For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜீவ் சிலைக்கு செருப்பு மாலை: அநாகரிகம்-கருணாநிதி

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த தலைவர்களின் சிலைகளை மாசுபடுத்த வேண்டாம். மாற்றுக் கட்சியினரையும் மதித்திடுவோம். ''வில்லம்பு பட்ட புண் உள் ஆறும், ஆறாதே சொல் அம்பு பட்ட புண்'' என்பதை மறவாமல் விரோதிகளிடமும் பண்பு காட்டிடுவோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

என் இளமைக் காலந்தொட்டு இன்று வரையிலான பகுத்தறிவு மற்றும் சுயமரியாதை இயக்கம் சார்ந்த அரசியல் பொதுவாழ்வில்; சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள எந்தவொரு சமூகத்தையும்- பிரிவையும் கேலி கிண்டல் செய்தோ- தாக்கிப் பேசியோ எழுதியோ; நாகரீகக் குறைவாக நடந்து கொண்டதில்லை.

அதனால்தான் சிலப்பதிகாரத்தை 'பூம்புகார்' திரைக்காவியமாக நான் எழுதியபோது, அண்ணா, மு.வ., சிலம்புச் செல்வர் ஆகியோர் பாராட்டும் அளவிற்கு- பொற்கொல்லர் மீதிருந்த பழியைத் துடைக்கும் வகையில் திரைக்கதையை மாற்றியமைத்தேன்.

அதுபோலவே, என்னைப் பொறுத்தவரையில் நான் தாக்கப்பட்ட போதும்- கேலி செய்யப்பட்ட போதும்- குற்றம் சுமத்தி எரிச்சலூட்டப்பட்ட போதும்; பதிலுக்கு பதில் என்று பண்பற்ற முறையில் பேசிப் பழகியதுமில்லை. 1957ம் ஆண்டு குளித்தலைத் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் நுழைந்தேன். அந்த மன்றத்தில் பொன்விழா கண்ட அளவுக்கு எதிர்க்கட்சியிலும், ஆளுங்கட்சியிலும், அமைச்சர் மற்றும் முதல்வர் பொறுப்பிலும் இருந்திருக்கிறேன். இருந்தும் வருகிறேன்.

அந்த கால கட்டத்தில் ஒரு நாள் 11.7.1957 அன்று எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களின் மேஜைகளில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள சமூகங்களின் பெயர்கள் அச்சியற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. அதை எடுத்து நான் படித்துப் பார்த்த போது மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் 'இசை வேளாளர்' என்று இருந்தது.

அதைத் தொடர்ந்து அன்று நடைபெற்ற அவை நடவடிக்கையின் ஒரு பகுதி வருமாறு:

மு.கருணாநிதி: இங்கே வைக்கப்பட்டுள்ள பட்டியலில் 'சாணான்' என்றும், 'வண்ணான்' என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் "ன்'' என்ற எழுத்தை மாற்றி "ர்'' என்ற எழுத்தை போட்டு பட்டியல் தயாரிக்க அரசாங்கம் முன் வருமா?

அமைச்சர் கக்கன்:- சபாநாயகர் அவர்களே! கனம் அங்கத்தினர் மு.கருணாநிதி சொன்னது மாதிரி மாற்றம் செய்ய வேண்டியதுதான் சரி...

அமைச்சர் சி.சுப்பிரமணியம்:- "ன்'' என்ற எழுத்தைப் போட்டிருப்பதினால் மரியாதை குறைந்து விடாது. சிலர் "டிரைவர்'' என்பதை "டிரைவன்'' என்று மரியாதை குறைவாக சொல்வதாக நினைத்து சொல்வதுண்டு. இது அப்படி அல்ல. அவர்களின் சாதிப்பெயரின்படி போடப்பட்டிருக்கிறது. இதனால் மரியாதைக் குறைவு ஒன்றுமில்லை.

மு.கருணாநிதி:- இந்த பட்டியலிலே மருத்துவர், இசை வேளாளர் என்றெல்லாம் மதிப்பு கொடுத்து உபயோகிக்கப்பட்டிருக்கிறது.

அமைச்சர் சி.சுப்பிரமணியம்:- அதில் மதிப்பு ஒன்றுமில்லை.

அமைச்சர் கக்கன்:- இப்பிரச்சினை குறித்து சென்னை அரசு பரிசீலனை செய்யும் என்று இதற்கு முன்னரே நான் தெரிவித்துள்ளேன்.

இவ்வாறு அமைச்சர் கக்கன் அன்று இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

சில நேரங்களில் திமுக உறுப்பினர்களோ அல்லது திமுக அமைச்சர்களோ கடுமையான அல்லது பிரச்சினைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்திப் பேசிவிட்டால் நானே சபாநாயகருக்கு வேண்டுகோள் விடுத்து அந்த பேச்சுக்குறிப்பை, சட்டமன்ற நடவடிக்கை குறிப்பில் இருந்து அகற்றிவிடுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறேன். இவையெல்லாம் ஒரு கட்சியிடம், இன்னொரு கட்சி கடைபிடிக்க வேண்டிய கண்ணியம், பண்பாடு, அரசியல் நாகரிகம் என்பனவாகும்.

