For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூட்டணியில் இருக்கிறோமா? இல்லையா- திமுகவிடம் கேட்கிறார் திருமா

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: திமுக கூட்டணியில் நாங்கள் இருக்கிறோமா... இல்லையா? என்பதை அவர்கள் தான் அறிவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ் மாணவர் பேரவை மற்றும் தமிழ் இளைஞர் பேரவையின் துவக்க விழா நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நடிகர்கள் சத்யாரஜ், மன்சூர் அலிகான், இயக்குனர் தங்கர்பச்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தேர்தலில் நிற்க வேண்டாம்- தங்கர்பச்சன்:

இயக்குனர் தங்கர் பச்சான் பேசுகையில்,

மக்களிடையே தமிழ் உணர்வு தீ போல் பரவ வேண்டும். அதற்கு உளவாளிகள் போல் மாணவர்கள் செயல்பட வேண்டும். தேர்தல் அரசியலை விட்டு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வெளிவந்து, பெரியார் போல் தமிழினத்தை வழிநடத்த வேண்டும்.

கூட்டணிக்கு நிர்ப்பந்திக்கும் அரசியல் கட்சிகளிடம் இருந்து அவரை காப்பாற்ற வேண்டும். ஈழத் தமிழனைக் காப்பாற்றுவதற்கு, தேர்தலில் நிற்காத கட்சிகள்தான் எங்களுக்கு வேண்டும் என்றார் தங்கர்பச்சன்.

ஈழ ஆதரவாளர்கள் ஓரணியில் திரள வேண்டும்-திருமா:

அப்போது திருமாவளவன் பேசுகையில்,

தங்கர்பச்சான் சொல்வது போல் இந்த நிலையில் நான் அரசியலை விட்டுவிட்டால் தனிமைப்படுத்தப்பட்டு, ஓரம் கட்டப்பட்டுவிடுவேன். தொப்புளில் ஆம்லெட் போடும் தகுதியை கொண்டவர்களே இங்கு ஓட்டு வாங்கிவிடலாம் என்ற நிலை இருப்பதுதான் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது.

ராஜீவ்காந்தியின் மரணத்தை அடுத்துதான் விடுதலைப் புலிகளுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது என்பது தவறு. திரிகோணமலையில் அமெரிக்காவுக்கோ அல்லது ரஷ்யாவுக்கோ ராணுவ தளத்தை வைக்க இலங்கையை அனுமதித்துவிடக் கூடாது என்ற மத்திய அரசின் அச்சம்தான், அதற்கு தேவையான உதவிகளைச் செய்ய காரணமாக உள்ளது.

அதைச் சொல்ல முடியாமல், ராஜீவ்காந்தியின் படுகொலையை காரணம் காட்டி, தமிழர்களுக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தி, தமிழ் உணர்வில் இருந்து பின்வாங்க வைக்கின்றனர். ராஜீவ்காந்தி உயிரோடு இருந்திருந்தாலும் இந்த சண்டை நடக்கத்தான் செய்யும்.

இலங்கை அதிபர் ராஜபக்சே சொன்ன கருத்துக்களை அப்படியே திரும்பச் சொன்னவர்கள், இப்போது இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்து உள்ளனர்.

நான் மறைமலைநகரில் இருந்த உண்ணாவிரதம் நாடகம் என்று விமர்சித்தவர்கள், இதையும் நாடகம் என்று கூறுவார்களா? ஈழம், மொழி, தமிழ் தேசம் ஆகிய அம்சங்களை ஆதரிப்பவர்கள், தேர்தலில் ஓரணியில் இருக்க வேண்டும். தமிழ் ஈழம் மலரக் கூடாது என்று நினைப்பவர்களுக்கு 25 சதவீத ஓட்டு தான் உள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் திமுக கூட்டணியில் தான் இருக்கிறது. ஆனால் பா.ம.க.வை வெளியேற்றியதாக கூறியதுபோல், விடுதலைச் சிறுத்தைகள் அவர்கள் கூட்டணியில் இருக்கிறதா? இல்லையா? என்பது பற்றியும் கூறும் முடிவு திமுகவின் கையில்தான் இருக்கிறது என்றார் திருமாவளவன்.

சீமான்கள் உருவாவதை தடுக்கமுடியாது-சத்யராஜ்:

நடிகர் சத்யராஜ் பேசுகையில்,

மாணவர்கள் மூலம் அரசியல் நிர்ப்பந்தம் ஏற்பட்டால், எப்பேர்பட்ட பிரச்சினைக்குக்கூட தீர்வு ஏற்படும் என்பதை வரலாறு உணர்த்துகின்றது. எத்தனையோ போராட்டங்கள் நடத்தி, ஏமாந்திருக்கும் சூழ்நிலையில் ஈழத் தமிழர்களுக்காக மாணவர்கள் ஒன்று சேர்ந்திருப்பது, சிறிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் வந்து விட்டதால், இனி வீடுவீடாக வந்து அரசியல்வாதிகள் நடிப்பதை பார்க்கமுடியும். தமிழினம் பற்றிய உணர்வு உள்ளவன் எந்தக் கட்சியில் இருந்தாலும் வாக்களிப்போம். இயக்குனர் சீமானின் கைது நீட்டிக்கப்படும் வரை சீமான்கள் உருவாவதை தடுக்கமுடியாது. எனவேதான் மாணவர்கள் அனைவரும் இங்கு சீமானாக வந்திருக்கிறீர்கள் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X