For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக பந்த்: பரவலாக ஆதரவு பஸ்கள் உடைப்பு - பலர் கைது

By Sridhar L
Google Oneindia Tamil News

Deserted road in Erode
சென்னை: இலங்கைத் தமிழர் இனப்படுகொலையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று நடந பந்த்துக்கு பெரும்பாலான பகுதிகளில் ஆதரவு கிடைத்தது. மாநிலம் முழுவதும் 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. 50க்கும் மேற்பட்ட பஸ்கள் சேதப்படுத்தப்பட்டன. 1000 பேர் வரை கைது செய்யப்பட்டனர். பஸ், ரயில் போக்குவரத்தில் பாதிப்பு அவ்வளவாக இல்லை.

இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம், இன்றை பந்த்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்த பந்த்தை தடை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது. ஆனால் இந்த பந்த் சட்டவிரோதம் இல்லை, தடை செய்ய முடியாது என நேற்று மாலை உச்சநீதிமன்றம் அறிவித்தது.

இதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி இன்று காலை 6 மணிக்கு பந்த் தொடங்கியது.

பந்த்தில் பங்கேற்பதாக ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம், சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து கோர்ட்களின் பல்வேறு வக்கீல்கள் சங்கம், டாக்டர்கள் சங்கம், மருத்துவ மாணவர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அறிவித்திருந்தனர்.

90 சதவீத கடைகள் அடைப்பு ...

இன்று காலை பந்த் தொடங்கியது முதல் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஏஐடியூசியின் கீழ் வரும் ஆட்டோக்கள் ஓடவில்லை. ஷேர் ஆட்டோக்களும் பெருமளவில் ஓடவில்லை.

இருப்பினும், பஸ், ரயில் போக்குவரத்தில் எந்தப் பாதிப்பும் இல்லை. பலத்த பாதுகாப்பு அவற்றுக்குத் தரப்பட்டது.

பந்த் போராட்டத்தையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

சென்னையில் ...

தலைநகர் சென்னையில் பந்த் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. நகர்ப் பகுதியில் பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன.

பஸ், ரயில், ஆட்டோ உள்ளிட்ட வாகனப் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.

ஆனால் புறநகர்ப் பகுதிகளில் கடைகள் பெருமளவில் அடைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக ஆவடி, அம்பத்தூர், தாம்பரம், குரோம்பேட்டை, பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் பெருமளவில் அடைக்கப்பட்டிருந்தன. பம்மல் பகுதியில் ஒரு பேருந்து தாக்கப்பட்டது.

அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகத்தை சிலர் கல்வீசித் தாக்கியதில் முன்பக்கம் உள்ள கண்ணாடிகள் உடைந்தன.

உயர்நீதிமன்றம் முன்பு திறந்திருந்த சைக்கிள் கடையை சிலர் கல்வீசித் தாக்கி சூறையாடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் விரைந்து வந்து தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்தனர்.

கோவையில் ...

கோவையில், கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. 25 ஆயிரம் குறுந்தொழில் கூடங்கள் அடைக்கப்பட்டன. 2 பேருந்துகள் கல்வீசித் தாக்கப்பட்டன.

பாப்பம்பட்டியில் இருந்து உக்கடத்துக்கு ஒரு அரசு டவுன் பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் திருச்சி ரோட்டில் உள்ள சுங்கம் பகுதியில் வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் பஸ் மீது சரமாரியாக கல் வீசி தாக்கினார்கள். இந்த சம்பவத்தில் அந்த பஸ்சின் டிரைவர் முருகசாமி (52) காயம் அடைந்தார். இதே போன்று மற்றொரு பஸ்சும் கல் வீசி தாக்கப்பட்டது.

திருப்பூரில் ...

திருப்பூரில் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். 5000க்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மூட்பட்டிருந்தன.

வேலூரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஞானசேகரனின் அலுவலகம் கல் வீசித் தாக்கப்பட்டது. இதையடுத்து காங்கிரஸார் சாலை மறியல் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கப் போகவில்லை.

கர்நாடக பேருந்து மீது தாக்குதல் ...

அவினாசி அருகே கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து கல்வீசித் தாக்கப்பட்டது.

வேலூரில் பெல் தொழிற்சாலை முன்பு தொழிலாளர்கள் கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காவிரி மாவட்டங்களில் ஆதரவு...

காவிரி டெல்டா மாவட்டங்களான நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பந்த் போராட்டத்துக்கு நல்ல ஆதரவு காணப்பட்டது.

