For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இவையெல்லாம் ஜெவுக்கு பிடித்த வார்த்தைகள்!-ஆற்காடு

By Sridhar L
Google Oneindia Tamil News

Arcot Veerasamy
சென்னை: மூக்கறுந்து போன மூளி- அலங்காரி- நாக்கறுந்து தொங்குகின்ற நரி-நாலாந்தரப் பெண்-மகுடம் பறி கொடுத்த மாயராணி- செப்படி வித்தை மாமி- மலம்- வேஷக்காரி- தெருப்பொறுக்கி- நாய்க்கொழுப்பு- பூதகி- நாய்- திமிங்கலம் போன்ற வார்த்தைகளால் ஜெயலலிதாவை முதல்வர் கருணாநிதி விமர்சித்தே இல்லை. இவையெல்லாம் ஜெயலலிதாவே கூறிக்கொண்டுள்ள ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள் என்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஜெயலலிதா 14ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் மின்வெட்டு, விலைவாசி உயர்வு, வழக்கறிஞர்கள் போராட்டம் உள்ளிட்ட பிரச்சினைகள் பற்றி கேள்வி கேட்டதாகவும், அதற்கெல்லாம் முதல்வர் கருணாநிதி பதிலளிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

மின்வெட்டு பிரச்சினை குறித்து ஜெயலலிதா எழுதாத நாள் இல்லை. அமைச்சர் என்ற நிலையில் பலமுறை அதற்கெல்லாம் நான் விளக்கமளித்துவிட்டேன். அதையெல்லாம் படிக்காமல் பதில் அளிக்கவில்லை என்கிறார் ஜெயலலிதா. இதோ விளக்கமான பதில்:

ஜெயலலிதா அறிக்கையில் மின்சார உற்பத்தியை பெருக்க கழக அரசு எதுவும் செய்யவில்லை என்றும், மின்துறை அமைச்சர், முதல்வர் கருணாநிதிக்கு எடுபிடி வேலை செய்து கொண்டிருப்பதாகவும் தனக்கே உரிய 'அரசியல் நாகரீகத்தோடு' சொல்லியிருக்கிறார்.

1. திமுக 2006ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு தான் செய்யூரில் 4,000 மெகாவாட் சூப்பர் தெர்மல் ஸ்டேஷன், நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பஷேன் மூலம் அமைப்பதற்கு மின்துறை அமைச்சரான நான் முழு முயற்சி செய்து, இப்போது நில ஆர்ஜிதம் முடியும் தருவாயில் உள்ளது.

2. வட சென்னையில் 1,200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டி, பாரதமிகு மின் நிறுவனத்திடம் பணிகள் ஒப்படைக்கப்பட்டு, கட்டமைப்பு வேலைகள் நடந்து வருகின்றன. முதல் பிரிவு 600 மெகாவாட், 2010 அக்டோபரிலும், இரண்டாவது பிரிவு 2011ம் ஆண்டு மே திங்களில் மின் உற்பத்தியைத் தொடங்கும்.

3. மேட்டூரில் 600 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. 2011 மே திங்களில் அங்கு மின் உற்பத்தி தொடங்கும்.

4. நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் மூலம் 1,600 மெகாவாட் அளவில் மின் உற்பத்தி செய்ய பெரம்பலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் பகுதியில் மின்துறை முயற்சி எடுத்து அதிலும் நில ஆர்ஜிதம் முடியும் அளவில் உள்ளது.

5. தமிழ்நாடு மின்சார வாரியமும், என்.டி.பி.சி. நிறுவனமும் இணைந்து முதற்கட்டமாக 1,000 மெகாவாட் மின்சாரமும் இரண்டாவது கட்டமாக மேலும் 500 மெகாவாட் மின்சாரமும் தயாரிக்க என் தலைமையில் மத்திய மின்துறை அமைச்சர் ஷிண்டே அடிக்கல் நாட்டி, கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 2010ம் ஆண்டு அக்டோபரில் மின்உற்பத்தி துவங்கும்.

6. தமிழ்நாடு மின்சார வாரியமும், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனும் இணைந்து 1,000 மெகாவாட் மின்சார உற்பத்தியை தொடங்க தூத்துக்குடியில் என் தலைமையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அடிக்கல் நாட்டி கட்டமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. மார்ச் 2012ல் அங்கும் உற்பத்தி தொடங்கும்.

7. தமிழ்நாடு மின்சார வாரியமும், பி.எச்.இ.எல். நிறுவனமும் இணைந்து உடன்குடியில் 1,600 மெகா வாட் மின்உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் தலைமையில் தமிழக மின்துறை அமைச்சரான நான் அடிக்கல் நாட்டியிருக்கிறேன். மார்ச் 2013ல் மின் உற்பத்தி தொடங்கும்.

