For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லாரி ஸ்டிரைக்: கேஸ்-காய்கறிகளுக்கு தட்டுப்பாடு

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: நாடு முழுவதும் நேற்றிரவு முதல் காவலரையற்ற லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கியது. இதனால் 50 லட்சம் லாரிகள் ஓடவில்லை. தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் சுமார் 4.5 லட்சம் லாரிகள் இயங்கவில்லை.

டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 10 குறைக்க வேண்டும், தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்க வரியைக் குறைக்க வேண்டும், கன ரக வாகனங்களின் டயர் விலையைக் குறைக்க வேண்டும்,

அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் சாதாரண டீசல், பெட்ரோல் கிடைக்க வழி செய்ய வேண்டும், லாரிகளுக்கு இன்சூரன்ஸ் தொகையைக் குறைக்க வேண்டும், சேவை வரியைக் குறைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து லாரி உரிமையாளர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சரக்கு லாரிகள், டேங்கர்கள், அரைபாடி மணல் லாரிகள், கண்டெய்னர் லாரிகள், டிரெய்லர் லாரிகள் மற்றும் வேன்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டன.

இதைத் தவிர கேஸ் ஏற்றிச் செல்லும் லாரிகள் எண்ணெய் நிறுவனங்களுடனான மோதல் காரணமாக தனியே ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வருகின்றன.

இதனால் சென்னையில் கோயம்பேடு, மாதவரம், பூந்தமல்லி, மணலி, தாம்பரம், யானைக்கவுனி, சால்ட் குவார்ட்டர்ஸ், துறைமுகம் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

நெடுஞ்சாலைகள், தாபாக்கள், பெட்ரோல் பங்குகள் என பல இடங்களிலும் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

தேசிய அளவிலான இந்தப் போராட்டத்தால் உணவுப் பொருட்கள், காய்கறிகள், பெட்ரோல், டீசல், கேஸ், கட்டுமானப் பொருட்கள், பழங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம். அவற்றின் விலையும் உயரும் நிலை ஏற்படலாம்.

லாரிகள் ஓடாததால் ரேஷன் கடைகளுக்கு போகவேண்டிய பொருட்களின் வினியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கியதுமே தக்காளி விலை உடனடியாக ரூ. 5 உயர்ந்துவிட்டது. சென்னையில் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் இன்னும் 2 நாட்களுக்கு தேவையான அளவு மட்டுமே இருப்பு உள்ளது. வேலை நிறுத்தம் நீடித்தால் இவற்றின் விலையோடு எல்லா காய்கறிகள் விலைகள் உயரும்.

நாமக்கல்-கோடிக்கணக்கான முட்டைகள் தேக்கம்:

நாமக்கல் பகுதியில் நேற்று முதல் சுமார் கோடிக்கணக்கான முட்டைகள் தேக்கமடைந்துள்ளன.

இங்கு நாள் ஒன்றுக்கு 2.5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் கேரளாவுக்கு 60 லட்சம், வெளிநாடுகளுக்கு 30 லட்சம், பெங்களூருக்கு 10 லட்சம், தமிழக சத்துணவு திட்டத்திற்கு 30 லட்சம் வினியோகமாகின்றன. மற்றவை தமிழகம் முழுவதும் சில்லரையாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.

லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக இந்த முட்டைகள் தேக்கமடைய ஆரம்பித்துள்ளன.

இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர் சங்கம் முதல் 2 நாட்கள் ஆதரவு தெரிவித்துள்ளது. அதற்கு மேலும் லாரிகள் வேலைநிறுத்தம் நீடித்தால் முட்டைகளை போலீஸ் பாதுகாப்புடன் லாரிகளில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த சங்கத்தின் தலைவர் நல்லதம்பி தெரிவித்தார்.

இதற்கிடையே லாரிகள் வேலை நிறுத்தம் குறித்து, லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் (மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ்) அகில இந்திய செய்தி தொடர்பாளர் சுகுமார் கூறுகையில்,

இந்த வேலை நிறுத்தத்தால் நேரடியாக 30 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். மறைமுகமாக பல லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். மத்திய அரசுக்கு நாளொன்றுக்கு ரூ.1,500 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையும், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சங்கராந்தி விழாவும் இம் மாதம் கொண்டாடப்படவுள்ளன. லாரிகள் ஓடாவிட்டால் பண்டிகை பொருட்கள் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்படுவதோடு விலையும் உயரும்.

எனவே மத்திய அரசு லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை ஏற்று பிரச்சனைக்கு உடனே தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பால்-குடிநீருக்கு தடையில்லை:

தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொதுச் செயலாளர் பழனிசாமி கூறுகையில்,

தமிழ்நாட்டில் ஜவுளி, உணவு தானியங்கள், காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களும் தேங்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த போராட்டத்தில் பால், மருந்துப் பொருட்கள் மற்றும் குடிநீர் வினியோகத்தில் ஈடுபடும் லாரிகளுக்கு விதி விலக்கு அளித்துள்ளோம் என்றார்.

நெல்லை மாவட்டத்தில் சுமார் 3,000 லாரிகளும் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 5,000 லாரிகளும் ஓடவில்லை. இதனால் தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்குகள் தேங்க ஆரம்பித்துள்ளன.

கொடைக்கானல் மலைப் பகுதியில் இருந்து தினமும் 1,500 லாரிகளில் காய்கறிகள் பல மாநிலங்களுக்கும் செல்லும். அந்த லாரிகள் நின்றுவிட்டதால் காய்கறிகள் முடங்கியுள்ளன.

மதுரை மாவட்டத்தில் இருந்து செல்லும் கைத்தறி துணிகள் சிவகாசியில் இருந்து செல்லும் தீப்பெட்டிகளும் தேங்கியுள்ளன.

குஜராத், ராஜஸ்தானில் இருந்து பருப்பு, உளுந்து போன்ற மளிகை பொருட்களும், மகாராஷ்டிரத்திலிருந்து வெங்காயம், உருளைக்கிழங்கு, பெங்களூரில் இருந்து முட்டைகோஸ், கேரட், பீட்ருட் போன்ற காய்கறிகளும் வருவதும் நின்று போயுள்ளது.

விசைப்படகுகளும் ஸ்டிரைக்:

இதற்கிடையே தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு உரி்மையாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன் விக்டோரியா, செயலாளர் சேவியர் வாஸ், பொருளாளர் பிரிண்டோ ஆகியோர் கூறுகையில்,

டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி இன்று (5ம் தேதி) தூத்துக்குடியில் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றன. இதனையடுத்து நாளை ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விசைப் படகுகள் வேலை நிறுத்தம் செய்கின்றன என்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X