For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரணாப் முகர்ஜியின் பேச்சு ஆறுதல் பூங்காற்றாய் வீசுகிறது - கருணாநிதி

By Sridhar L
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: விடுதலைப் புலிகளின் போர் நிறுத்தத்தை ஏற்று, இலங்கை அரசும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசியிருப்பது நெஞ்சத்து அனலைத் தணித்து ஆறுதல் பூங்காற்றாய் வீச செய்திருக்கிறது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

தூத்துக்குடி அனல் மின் நிலைய அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட இந்திய வெளியுறவு துறை அமைச்சரும், என் நீண்ட கால நண்பருமான பிரணாப் முகர்ஜி, அந்த விழா மேடையிலேயே - என் உடல் நிலை விரைவில் குணமாகி நலம் பெற வேண்டுமென்று வாழ்த்துரைத்துள்ளார். அது கேட்டு எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை விட இரட்டிப்பான மகிழ்ச்சி எது தெரியுமா?

இதோ! அவர் உரையில் குறிப்பிட்டுள்ள இந்த செய்தி தான்! அது என்ன அவ்வளவு முக்கியமான செய்தி?

தூத்துக்குடி விழாவில் பிரணாப்முகர்ஜி பேசியது வருமாறு-

"விடுதலைப்புலிகள் போர் நிறுத்தத்துக்கு முன்வந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்து மக்களை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டுவர வேண்டும். இதற்கு விடுதலைப்புலிகளின் ஒத்துழைப்பும் தேவை. தமிழ் மக்களை போர் நடைபெறும் இடத்தில் இருந்து பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்ல விடுதலைப்புலிகள் உதவ வேண்டும். தொண்டு நிறுவனங்கள் செஞ்சிலுவை சங்கம் ஆகிய அமைப்புகள் அவர்களுக்கு மருத்துவ வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையின் வடக்குப்பகுதியில் இடம் பெயர்ந்து உள்ள மக்களுக்கு மருத்துவ உதவிகளை செய்வதற்காக இந்திய அரசு மருத்துவகுழு மற்றும் மருந்துகளை அனுப்பவும் ஏற்பாடு செய்து வருகிறது. அடுத்து அரசியல் தீர்வாக இலங்கையில் அனைத்து மாகாணங்களுக்கும் அதிகாரங்களை பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மக்களுக்கும் சம உரிமை கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அந்த அதிகார பகிர்வு இருக்க வேண்டும். குறிப்பாக தமிழ் மக்களுக்கு இலங்கையின் சட்டத்துக்கு உட்பட்டு இறையாண்மை பாதிக்காத அளவில் அதிகாரபகிர்வு இருக்க வேண்டும்.

இலங்கையில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காக இந்தியாவின் இந்த பொறுப்பான வேண்டுகோளை இலங்கை அரசும், மற்றவர்களும் ஏற்று கொள்வார்கள் என்று நம்புகிறேன்''.

பிரணாப் இப்படி பேசியது மட்டுமல்ல; டெல்லியிலிருந்து அறிக்கையாகவும் இதை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிவிப்பில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வழிகாட்டும் தலைவர் சோனியா காந்தி கருத்தும்- இந்திய பிரதமர் மன்மோகன்சிங் கருத்தும் கலந்திருக்கின்றன என்பதை நான் சொல்லவும் வேண்டுமா?

இலங்கை தமிழர்களை வாழ வைப்பதற்கும்- அவர்களின் உரிமைகளை இலங்கையில் நிலைநாட்டுவதற்கும்- தமிழகத்தில் அனைத்து கட்சிகள் சார்பிலும்- அரசு சார்பிலும் எடுத்த முயற்சிகளுக்கும்- எரியுண்டு மாண்ட இனமான ஏந்தல்களின் தியாகத்துக்கும்- தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும்- நேரில் சந்தித்து தமிழகத் தலைவர்கள் வலியுறுத்திய முறையீட்டுக்கும்- பலன் கிடைத்தது என்பது போல;

இந்திய அரசின் "போர் நிறுத்த'' வலியுறுத்தல், எனக்கு மருத்துவ சிகிச்சை வெற்றியை போன்ற மன ஆறுதலை அளிக்கிறது. மத்திய அரசுடன், தீர்மானங்கள் மூலமாகவும்- சந்திப்புகள் மூலமாகவும்- மகஜர்கள் மூலமாகவும்- நேரடியாகவும்-ஒல்லும் வகையெல்லாம் தொடர்பு கொண்டு செய்த முயற்சிகளினால் இன்று;