இங்கு கிட்டத்தட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. ஆட்டோக்கள், டாக்சிகள், வேன்கள், லாரிகள் ஓடவில்லை. அரசு பஸ்களில் மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.

தர்மபுரியில் எல்.ஐ.சி அலுவலகம் மீது சிலர் கல்வீசித் தாக்கியதில் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்தன.

கடலூர் ஸ்தம்பிப்பு ...

கடலூர் மாவட்டத்திலும் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. அதிகாலையி்ல 3 அரசுப் பேருந்துகள் தாக்கப்பட்டன.

கள்ளக்குறிச்சியில் தனியார் பேருந்து ஒன்று தாக்கப்பட்டது. ஆட்டோக்கள், லாரிகள் ஓடவில்லை.

ஓசூரில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. ஆட்டோக்கள் பெருமளவில் ஓடவில்லை.

எம்.எல்.ஏ கைது ..

திருத்துறைப்பூண்டியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ உலகநாதன் உள்ளிட்ட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

பழனியில் ஒரு தனியார் பஸ் கல்வீசி உடைக்கப்பட்டது. 80 சதவீத கடைகள் அடைக் கப்பட்டு இருந்தன.

60 இடங்களில் மறியல்

திருவாரூர் மாவட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பஸ் மறியல், ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, பூந்தோட்டம், நன்னிலம், கொரடாச்சேரி, மாவூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் நடத்தினர். இதில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

நன்னிலம் பஸ் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. பத்மாவதி தலைமையில் 100 பேர் பஸ்மறியல் செய்ய முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர்.

இதேபோல் மன்னார்குடி கீழ்பாலம் அருகே இந்திய கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. சிவபுண்ணியம் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் இலங்கை அரசை கண்டித்து கோஷமிட்டு பஸ் மறியல் செய்தனர். அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை கைது செய்தனர்.

முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

செங்கோட்டை பஸ் உடைப்பு - 2 பேர் கைது

செங்கோட்டை - புளியரை இடையிலான அரசுப் பேருந்தை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இன்று காலை இந்தப் பேருந்து இரவிய தர்மபுரம் என்ற இடத்தில் போய்க் கொண்டிருந்தபோது அங்கு வ்நத கோபிராஜ், சுடர் மதியழகன், முருகன் ஆகியோர் பஸ்சை நிறுத்தி தாக்கினர். இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்தது. அதையடுத்து 3 பேரும் தப்பி ஓடினர்.

இதையடுத்து பஸ் டிரைவர் ரங்கசாமியும், கண்டக்டர் ஆதினமும், அவர்களை விரட்டிச் சென்றனர். இதில் சுடர் மதியழகன் பிடிபட்டார். அவர் செங்கோட்டை ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொத்தடிமை ஒழிப்புப் பிரிவு செயலாளர் ஆவார். பின்னர் முருகனையும் போலீஸார் கைது செய்தனர். கோபிராஜ் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.

சம்பவ இடத்தை நெல்லை சரக டிஐஜி கண்ணப்பன், எஸ்.பி. கார்க் ஆகியோர் பார்வையிட்டனர்.

அகதி முகாமில் கருப்புக் கொடி..

பாவூர் சத்திரம் இலங்கை அகதிகள் முகாமில் இன்று பந்த் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கருப்பு பேனர் கட்டியுள்ளனர்.

கரூரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கரூரில் பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருந்தது.

மாவட்டத்தில் இன்று பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. பஸ்கள் மிக குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட்டது. அதில் பயணிகள் மிக குறைந்த அளவிலேயே பயணம் செய்தனர்.

ஆட்டோக்கள் ஓடவில்லை. இதனால் பள்ளி மாணவ மாணவியர்கள் குறித்த நேரத்துக்குள் பள்ளி, கல்லூரி செல்ல சிரமப்பட்டனர்.

மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பஸ் நிலையம், லைட்வுஸ் கார்னர், சர்ச் கார்னர், வெங்கமேடு, போன்ற பகுதிகளில் முழு கடையடைப்பு நடத்தப்பட்டது.

மேலும், அரவாக்குறிச்சி, பள்ளபட்டி, குளித்தலை, வேலாயுதம் பாளையம் போன்ற பகுதிகளிலும் முழு கடையடைப்பு நடந்தது.

இதனால் மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு

இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து அம்பை அட்வகேட் அசோஷியன், பார் ஆசோஷியன் சார்பில் அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அம்பை பார் அசோஷியன் தலைவர் ராமநாதன், அட்வகேட் அசோஷியன் தலைவர் ஜோயல்ஹென்றி ஆகியோர் தலைமை வகித்தனர்.