8. எண்ணூர் அனல் மின் நிலையத்தின் அருகே 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டு ஆக்கப்பணிகள் தொடங்கவுள்ளன.

9. நீலகிரி மாவட்டத்தில் குந்தா நீரேற்று புனல் மின்திட்டம் 500 மெகாவாட்- தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்வதற்காக நிறுவப்படவுள்ளது.

எனவே மின் உற்பத்தியைப் பெருக்க இந்த அரசு எதுவும் செய்யவில்லை என்ற ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு உண்மைக்கு மாறானது என்பதை இந்தப்புள்ளி விவரங்கள் நிரூபிக்கும்.

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இதுபோன்ற திட்டங்களைத் தொடங்கியிருப்பாரேயானால், தற்போது தமிழகத்தில் மின்வெட்டு வந்திருக்கவே வந்திருக்காது. எனவே இப்போதுள்ள மின்வெட்டுக்கு மூலக்காரணம் ஜெயலலிதா தான்.

ஜெயலலிதா தனது அறிக்கையில் நான் மின் உற்பத்திப் பணிகளைக் கவனிக்காமல், முதல்வர் கருணாநிதிக்கு எடுபிடி வேலை பார்த்துக் கொண்டிருப்பதாக சொல்லியிருக்கிறார்.

தனது 85 வயது வரை தமிழ், தமிழர், தமிழ்நாடு என்று 24 மணி நேரமும் உழைத்துக் கொண்டிருக்கும் ஒரு முதுபெரும் தலைவருக்கு ஜெயலலிதா கூறியிருப்பதைக் போல நான் எடுபிடி வேலை செய்து கொண்டிருக்கிறேன் என்றால், அதை நான் என் வாழ்வில் கிடைத்த பாக்கியமாகக் கருதுகிறேன்.

ஆனால் கலைஞரைப் பொறுத்தவரை அவரே தான் தன் வேலைகளை செய்து கொள்வாரே தவிர, தனக்கு யாரும் எடுபிடி வேலை பார்ப்பதை அவரே விரும்ப மாட்டார். நான் மின்துறை பணிகளை முறையாகச் செய்து வருகிறேன் என்பதற்கான பட்டியலை மேலே குறிப்பிட்டுள்ளேன்.

ஆனால், என்னை எடுபிடி என்று கூறியுள்ள ஜெயலலிதா இன்று யாருக்கு எடுபிடி வேலை செய்து கொண்டிருக்கிறார்? யாரோ ஒரு உடன் பிறவா சகோதரிக்கும், அவருடைய கும்பத்தினருக்கும் ஒவ்வொரு நாளும் எடுபிடி வேலை செய்து கொண்டிருக்கின்ற நிலையில்- கண்ணாடி வீட்டிலே இருந்து கொண்டு என் மீது கல்வீசிட முற்படலாமா?

தமிழ்நாடு மின்சார வாரியம் நஷ்டத்தைச் சந்தித்து வருவதாகவும் ஜெயலலிதா தனது அறிக்கையிலே கூறியிருக்கிறார். 2001 முதல் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணத்தை மூன்று முறை உயர்த்தியும் ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும் தமிழ்நாடு மின்சார வாரியம் நஷ்டத்தைத் தான் சந்தித்தது.

ஆனால் இந்த மூன்றாண்டு கால திமுக ஆட்சியில் ஒருமுறை கூட மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் மின்சார வாரியத்தில் தற்போது நஷ்டம் ஏற்படுகிறதே தவிர, ஜெயலலிதா ஆட்சியில் ஆண்டுக்கொரு முறை உயர்த்தியதைப் போல மின் கட்டணத்தை உயர்த்திருயிருந்தால் நஷ்டம் ஏற்பட்டிருக்காது.

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 2001-2002ல் ரூ.2,202 கோடி நஷ்டம், 2002-2003ல் ரூ.1,800 கோடி நஷ்டம், 2004-2005ல் ரூ.1,177 கோடி நஷ்டம், 2005- 2006ல் ரூ.1,329 கோடி நஷ்டம்.
அந்த நஷ்டங்கள் தான் இப்போது பெருகியுள்ளதே தவிர, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தான் நஷ்டம் வந்ததாகச் சொல்ல முடியாது.

