For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மும்பை தாக்குதல்: குற்றப் பத்திரிக்கை தாக்கல்

By Sridhar L
Google Oneindia Tamil News

Kasav
மும்பை: மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக இன்று சுமார் 10,000 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகை மும்பை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. ஆங்கிலம், மராத்தி மற்றும் உருது மொழிகளில் குற்றப் பத்திரிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய வெறித்தாக்குதல் உலகையே குலுக்கியது. இதில் அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதி மட்டும் போலீசாரால் கைது செய்யப்பட்டான். மற்றவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அவனிடம் மேற்கொண்ட விசாரணையில் சதி திட்டம் பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்டது என்பது தெளிவாக தெரிந்தது. இந்த சதி செயலுக்கு முக்கிய காரணமான ஜகி உர் ரஹ்மான் உள்ளிட்ட 20 பேரை ஒப்படைக்குமாறு இந்திய அரசு, பாகிஸ்தானை வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் சுமார் 10,000 பக்கங்களை கொண்ட குற்றப் பத்திரிகை கொய்லாவில் உள்ள மும்பை மெட்ரோபாலிடன் கோர்ட்டில் இன்று மாலை தாக்கல் செய்யப்பட்டது.

அரசு சிறப்பு வழக்கறிஞர் உஜ்வால் நிகாம் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தார்.

குற்றப் பத்திரிக்கையில் உயிருடன் பிடிபட்ட தீவிரவாதி கஸாப் தவிர மேலும் 19 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

குற்றப் பத்திரிக்கை தாக்கலின்போது இந்தியாவில் வேறு குற்றங்களுக்காக பிடிபட்ட, ஆனால் மும்பை சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதிகள் பாஹிம் அன்சாரி, சபாபுதீன் அகமது ஆகியோர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுவதைத் தொடர்ந்து கோர்ட் வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

நாட்டின் மீது போர் தொடுத்தது, கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் கஸாப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழும் கஸாப் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த யூசுப் முஸ்ஸமில், ஜரார் ஷா, ஜாகிர் ரஹ்மான் லக்வி ஆகியோரின் பெயர்கள் குற்றப் பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ளன.

பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் நிர்வாகிகளுடன் கஸாப் பேசியது தொடர்பான ஆதாரங்கள், விசாரணையின்போது அளித்த வாக்குமூலங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்கள் ஆகியவையும் குற்றப் பத்திரிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளன.

குற்றப் பத்திரிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் விவரம்..

கஸாபின் ஒப்புதல் வாக்குமூலம், 110 சாட்சிகள் அளித்த வாக்குமூலங்கள், தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மீன்பிடி படகின் உரிமையாளர், ஸ்கோடா கார் உரிமையாளர் அளித்த வாக்குமூலங்கள், காவல்துறை அதிகாரிகள், தடவியல் நிபுணர்கள், பத்திரிக்கையாளர்கள் அளித்த வாக்குமூலங்கள்,

தாக்குதல் நடந்த இடங்களில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி படங்கள், தீவிரவாத்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு உள்ள தொடர்புகள், தீவிரவாதிகளுக்கும், பாகிஸ்தானிலிருந்தபடி அவர்களை இயக்கியவர்களுக்கும் இடையிலான தொலைபேசிப் பேச்சுக்கள், தீவிரவாதிகள் பாகிஸ்தானிலிருந்து வந்தது தொடர்பான ஜிபிஎஸ் டேட்டா தகவல்கள், வாய்ப் எண்களின் விவரங்கள்,

தீவிரவாதிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பாகிஸ்தான் தயாரிப்பு ஆயுதங்கள், தடயவியல் ஆவணங்கள், கஸாப் மற்றும் கூட்டாளிகளின் டிஎன்ஏ மாதிரிகள், குண்டுவெடிப்பு இடங்களில் கிடைத்த சிதிலங்கள்.

தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்கள்...

கஸாப், லஷ்கர் அமைப்பின் பாஹிம் அன்சாரி, சபாபுதீன் அகமது, சுட்டுக் கொல்லப்பட்ட 9 தீவிரவாதிகள், ஜாகிர் உர் ரஹ்மான் லக்வி, அபு ஹம்சா உள்ளிட்ட 7 பாகிஸ்தானியர்கள்.

டிக்கெட் எடுக்காததற்காக ஒரு வழக்கு..

இதற்கிடையே கஸாப் மீது புதிதாக இன்னொரு வழக்கும் பதிவாகியுள்ளது. சத்ரபதி சிவாஜி ரயில்வே நிலையத்திற்குள் டிக்கெட் எடுக்காமல் புகுந்ததாக அந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது கஸாப் மீது 12க்கும் அதிகமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வழக்கை விரைந்து விசாரிக்க மகாராஷ்டிர அரசு சிறப்பு நீதிமன்றம் ஒன்றை அமைக்கிறது. இந்த சிறப்பு நீதிமன்றம், பாதுகாப்பு கருதி, ஆர்தர் சாலை சிறை வளாகத்திற்குள் அமைகிறது.

கஸாப் மீது இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இணையதள குற்றத் தடுப்புச் சட்டம் (சைபர் கிரைம் சட்டம்)ஆகியவற்றின் கீழ் விசாரணை நடைபெறும் எனத் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X