அனல் மின் நிலைய விழா- பிரணாப் பேச்சு- அவரது அறிக்கை- இவை அனைத்தும் நம் நெஞ்சத்து அனலை தணித்து ஆறுதல் பூங்காற்றாய் வீச செய்திருக்கிறது. ஆனால், இந்த நேரத்தில் தான் இலங்கை தமிழர் பிரச்சினையை மாசாக்கி- மண்ணாக்கி-காசாக்கி- அரசியலில் நாணயத்தை தூசாக்கி வாழும் சில வக்கிற மூளையினர்;

தாங்கள் வகித்த பொறுப்புகளுக்கு தகுதியற்றோர் என்று காட்டிக்கொள்ள பிரணாப் வருகையை எதிர்த்து- மறியல் ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு- நாகரிக கேடாக நடந்து கொண்டு பிரணாப்முகர்ஜியின் படங்களுக்கும் தீயிட்டு பார்த்து திருப்தி அடைந்திருக்கின்றனர்.

அம்மா ஜெயாவின் சீடர்கள்..

யார் அவர்கள்- சிங்களத் தலைமையாளர், ராஜபக்சே தமிழர்கள் மீது நடத்தும் படுகொலைக்கு நியாய வாதம் எடுத்துரைத்த ஜெயலலிதாவின் பாதார விந்தங்களே; தமக்கு ஆதார அடி பீடங்கள் என அர்ச்சித்து கொண்டிருப்பவர்கள்; அந்த அம்மா ஜெயாவின் அத்யந்த சீடர்கள். இலங்கை பகைவர்களை விட்டுவிட்டு; இந்திய தலைவர்களின் படங்களுக்கு தீயிட்டு கொளுத்துகிறார்கள் என்றால்; தேசப் பாதுகாப்புக்கான சட்ட ரீதியான நடவடிக்கைகள் வேடிக்கை பார்த்து கொண்டிருக்குமா? முடியாது, முடியாது, முடியவே முடியாது!

இலங்கை தமிழர்களுக்கு அதிகாரமும்- அங்கே அமைதியும் கிடைத்து அவர்கள் வாழ்ந்திட நாம் தமிழ் உணர்வோடு பணி புரிகிறோம்- அதில் கிடைக்கும் வெற்றிக்காக காத்து நிற்கிறோம்- மத்திய அரசுடன் இணைந்து இலங்கையில் போர்நிறுத்தம் இப்போதே கேட்கிறோம்-ஆம்;

இந்த உலகில் பெரிய தேசமாம்-இந்திய நாடு கேட்கிறது- பிரணாப் முகர்ஜி கேட்டுள்ளார்- இந்திய அரசு கேட்கிறது-நாமும் கேட்கிறோம்; "போரை நிறுத்து போரை நிறுத்து'' என்று! மத்திய அரசிடம் இருந்து புறப்பட்டுள்ளது அந்த வாசகம்- அதுவும் மார்ச் முதல் நாள்-மருத்துவமனையில் இருந்து நான் மட்டுமல்ல, என் பழைய நண்பர் வாஜ்பாயும் நலம் பெற்று வெளிவரும் நாள்.

சென்னையில் மு.க.ஸ்டாலின், இளைஞர் அணியின் சார்பில் உருவாக்கிய அன்பகம் எனும் அழகு மாளிகையும் இந்த நாளில் திறக்கப்படுகிறது. நான் பொருளாளராக இருந்து, அண்ணா திறந்துவைத்த அந்த அன்பகம், இன்று புதுப்பிக்கப்பட்டு விரிவாக்கப்பட்டு பெரிய மாளிகையாக ஸ்டாலின் பொருளாளராக இருக்கின்ற நேரத்தில் திறக்கப்படுகிறது.

இந்நாளில்- அனைவரும் அகமும் பகையும் புகையும் அகன்று; அன்பகங்களாக மாறட்டும்! அந்த ஆசையுடன்; வலி நீங்கிய ஆறுதலுடன்- வருகிறேன் உடன்பிறப்புகளே! உமை வாரியணைத்து மகிழ்ந்திட வருகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X