அடுத்து வழக்கறிஞர்கள் போராட்டம் பற்றி ஜெயலலிதா கூறியிருக்கிறார். அந்தப் பிரச்சினை தற்போது நீதிமன்ற விசாரணையிலே உள்ளது. அதன் முடிவு தெரிந்த பிறகுதான் அரசாங்கம் எதுவும் செய்ய முடியும். கண்மூடித்தனமாக தாக்க காவல் துறையினருக்கு யார் உத்தரவிட்டது என்பது குறித்து இதுநாள் வரையிலும் அரசு சார்பில் பதிலளிக்கவில்லை என்றும் ஜெயலலிதா தன் அறிக்கையிலே கூறியுள்ளார்.

வழக்கறிஞர்கள் மீது இப்போது ஜெயலலிதாவிற்கு எவ்வளவு பாசம்? அவரது ஆட்சிக்காலத்தில் வழக்கறிஞர்கள் விஜயனும், சண்முகசுந்தரமும் தாக்கப்பட்டதையும், நீதியரசர் ஏ.ஆர். லெட்சுமணனின் மருமகன் மீது கஞ்சா வழக்கு போட்டதையும் தமிழ்நாட்டு வழக்கறிஞர்கள் மறந்தா போய் விட்டார்கள்?

காவல் துறையினருக்கு தாக்க உத்தரவிட்டது யார் என்று ஜெயலலிதா இன்று கேட்கும் கேள்வியை உச்ச நீதிமன்றம் கேட்ட போதே, தமிழகக் காவல்துறையின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுவிட்டது.
ஜெயலலிதாவிற்கு இதிலே மேலும் ஏதாவது விளக்கம் வேண்டுமேயானால், உச்ச நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணா கமிஷனின் இடைக்கால அறிக்கை ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனை வாங்கிப் படித்தால் நன்றாக விளக்கங்கள் கிடைக்கும்.

இந்தப் பிரச்சினையில் ஜெயலலிதாவிற்கு உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இருக்குமேயானால் அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் எல்லாம் உடனடியாக நீதிமன்றத்திற்கு பணிக்குத் திரும்ப வேண்டுமென்று அறிக்கை விடலாமே!.

முதல்வர் கருணாநிதி வசைமாரி பொழிகிறார் என்று ஜெயலலிதா குறை கூறிய காரணத்தால், அதற்கு விளக்கம் அளிக்க வேண்டி, ஜெயலலிதா எந்தெந்த தேதியில் எந்தெந்த வார்த்தைகளால் வசைமாரி பொழிந்தார் என்பதை முதல்வர் தேதிவாரியாக பட்டியலிட்டுக் காட்டி, யார் வசைமாரி பொழிகிறார்கள் என்பதை தமிழ்நாட்டு மக்களே புரிந்து கொள்ளட்டும் என்று எழுதியிருந்தார்.

அதற்குப் பிறகும் ஜெயலலிதா தன்னைத் திருத்திக் கொள்ளவோ, மாற்றிக் கொள்ளவோ முன்வராமல், முதல்வர் கருணாநிதி அறிக்கைகளிலே எழுதாத வார்த்தைகளையெல்லாம் அவர் எழுதியதாக பச்சைப் பொய்யைச் சொல்லியிருக்கிறார்.

மூக்கறுந்து போன மூளி- அலங்காரி-நாக்கறுந்து தொங்குகின்ற நரி-நாலாந்தரப் பெண்-மகுடம் பறி கொடுத்த மாயராணி- செப்படி வித்தை மாமி-மலம்- வேஷக்காரி-தெருப்பொறுக்கி-நாய்க்கொழுப்பு- பூதகி-நாய்-திமிங்கலம் என்ற வார்த்தைகளால் முதல்வர் கருணாநிதி, ஜெயலலிதாவை வசைமாரி பொழிந்ததாக ஜெயலலிதா தன் அறிக்கையிலே குறிப்பிட்டிருக்கிறார் என்றால், தமிழ்நாட்டு மக்களே, அன்றாடம் முதல்வரின் அறிக்கைகளைப் படித்து வரும் பத்திரிகையாளர்களே, முதல்வரின் அறிக்கைகளிலே அந்த அம்மையாரை இப்படிப்பட்ட வார்த்தைகளால் எப்போதாவது வர்ணித்திருக்கிறாரா என்பதை நீங்களே கூறுங்கள்.

ஜெயலலிதா எழுதியுள்ள அறிக்கையில் அவரைப்பற்றி முதல்வர் கூறாத ஆனால் ஜெயலலிதாவே கூறிக்கொண்டுள்ள ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள் எப்படிப்பட்டவை என்பதை நாமல்ல, நாடே அறியும்.

இவ்வாறு கூறியுள்ளார் வீராசாமி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X