For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராமலிங்க ராஜு, தம்பி ராம ராஜு கைது: ரூ.7000 கோடி முறைகேடு குறித்து ஒப்புதல்!

By Sridhar L
Google Oneindia Tamil News

Ramalinga Raju
ஹைதராபாத்: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜுவும் அவரகது தம்பி ராம ராஜும் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.

வெள்ளிக்கிழமை இரவு ஆந்திர மாநில டிஜிபி எஸ்எஸ்பி யாதவ் முன்பு ராஜுவும், அவரது தம்பியும் சத்யம் நிர்வாக இயக்குநருமான ராமராஜூவுடன் சரணடைவதாகத் தெரிவித்தனர். இருவரிடமும் முறையான விசாரணை மேற்கொண்ட பின்னர் போலீசார் கைது செய்தனர்.

முன்னதாக ராஜுவின் கடிதத்தின் அடிப்படையில் அவர் மீது ஆந்திர மாநில சிபிசிஐடி போலீசார் மோசடி வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

பின்னர் சத்யம் முதலீட்டாளர் ஒருவரது புகாரின் அடிப்படையில் ஆந்திர மாநில போலீசார் ராஜுவைக் கைது செய்தனர்.

எந்தெந்த பிரிவுகள்?:

இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 120B (கிரிமினல் சதி), 409 (நம்பிக்கை மோசடி), 420 (மோசடி), 468 மற்றும் 471 (ஏமாற்று) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ராஜு மற்றும் அவரது சகோதரர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விடிய விடிய விசாரணை:

சத்யம் ராஜு பிரதர்ஸிடம் போலீசார் விடியவிடிய விசாரணை நடத்தினர். நடந்த பல விஷயங்களை விரிவாக போலீசாரிடம் ராஜு கூறிவிட்டதாகத் தெரிகிறது.

ராஜுவை ஒரு டாக்டர்கள் குழுவும் சோதனை செய்தது.

முன்னதாக, மாலை 4 மணிக்கு சத்யம் தலைமை அலுவலகத்தில் செபி விசாரணைக் குழு முன்பு ஆஜரான ராஜூ, தனது முறைகேடுகளை ஒப்புக் கொண்டார். சத்யம் நிறுவனத்தில் ரூ.7000 கோடி வரை மோசடி செய்ததை ஒப்புக் கொள்வதாக ராமலிங்க ராஜுவும், ராம ராஜுவும் போலீசார் முன்பாக வாக்குமூலம் கொடுத்தனர்.

சீனிவாஸ் வடால்மணி கைதாகிறார்:

சத்யம் நிறுவனத்தின் நிதித் துறை தலைமை அதிகாரியான சீனிவாஸ் வடால்மணியும் இன்று கைது செய்யப்படுவார் என சிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்தான் அனைத்து மோசடிகளுக்கும் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தவர் என்று கூறப்படுகிறது. கைதுக்கு பயந்து நேற்று காலை இவர் தற்கொலைக்கு முயன்று பின்னர் காப்பாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

எந்தப் பிரிவில் கைது செய்வது?

முன்னதாக டிஜிபி அலுவலகத்துக்கு, தன் தம்பியுடன் சரணடைய வந்த ராஜுவை கைது செய்ய போலீசார் தயங்கினர் (இத்தனைக்கும் முன்கூட்டியே சிபிஐ வழக்குப் பதிவு செயதுள்ளது).

இந்த மாதிரி கார்ப்பரேட் மோசடி இந்தியாவிலேயே இப்போதுதான் முதல்முறையாக நடந்திருப்பதால் கைது நடவடிக்கை குறித்த நடைமுறைகளை விவாதித்தனர். அதுவரை ராஜு ஒரு அறையில் அமர வைக்கப்பட்டார்.

பின்னர் முதலீட்டாளர் ஒருவரது புகாரின் அடிப்படையிலும், மேலிடத்திலிருந்து வந்த உத்தரவுக்குப் பிறகும் மேற்கண்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.

கைது செய்யப்பட்ட ராஜு சகோதரர்களை அடுத்த 24 மணி நேரத்துக்குள் நீதிபதி முன் ஆஜர்படுத்தப் போவதாக போலீசார் தெரிவித்தனர். இன்று பிற்பகலில் அவர்கள் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்படலாம் எனத் தெரிகிறது.

ராஜு பிரதர்ஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட உடன் அவர்களுக்கு ஜாமீன் கோரி விண்ணப்பிக்கப்படும் என்றார் அவர்களது வழக்கறிஞர் பரத்குமார்.

ஆனால், அடுத்த 14 தினங்களுக்கு ராஜுக்கள் இருவருக்கும் ஜாமீன் கிடைக்காது என்றும், சிறையில்தான் இருந்தாக வேண்டும் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

சிஐடி போலீசார் வசம்...:

கைதாகியுள்ள இருவரும் தற்போது ஆந்திர மாநில சிஐடி போலீஸ் கஸ்டடியில் உள்ளனர். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து உயர்மட்ட அளவில் ஆலோசனை நடந்து வருவதாக சிஐடி இயக்குநர் காமுடி அறிவித்துள்ளார்.

இவ்வழக்கில் அனைத்து மோசடிகளும் நிரூபிக்கப்பட்டால் ராஜூ சகோதரர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைவாசம் கிடைக்கக் கூடும். மேலும் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை மோசடி செய்ததற்கு ரூ.25 கோடி அபராதம் விதிக்கப்படும்.

ராஜுவின் மோசடிகளால் சத்யம் முதலீட்டாளர்கள் இழந்துள்ள தொகை அளவு ரூ.10,000 கோடி என்பது நினைவு கூறத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X