு நாங்கள் கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறோம். அவர்கள் தவறை உணர்ந்து திருந்தவேண்டும். இந்த விபரீத பேச்சுகளினால் இலங்கை தமிழர்களுக்கு எந்த பயனும் கிடையாது.

இந்த பிரச்சினையையொட்டி தமிழ்நாடு அரசு சிலரை கைது செய்யவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கை அதிகரித்து இருக்கிறது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இலங்கை அரசுக்கு இந்திய அரசு எவ்வித போர் தளவாட உதவிகளையும் செய்யவில்லை. இது தவறான பிரசாரம் ஆகும்.

காங்கிரஸ், திமுக உடன்பாடு என்பது காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரின் பேச்சுவார்த்தையால் ஏற்பட்டது. அந்த உடன்பாடு வலுவானதாகவே இருக்கிறது.

தமிழ்நாட்டை கடந்த 15 ஆண்டுகளாக ஆண்ட அரசுகள் மின் உற்பத்தியில் போதிய கவனம் செலுத்தவில்லை. இதை முன் கூட்டியே உணர்த்தி இருக்கிறேன் என்றார் சிதம்பரம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X