• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிற்பட்டோருக்கு வாய்ப்புகள் தரவில்லை-ராமதாஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: இடஒதுக்கீடு என்பது 100 சதவீதம் இருந்தால் தான் சமூக நீதி வெற்றி பெற்றதாக ஏற்க முடியும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவை சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் நினைவு அஞ்சலி கூட்டம் சென்னை பல்கலைக்கழக பவள விழா அரங்கத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவையின் தலைவர் கே.பாலு தலைமை தாங்கினார். இதில் ராமதாஸ் கலந்து கொண்டு வி.பி.சிங் திருவுருவப்படத்தை திறந்து வைத்து பேசியதாவது:

இன்றைய இளம் வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பற்றிய சிந்தனை கொண்டவர்களாக இருப்பதாகத் தெரியவில்லை. குறிப்பாக நீதி வழங்க கூடிய நீதிமன்றத்தில் கூட பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் யாரும் இடம் பெறவில்லை. வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்களை மட்டுமே உயர்ந்த பதவியான நீதிபதி பதவியில் அமர்த்துகின்றனர்.

நீதித் துறையில் உள்ள இடஒதுக்கீட்டை கூட தகுதி என்று கூறி அந்த உயர் சாதியினர் பிற்படுத்தப்பட்டவர்களை மேலே வர அனுமதிப்பதில்லை. இதை பார்க்கும்போது பெரியார் இல்லையே என்ற வருத்தம் தோன்றுகிறது.

முதல் முறையாக டெல்லி மருத்துவக்கல்லூரியில் இடஒதுக்கீடு கொண்டு வர தமிழ்நாட்டை சேர்ந்த இளம் அமைச்சர் அன்புமணி பிற்படுத்தப்பட்டவர்களுக்காக இடஒதுக்கீடு கொண்டு வந்தார். ஆனால், ஒரு சிலர் அதனை எதிர்த்து மாணவர்களை தூண்டி விட்டு, போராட்டங்களை நடத்தினர். இதற்கும் ஊடகங்கள் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டன.

அமைச்சர் அன்புமணி, ஒரு உயர் சாதி வகுப்பைச் சேர்ந்தவாராக இருந்ததால் அவர் ஆற்றி வரும் பணிக்காக இந்தியாவின் தலைசிறந்த அமைச்சராகத் திகழக் கூடும்.

ஐ.ஐ.டியில் படித்த வல்லுனர்கள் வெளிநாடுகளுக்கு சென்று பணியாற்றி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கின்றனர். ஆனால் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அங்கு வாய்ப்பு அளித்திருந்தால் அவர்கள் நமது நாட்டிற்காக பாடுபட்டு இந்தியாவை வல்லரசு நாடாக என்றோ உருவாக்கி இருப்பார்கள்.

ஆனால் அந்த வாய்ப்புகள் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே அனைத்து துறைகளிலும் முழு அளவில், 100 சதவீதம், இடஒதுக்கீடு வந்ததால் தான் சமூக நீதி வெற்றி பெற்றதாக ஏற்க முடியும் என்றார் ராமதாஸ்.

விழாவில் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.பி.சிவசுப்பிரமணியம், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ், வழக்கறிஞர் செந்தில்நாதன், சென்னை உயர்நீதி மன்ற பெண்கள் வழக்கறிஞர் சங்க தலைவர் சாந்தகுமாரி, எம்பி தன்ராஜ் உள்ளிட்டோர் பேசினர்.

முன்னதாக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சமய நல்லிணக்க கிறிஸ்துமஸ் பெருவிழா சென்னை சர் பிடி. தியாகராயர் அரங்கில் நடைபெற்றது.

அதில் ராமதாஸ் பேசுகையில்,

உலகத்தில் முதல் சமூக நீதிப் போராளி யார் என்றால் ஏசுநாதர் தான். ஏனென்றால் அவர்தான் ஒடுக்கி வைக்கப்பட்ட மக்களுக்காக, புறக்கணிக்கப்பட்ட மக்களுக்காக முதல் குரல் கொடுத்தார்.

மத கலவரத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்து தண்டனை கொடுப்பதை விட, நல்லிணக்கத்தை போதிக்கின்ற ஆயர்கள் உலமாக்களிடம் அவர்களை சிறைவைத்து அவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்கச் சொல்லும் தண்டனையை கொடுத்தால் கூட சரியாக இருக்கும்.

இங்கு பேசிய மருதாச்சல அடிகளார் அழகான கருத்துகளை சொன்னார். அவரிடம் மதக் கலவரவாதிகளை 10 நாள் சிறை வைக்க வேண்டும். இதேபோல் பேராயரிடம் 10 நாட்கள், உலமாக்களிடம் 10 நாட்கள் சிறை வைத்து போதித்தால் போதும். அவர்கள் திருந்தி விடுவார்கள் என்றார்.

இந்த விழா முடிந்ததும் டாக்டர் ராமதாசிடம், திருமங்கலம் இடைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு' என்று நிருபர்கள் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த ராமதாஸ், இந்த நேரத்தில் அதுபற்றி கூறினால், அதைத்தான் தலைப்பு செய்தியாக போடுவீர்கள். இங்கு பேசிய விஷயங்கள் பின்னால் போய்விடும். எனவே இப்போது வேண்டாமே என்றார் சிரித்தபடியே.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X