For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புல்லட் புரூப் ஜாக்கெட்டைக் கொடுத்த ராஜீவைக் கொன்றவர்கள் புலிகள் - பீட்டர் அல்போன்ஸ்

By Staff
Google Oneindia Tamil News

Peter Alphonse
சென்னை: இந்தியா - இலங்கை அமைதி ஒப்பந்தத்தி்ற்குப் பின்னர் தனது சொந்த குண்டு துளைக்காத உடையை, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு வழங்கினார் ராஜீவ் காந்தி. ஆனால் அவரையே குண்டு வைத்துக் கொன்றனர் புலிகள் என்று சட்டசபையில் காங்கிரஸ் கொறடா பீட்டர் அல்போன்ஸ் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் மீது அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் பேசினர்.

காங்கிரஸ் கொறடா பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், கடந்த 1987ம் ஆண்டு இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் பிறகு நடந்த சம்பவம் ஒன்றை மறைந்த தலைவர் ஜி.கே.மூப்பனார் என்னிடம் முன்பு கூறியிருந்தார்.

ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் ராஜீவ்காந்தி, பிரபாகரனை கட்டித் தழுவி வாழ்த்தினார். ஆல் தி பெஸ்ட் சொன்னார். பின்னர் அவருக்கு தனது சொந்த புல்லட் புரூப் ஜாக்கெட்டை பரிசாக வழங்கினார்.

இலங்கைத் தமிழர்களுக்காக காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய தியாகத்தை செய்துள்ளது. எனவே காங்கிரஸ் கட்சியை நோக்கி சுட்டு விரலை நீட்டும் உரிமை வேறு எந்தக் கட்சிக்கும் கிடையாது.

இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக காங்கிரஸ் இருப்பதாக சில கட்சிகள் தவறாக குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் இலங்கைத் தமிழர்கள் பிரச்சினைய உலக அரங்குக்கு கொண்டு சென்று,அதற்குத் தீர்வு காண பாடுபட்டவர்கள் மறைந்த இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும்தான்.

ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனே இடையிலான ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும் என இன்னும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால் அந்த ஒப்பந்தமே காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பை ஏற்படுத்தி விட்டது.

ராஜீவ் காந்தி படுகொலையை சோகமான விபத்து என்று கூறுகிறது விடுதலைப் புலிகள் இயக்கம். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு அது விபத்தல்ல, மாபெரும் இழப்பு.

சமீபத்தில் கூட காஷ்மீரில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, தனது தந்தையின் மரணத்திற்கு தங்களுக்கு இன்னும் கூட நீதி கிடைக்கவில்லை என்று தெரிவித்தார் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். மகள் பிரியங்காவோ, தனது தந்தையின் மரணத்திற்கான காரணத்தை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்.

இத்தனைக்கும் பிறகும், மனிதர்களை மன்னிக்கும் குணம் கொண்ட சோனியா காந்தி, மறப்போம், மன்னிப்போம் என்ற ரீதியில், தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண தொடர்ந்து முயன்று கொண்டிருக்கிறார் என்பதை யாரும் மறந்து விடக் கூடாது.

இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பதில் காங்கிரஸ் எப்போதுமே முன்வரிசையில் நின்றுள்ளது. இந்திராகாந்திதான், இலங்கையில் நடப்பது இனப்படுகொலை என முதன் முதலில் கண்டித்தவர் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இலங்கைத் தமிழர்கள் படும் துயரம், தமிழர்களின் துயரம் மட்டுமல்ல, இந்தியர்களின் துயரமும் கூட என்று அவர் கூறினார். இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடந்து வருவதாக உலக அரங்கில் முதல்முதலில் குரல் எழுப்பியவரும் இந்திரா காந்திதான்.

இந்திய - இலங்கை ஒப்பந்தத்திற்குப் பின்னர் இங்கிலாந்து பிரதமர் மார்கரெட் தாட்சர், அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் ஆகியோரிடம் பேசிய ராஜீவ் காந்தி,இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்ப வேண்டும் என்று வேண்டினார்.

ஆனால் ராஜீவ் படுகொலைக்குப் பின்னர், மறைந்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் ஆன்டன் பாலசிங்கம்,இதை சோகமான விபத்து என்றார். அதேசமயம், ஒரு கூட்டத்தில் பேசிய பிரபாகரன், இந்திய - இலங்கை ஒப்பந்தம் வடிவில் இந்தியா தவறிழைத்து விட்டதாக இந்தியாவை குற்றம் சாட்டினார். இந்தியா தங்களுக்குச் செய்ததை மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம் என்றும் அவர் கூறினார்.

இரு தரப்பும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று முதல்வர் கோருகிறார். இந்திய அரசால் இலங்கை அரசுடன் பேச முடியும். அதில் பிரச்சினை இல்லை. ஆனால் மறு தரப்பில் யாருடன் இந்திய அரசால் பேச முடியும்?. மறு தரப்பின் சார்பில் போர் நிறுத்தத்திற்குப் பின்னர் அமைதி நிலவும் என உத்தரவாதம் கொடுப்பது யார்?

(அப்போது குறுக்கிட்ட மதிமுக தலைவர் கண்ணப்பன், பாமக உறுப்பினர் வேல்முருகன் ஆகியோர், விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன் அமைதிக்கு உத்தரவாதம் கொடுக்கத் தயார் என்றனர்)

மத்திய அரசுடன் முதல்வருக்கு நல்ல உறவு உள்ளது. எனவே போர் நிறுத்தம் குறித்த முன்நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொள்வதற்கு முன்பு, இது நிரந்தரமானதா அல்லது தற்காலிக நிறுத்தமா என்பதை முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X