For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'விருந்தும், மருந்தும் 3 நாள்தான்'-விஜயகாந்த்

By Staff
Google Oneindia Tamil News

Vijayakanth
திருமங்கலம்: திருமங்கலம் தொகுதியி்ல் தேமுதிக வேட்பாளர் வெற்றி பெற்றால் எனது சொந்த செலவில் திட்டங்களை நிறைவேற்றுவேன் என்று அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறினார்.

திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் தனபாண்டியனை ஆதரித்து விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.

பெருங்குடி, வலையங்குளம், எலியார்பத்தி, பாறபட்டி, வலையப்பட்டி, கொம்பாடி, ஆலங்குளம், கைத்தறி நகர் ஆகிய இடங்களில் திறந்த வேனில் நின்றபடி அவர் பேசியதாவது:

காஷ்மீரிலேயே அமைதியாக தேர்தலை நடத்தி விட்டோம். ஆனால் திருமங்கலத்தில் இந்த அளவுக்கு வன்முறைகள் நடக்கிறது என்று தேர்தல் அதிகாரியே கூறும் அளவுக்கு நிலைமை உள்ளது.

முன்பெல்லாம் தேர்தல் காலத்தில் ஓட்டுக்கு 5 ரூபாய், 10 ரூபாய், அதிகபட்சம் 100 ரூபாய் தருவார்கள். ஆனால் தேமுதிக என்ற கட்சி வந்த பிறகு ஒரு ஓட்டுக்கு 1000 ரூபாய் தருகிறார்கள்.

திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஏற்கனவே பணம் பட்டுவாடா செய்து விட்டன. கறி விருந்து நடத்தி சாப்பாட்டு இலைக்கு அடியில் 500 ரூபாயை வைக்கிறார்கள். விருந்தும், மருந்தும் 3 நாள்தான். அதன் பிறகு உங்களுக்கு ஒன்றும் கிடைக்காது. இன்னும் 2 ரவுண்டு, 3 ரவுண்டு பணம் தருவார்கள் என்றும் கூறிக் கொள்கிறார்கள்.

ஆக மொத்தம் ஒரு ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கினால் சுமார் 1.5 லட்சம் வாக்காளர்கள் என்றாலும் ரூ.75 கோடி ஆகிறது. இது அல்லாமல் தேர்தல் செலவுக்காக ரூ.25 கோடி செலவழித்தாலும் மொத்தம் ரூ.100 கோடி ஆகிறது.

இந்த ரூ.100 கோடியை இந்த தொகுதி மேம்பாட்டுக்கு செலவழித்திருந்தால் எல்லா அடிப்படை வசதிகளையும் செய்திருக்கலாமே.

நீங்கள் பணம் கொடுத்தவர்களுக்கு ஓட்டுப் போட்டால் பின்னால் உங்கள் தொகுதிக்கு ரோடு வேண்டும், குடிதண்ணீர் வேண்டும் என்று நீங்கள் கேட்டால் சும்மாவா ஓட்டு போட்டாய், 5 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டுதானே போட்டாய், ரோடுமில்லை, குடி தண்ணீருமில்லை என்று விரட்டி அடிப்பார்கள்.

காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை அதன் கூட்டணி கட்சியினரே தாக்கினார்களே? அதற்காக (திமுகவினர்) ஒரு கண்டனக் குரலாவது கொடுத்தார்களா?. இவ்வளவு நடந்து காங்கிரஸ் கட்சியினர் இன்னும் அதே கூட்டணியில் தான் இருக்கிறார்கள்.

அதற்காகத்தான் நான் கூட்டணியே வேண்டாம் என்று தனியாகவே போட்டியிடுகிறேன். இங்கு நடப்பது ஒரு இடைத்தேர்தல்தானே? அதற்கு ஏன் இத்தனை அமைச்சர்கள்? நடிகர்கள்? எம்.எல்.ஏ.க்கள்?. அவர்களுக்கு தைரியமில்லை, பயம்.

இலங்கை அதிபர் ராஜபக்சே டெல்லிக்கு வந்தாரே, அப்போது என்ன செய்தீர்கள்? ஆனால் இப்போது இலங்கைக்கு அமைச்சர் மந்திரி பிரணாப் முகர்ஜியை அனுப்ப வேண்டும் என்று சொல்கிறார்கள். எல்லாம் ஏமாற்று வேலை. இந்த நாடகங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வையுங்கள்.

காய்கறியோ, மீனோ, நகையோ அல்லது சேலையோ வாங்கச் சென்றால் எப்படியெல்லாம் சோதித்து பார்த்து வாங்குகிறீர்கள்? இந்த பொருட்களையே பார்த்து பார்த்து வாங்கும் நீங்கள், வாக்களிக்கும் போது நல்ல கட்சி எது என்று சிந்தித்து பாருங்கள். இந்த புத்தாண்டிலாவது ஒரு நல்ல கட்சிக்கு ஓட்டு போடுங்கள்.

நான் அரசியலுக்கு பிழைக்க வரவில்லை. உழைக்க வந்திருக்கிறேன். வாக்காளர்கள் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். தேமுதிக வேட்பாளர் தனபாண்டியனை வெற்றி பெறச்செய்யுங்கள். அவர் வெற்றி பெற்றால் அரசின் சார்பில் பெற்று தர வேண்டிய திட்டங்களை அவர் பெற்றுத் தருவார். நான் எனது சொந்த செலவில் இந்த தொகுதி மக்களுக்கு செய்ய வேண்டிய உதவிகளை செய்வேன் என்றார்.

கோவில் புனரமைப்பு-ஏமாற்றிய விஜய்காந்த்:

இந்தத் தொகுதியில் தான் விஜய்காந்தின் பூர்வீக சொந்த ஊரும் உள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது இங்கு பிரச்சாரம் செய்ய வந்த விஜய்காந்திடம் அந்த ஊர் மக்கள் அங்குள்ள ஒரு பெருமாள் கோவிலை செப்பனிட்டுத் தருமாறு கோரினர். நி்ச்சயம் செய்கிறேன் என்று உறுதிமொழி தந்த விஜய்காந்த், பிற கரைவேட்டிகள் மாதிரியே எதையும் செய்யவில்லை.

இதற்காக சென்னை வரை சென்று விஜய்காந்தை மீண்டும் சந்தித்துவிட்டு வந்தும் இந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியதாம்.

இதையறிந்த அதிமுகவினர் கோவில் புனரமைப்பு வேலைகளை தாங்கள் செய்து தருவதாக அந்த மக்களிடம் உறுதிமொழி தந்துள்ளனர். இதனால் தங்கள் வாக்கும் இலைக்கே என அந்த ஊர் மக்கள் உறுதி தந்துள்ளனர்.

விஜய்காந்தும்.. வெறும் பேச்சு தான் போலிருக்கே...!

(இப்போது மீண்டும் முதல் பாராவை படிக்கவும்...!!!)

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X