அட்வகேட் அசோஷியன் செயலாளர் சீனிவாசன், பார் அசோஷியன் செயலாளர் பிரதாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது வக்கீல்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உருவ பொம்மையை எடுத்து எரித்தனர்.

இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோஸ் மற்றும் போலீசார் தீயை அணைத்து உருவ பொம்மையை எடுத்து சென்றனர்.

கடையடைப்பு-கருப்பு கொடி

தென்காசி அருகேயுள்ள பாவூர்சத்திரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு தங்களது எதிர்ப்பினை வாணிகர்கள் தெரிவித்தனர். மேலும் கடைகள் அடைக்கப்பட்டதால் தினமும் பல கோடி வாணிகம் நடக்கும் மாவட்டத்தின் முக்கிய பகுதியான இவ்வூரில் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் போதிய அளவு பேருந்து இயக்கப்பட்டாலும் தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை இருந்து சென்ற பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைந்த அளவே இருந்தது.

250 வீடுகளில் கருப்புக் கொடி ..

கும்பகோணம் அருகே சுவாமி மலையை அடுத்துள்ள நாககுடி, மருத்துவக்குடி, கள்ளிக்குடி ஆகிய 3 கிராமங்களில் உள்ள வீடுகளில் இன்று கருப்புக் கொடி ஏற்றப்பட்டது. இதில் சுமார் 250-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டு இருந்தது.

தமிழகம் முழுவதும் பந்த் போராட்டத்திற்கு கணிசமான அளவில் ஆதரவு காணப்பட்டது.

வாகனப் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்படவில்லை என்ற போதிலும் கடைகள் முக்கால்வாசி அடைக்கப்பட்டிருந்தன.

தமிழகத்தின் அனைத்து மாவட்ட போலீசாரும் உஷார்படுத்தப்பட்டு இருந்தனர். அசம்பாவித சம்பவங்கள் நடக்கக் கூடிய இடங்களில் அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

திறந்து இருக்கும் கடைகளை மூடச் சொல்கிறவர்கள், அலுவலகங்களுக்குச் செல்கிறவர்கள் தடை செய்கிறவர்களை உடனடியாக கைது செய்ய போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

மத்திய அரசு அலுவலகங்கள், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் அலுவலகங்கள் ஆகியவற்றுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.

அமைதியான பந்த் - டிஜிபி

தமிழகத்தில் இன்று நடந்த பந்த் அமைதியான முறையில் முடிந்ததாக டிஜிபி கே.பி.ஜெயின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எந்தவித அசம்பாவிதமும் இன்றி பந்த் முடிந்தது. பஸ்கள், ரயில்கள் போக்குவரத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. அரசு அலுவலங்கள், தனியார் அலுவலகங்கள் வழக்கம் போல இயங்கின என்று அவர் தெரிவித்தார்.

கட்சித் தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்..

முன்னதாக பந்த் நடத்துவது சட்டவிரோதமானது என்று கட்சித் தலைவர்களுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி கடிதம் எழுதியிருந்தார்.

அதில், பிப்ரவரி 4-ம் தேதியன்று இலங்கை தமிழர் பாதுகாப்புக்காக தமிழ்நாட்டில் முழு அடைப்பு போராட்டம் நடத்த தங்கள் கட்சியின் பெயரால் அழைப்பு விடுத்திருக்கிறீர்கள். எந்த நோக்கத்திற்காக முழு அடைப்பு அறிவிக்கப்பட்டாலும், அதை நடத்தக்கூடாது என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

அது தொடர்பாக இப்போதும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீதே சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை அறிவீர்கள். இந்த விவரங்களை சுட்டிக்காட்டி தமிழக அரசு அறிக்கை மூலம் தெரிவித்திருக்கிறது.

இப்போது நீங்கள் நடத்துவதாக அழைப்பு விடுத்திருக்கும் முழு அடைப்பு என்பதன் நோக்கம் நல்ல நோக்கத்தை முன்னிட்டு என்று இருந்தாலும், சுப்ரீம் கோர்ட்டு முழு அடைப்பு நடத்துவதையே சட்ட மீறல் என்ற பொருளில் தடுத்து நிறுத்தியிருப்பதாலும், அந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் முடியாதிருக்கும் நிலையில், நீங்கள் அறிவித்துள்ள 4-ந் தேதி முழு அடைப்பு சட்ட விரோதமானது என்று எச்சரிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X