ஒரு முறை எதிர்வரிசையில் இருந்த கற்றறிந்த நண்பர் எனக்கும் கூட நல்ல நண்பர், அவர் ஆத்திரப்பட்டு பேசும்போது முதல்வராக இருந்த என்னை நோக்கி; "உங்கள் ஆட்சி மூன்றாந்தர ஆட்சி'' என்று முஷ்டியை உயர்த்தி முரட்டுத்தனமான சொற்களை பயன்படுத்தி ஏசிட முற்பட்ட போது சட்டமன்றத்தில் கழக அமைச்சர்களும், உறுப்பினர்களும் கடுங்கோபம் கொண்டு எழுந்து விட்டனர்; அவரை மறுத்து பேசி...!

உடனே அவர்களை பார்த்து கையமர்த்தி உட்கார சொல்லிவிட்டு; "தேவையில்லாமல் ஏன் நீங்கள் ஆத்திரப்படுகிறீர்கள்? மூன்றாந்தர ஆட்சி என்று எதிர்வரிசை நண்பர் சொன்னதில் குற்றமில்லை. அவர் நமது ஆட்சியை பற்றி சரியாக சொல்லியிருக்க வேண்டுமெனில்; "நாலாந்தர ஆட்சி'' என்று சொல்லியிருக்க வேண்டும்- ஆம்; பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர எனப்படும் பிரிவுகளில் இது நாலாந்தர சூத்திரர்களுக்காக நடத்தப்படுகிற ஆட்சி என்றுதானே நண்பர் குறிப்பிடுகிறார்'' என நான் சொன்னதும் அந்த நண்பர் உள்பட மன்றமே மெளனமாயிற்று.

அன்றைக்கே திருச்சியில் இருந்த தந்தை பெரியாருக்கு இந்நிகழ்ச்சி இளவல் வீரமணி மூலம் கூறப்பட்டு; அவர் என்னைப் புகழ்ந்து பெருமை கொண்டார் என்று கேள்வியுற்று பெரு மகிழ்ச்சி அடைந்தேன்.

பண்பாடு பட்டொழி்நது விடும்...

எனவே, பொது வாழ்க்கையில் பதில்களோ; விளக்கங்களோ; அரசியல் அறிக்கைகளோ- சூடாக மட்டும் இருந்து சுவையற்று போய் விடுமேயானால்; பண்பாடும் பட்டொழிந்து போய்விடும் என்பதில் எச்சரிக்கை தேவை என்பதற்காகவே என்னைப்பற்றிய பழைய கதைகளை சொன்னேன்.

அறிஞர் அண்ணா பேசிய ஒரு கடற்கரை கூட்டத்தில் காலஞ்சென்ற நமது நண்பர் என்.வி.நடராசன் பேசும்போது; காங்கிரஸ் சொற்பொழிவாளர் ஒருவரின் பேச்சுக்கு பதில் சொல்வதாக கூறி; "இனிமேல் காங்கிரஸ் மந்திரிகள் வந்தால் கல் வீசுவோம்'' என்று கர்ச்சனை செய்துவிட்டார். உடனே மேடையில் இருந்த அண்ணா சட்டென எழுந்து; ஒலி பெருக்கியை பிடித்துக் கொண்டு என்ன சொன்னார் தெரியுமா?

"நடராசன் இப்போது பேசிய கல் வீசுவோம் என்ற வார்த்தைகளுக்காக முதலில் மன்னிப்பு கேட்டுக் கொண்டு பிறகு பேசலாம்'' என்று கட்டளையே இட்டார். என்.வி.நடராசன் அந்த கூட்டத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டுதான் பேச முடிந்தது.

இப்படி பண்பாடும், அரசியல் நாகரிகமும் கற்றுத் தந்த ஆசானாம் அண்ணாவிடம் பயின்ற ஒருவனின் வேண்டுகோளாக;

நமது கட்சியை சேர்ந்தோர் உள்ளிட்ட எல்லாக்கட்சியினருக்கும்- நான் பணிந்து சமர்ப்பிப்பது;

"மாற்றுக் கட்சியினரையும் மதித்திடுவோம்''
"மறைந்த தலைவர்களின் சிலைகளை மாசுபடுத்த மாட்டோம்''
"வில்லம்பு பட்ட புண் உள் ஆறும்;
ஆறாதே சொல் அம்பு பட்ட புண்
என்பதை மறவாமல்-
விரோதிகளிடமும்;
பண்பு காட்டிடுவோம்''
தவறுகளை நாமும் திருத்திக்கொள்வோம்-
தவறு செய்பவர்களையும்; திருத்தத் தயங்காமல் முற்படுவோம்!
இனியொரு தவறு செய்து இழிநிலை கொள்ள மாட்டோம்
என இன்றே சபதம் ஏற்போம்.

புதுச்சேரியில் இளம் தலைவர் ராஜீவ் காந்தியின் சிலை மாசுபடுத்தப்பட்ட அநாகரிக செயலைக் கண்டும், கேட்டும் இதை எழுத நேரிட்டது என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X