For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒன்றுபட்டு நடத்தக் கூடிய போராட்டத்தை கருணாநிதியே சொல்ல வேண்டும் - ராமதாஸ்

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: அனைவரும் ஒன்றுபட்டுப் போராடுவோம் என முதல்வர் கருணாநிதி கூறுகிறார். அப்படியானால் அனைவரும் ஒன்றுபட்டு போராடக் கூடிய வகையிலான போராட்டத்தை அவரே சொல்ல வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கை தமிழர் பிரச்சினையில் தி.மு.க. அரசின் அணுகுமுறையை விமர்சித்து பேசி வருபவர்களுக்கு இனி யாரும் பதில் சொல்ல வேண்டாம் என்று முதல்வர் அறிவுறுத்தியிருக்கிறார் என செய்தி வெளிவந்த அதே நாளில், அவரது கட்சியைச் சேர்ந்த சிலர் என்மீது வசைமாரி பொழிந்து அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறார்கள். பொதுக்கூட்டங்களிலும் பேசியிருக்கிறார்கள்.

குழப்பத்தில் இருக்கிறார் ...

சட்டப்பேரவையில் மூன்று முறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டபோதும், பின்னர் அது தொடர்பாக பொதுக் கூட்டங்களில் பங்கேற்று பேசியபோதும், முதல்-அமைச்சர் எப்படியெல்லாம் ஆவேசமாக பேசியிருக்கிறார் என்பதையும் பின்னர், இம்மாதம் 3-ந் தேதி அவரது முன்னிலையில் நடைபெற்ற தி.மு.க. செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தையும் படித்துப் பார்த்தால், அரசியலில் ஆத்திச்சூடி படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு கூட முதல்-அமைச்சர் இலங்கை தமிழர் பிரச்சினையில் குறிப்பாக, போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்ற நமது கோரிக்கையில் அவர் உறுதியாக இல்லை என்பதையும், குழப்பத்தில் இருக்கிறார் என்பதையும் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

இலங்கை தமிழர்களுக்கு வாழ்வுரிமையைப் பெற்றுத் தரவும், அங்கு அமைதி நிலைமை தோன்றவும், ஜனநாயக முறையில் ஒரு தீர்வு காணவும், தமிழக மக்கள் எழுப்பும் கோரிக்கைகளை, இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் உணர்த்திடும் வகையில் பட்டி, தொட்டி எங்கும் விளக்கக் கூட்டங்கள் நடத்துவது என்று செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்பு, மேற்கொண்ட முடிவைத் தான் இப்போதும் மேற்கொண்டிருக்கிறார்கள்.

இதைச் சுட்டிக்காட்டினால், திரிபுவாதம் செய்கிறார், திசை திருப்புகிறார் என்றெல்லாம் என் மீது பழிபோடுகிறார்கள்.

இலங்கை தமிழர் பிரச்சினையில், தி.மு.க. அரசு பதவி விலக வேண்டும் என்பது போன்ற தீவிரமான போராட்டப் பாதையை நான் எப்போதும் முன்வைத்ததில்லை. ஆனால், முதல்-அமைச்சர் தான் தீவிர போராட்டம் பற்றியெல்லாம் பேசியிருக்கிறார்.

கடந்த ஆண்டு அக்டோபரில் மயிலை மாங்கொல்லையில் நடைபெற்ற இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பான விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்-அமைச்சர் இந்த பிரச்சினையில் நம்முடைய எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை தருமேயானால், போராட்டம் பற்றி ஆலோசிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம் என்று எச்சரித்திருக்கிறார்.

இருப்பது ஓர் உயிர்; அது போகப்போவதும் ஒரு முறை; அது ஒரு நல்ல காரியத்திற்காகப் போகட்டுமே என்பது கேட்டு கேட்டு பழக்கமான மொழியாக மாத்திரம் இருக்காமல், செயல்பட்ட மொழியாகவும் ஆகிற ஒரு நிலைமையை உருவாக்கிவிடக் கூடாது என்ற அளவில் எச்சரித்திருக்கிறார்.

என்ன ஆயிற்று எச்சரிப்பு?

அந்த எச்சரிப்பு என்ன ஆயிற்று? தி.மு.க. அரசு பதவி விலக வேண்டும் என்று நான் சொன்னது போல கற்பனை செய்து கொண்டு திண்ணை காலியாகாது என்றும், அண்ணன் காலி செய்ய மாட்டான் என்றும் பேசி பிரச்சினையை திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

முதலில் நீங்கள் பதவி விலகி மற்றவர்களுக்கு வழிகாட்டுங்கள் என்று விதண்டா வாதம் செய்கிறார்கள். வாதத்திற்காக இதை நாங்கள் ஏற்றுக் கொண்டு எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகினால், அதனால் என்ன நேர்ந்துவிடப் போகிறது.?

1983-ம் ஆண்டில், இதே பிரச்சினைக்காக கலைஞர் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தது தி.மு.க.வின் தியாகங்களில் முதன்மையானது என்று இன்றும் பெருமையாக சுட்டிக்காட்டப்படுகிறது. அன்று, கலைஞர் மட்டும் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததால், ஏற்பட்ட விளைவு என்ன? இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டுவிட்டதா? இல்லையே? எல்லோரும் ஒன்றுபட்டு முடிவெடுத்து செயல்பட்டால் நாம் எதிர்பார்க்கிற விளைவுகள் ஏற்படும்.

என்ன போராட்டத்தை அறிவிக்கப் போகிறார்?

ஒன்றுபட்டால் தான் தமிழினம் காக்கப்படும் என்று சொல்லுகிற முதல்-அமைச்சர், அந்த உணர்வு உண்மை என்றால் ஒன்றுபட்டு எத்தகைய போராட்டப் பாதையை அல்லது எத்தகைய முடிவை அறிவிக்கப்போகிறார் என்பதை தெரிவிக்க வேண்டாமா?

இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட இந்த முடிவை மேற்கொள்ளப்போகிறேன். இதில் எல்லோரும் ஒன்றுபடுவோம் என்று இன்றைக்கே முதல்-அமைச்சர் அறிவித்தால், நாளைக்கே நாங்களும் தம்பி திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் அமைப்பும் அந்த முடிவுக்கு பின்னால் அணிவகுத்து நிற்க தயாராக இருக்கிறோம்.

குழாயடி கூச்சல்கள், இலங்கை தமிழர்களின் நலனை காக்க உதவாது. இதை மனதில் நிறுத்தி அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவதற்கான வழிமுறைகளை அறிவித்து செயல்பட முதல்வர் முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X