For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மங்களூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் இல்லாதது ஏன்?-கருணாநிதி விளக்கம்

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: திருமங்கலம் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மங்களூர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படாதது ஏன் என்பதற்கு முதல்வர் கருணாநிதி விளக்கமளித்துள்ளார்.

திருமங்கலம் தொகுதி மதிமுக எம்எல்ஏ வீர.இளவரன் மரணமடைந்ததைத் தொடர்ந்து இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆனால், இளவரசன் மறைவுக்கு முன்பே மங்களூர் தொகுதி எம்எல்ஏவான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த செல்வம் என்ற செல்வப் பெருந்தகை தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்துவிட்டார்.

எனவே முறைப்படி அந்தத் தொகுதிக்கும் திருமங்கலத்துடன் சேர்த்து இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தேர்தல் அறிவிப்பு வரவில்லை.

இதையடுத்து மங்களூர் தொகுதி இடைத் தேர்தல் முதல்வர் கருணாநிதி திட்டமிட்டு தடுத்துவிட்டதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் புகார் தெரிவித்திருந்தனர்.

இந் நிலையில் செல்வப் பெருந்தகையின் ராஜினாமா இன்னும் சபாநாயகரால் ஏற்கப்படவில்லை என்றும், இதனால் தான் அந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை என்றும் முதல்வர் கருணாநிதி விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:

கேள்வி: மங்களூர் தொகுதியில் இடைத்தேர்தல் இன்னும் அறிவிக்காததற்கு கருணாநிதி அரசின் சூழ்ச்சிதான் காரணம் என்று இரண்டொரு அரசியல் மேதைகள் பேசியுள்ளார்களே?

பதில்: 1983ம் ஆண்டு, இலங்கை தமிழர் பிரச்சினையை காரணம் காட்டி, தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக நானும், பேராசிரியரும், அன்றைய பேரவைத் தலைவர் ராஜாராமுக்கு 10-8-1983 அன்று விலகல் கடிதம் அனுப்பினோம். ஆனால், பேரவைத் தலைவர் அந்த கடிதங்கள் முறைப்படியான படிவத்திலே எழுதப்படவில்லை என்று காரணம் கூறி பதவி விலகினால் அது செல்லாது என்று தெரிவித்துவிட்டார்.

எனினும் அப்போது நாங்கள் எடுத்த முடிவை மாற்றிக்கொள்ளாமல் பேரவைத் தலைவர் கூறியவண்ணம் சட்டப்பேரவை விதிகளின்படி ராஜினாமா பதவி விலகல் கடிதங்களை கொடுத்தோம். அதன் பிறகே சட்டப்பேரவை தலைவரால் எங்கள் ராஜினாமாக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆனால், இப்போது மங்களூர் சட்டப்பேரவை உறுப்பினர் கு.செல்வம் அனுப்பியிருந்த ராஜினாமா கடிதம் சட்டப்பேரவை விதிகளுக்கு உட்பட்டதாக அமையவில்லை.

விதி 21 (1)ன்படி பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து விலக விரும்பும் ஓர் உறுப்பினர், இதற்காக இணைப்பு படிவத்தில் பேரவைத் தலைவருக்கு தம்முடைய எண்ணத்தை தம் கைப்பட எழுதி கையொப்பமிட்டுத் தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கு.செல்வம் அனுப்பியிருந்த ராஜினாமா கடிதம் உரிய படிவத்தில் அளிக்கப்படாததாலும், பேரவை உறுப்பினர் பதவி விலகல் எந்த தேதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது என்று குறிப்பிடப்படாததாலும், பேரவை விதி 21 (1)க்கு ஒவ்வாத வகையில் அளிக்கப்பட்ட அவரது பதவி விலகல் கடிதம் பேரவை தலைவரால் இதுவரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

எனவே, மங்களூர் சட்டப்பேரவை தொகுதி காலியாக உள்ளது என்று இதுவரை அறிவிக்கப்படவில்லை. தொகுதி காலியாக உள்ளது என்று முறைப்படி அறிவிக்கப்பட்டதற்கு பிறகுதானே இடைத்தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்ய முடியும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X