For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கையில் முதலில் போர் நிறுத்தம் அவசியம் - சோனியா திடீர் கருத்து

By Sridhar L
Google Oneindia Tamil News

Sonia Gandhi
சென்னை: இலங்கையில் அப்பாவித் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும். அதற்கு முதல் கட்டமாக போர் நிறுத்தம் ஏற்படுவது அவசியம், பேச்சுவார்த்தை மூலமே பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திடீரென தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும், அப்பாவிகள் அழிவிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி சோனியா காந்திக்கு முதல்வர் கருணாநிதி சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார்.

இதற்கு சோனியா காந்தி பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில், காங்கிரஸ் கட்சிக்கும், தி.மு.க.வுக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாடு குறித்து தாங்கள் எழுதிய கருத்துகள், எண்ணங்கள் ஆகியவற்றை நான் பாராட்டுவதோடு, வரவிருக்கும் தேர்தலில் இந்த கூட்டணி நன்றாக செயல்படும் என்று தங்களைப் போலவே நானும் உறுதியாக நம்புகிறேன்.

இந்த கூட்டணியின் சிறந்த செயல்பாட்டுக்கான முயற்சிகளை தாங்களே நேரடியாக எடுத்து வருவதறிந்து நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை அமைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

நம்முடைய பிரதமர் உங்களுக்கு எழுதிய கடிதத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அனைவரின் சார்பாக இலங்கையில் அண்மையில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சார்பில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளை விவரித்திருப்பதைப் பற்றி நானும் உங்களுக்கு உறுதி கூற விரும்புகிறேன்.

30 வருடமாக தமிழர்களுக்கு துணை நிற்கிறோம்..

கடந்த முப்பதாண்டு காலமாக காங்கிரஸ் கட்சி, இலங்கை தமிழர்களின் நல்வாழ்வுக்காக துணை நின்று வருவதையும், ஒன்றுபட்ட இலங்கைக்கு உட்பட்டு இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து சமுதாயத்தினரும் சமஉரிமையோடு வாழவேண்டும் என்பதை தொடர்ந்து வருகின்ற இலங்கை அரசுகளிடம் வலியுறுத்தி வருவதையும் தாங்கள் நன்கறிவீர்கள்.

சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் இந்த நிலை பிரதிபலித்துள்ளது.

தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் போர், அதன் காரணமாக அங்குள்ள தாய்மார்கள், குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவி தமிழர்கள் அனுபவித்து வரும் பெரும் துயரங்கள், நம்மை மிகுந்த கவலைக்கு ஆளாக்கியுள்ளது.

அவர்களைப் பாதுகாக்கவும், அவர்களின் நலன்களை பேணவும் தேவையான முயற்சிகள் அனைத்தையும் இலங்கையின் அதிகார வர்க்கம் மேற்கொள்ள வேண்டுமென்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். உள்ளபடியே அதற்கான முதல்கட்டமாக போர் நிறுத்தம் ஏற்படவேண்டும்.

போர் நிறுத்தம் குறித்து பேசுகிறோம் ...

நமது பிரதமர் கடிதத்தில் ஏற்கனவே தெரிவித்துள்ளபடி நமது அரசு, இலங்கை அரசுடன் பல்வேறு வகையான கருத்துருக்களின் மீது தொடர்பு கொண்டு வருகிறது. குறிப்பாக போர் நிறுத்தத்தைப் பற்றியும் தொடர்பு கொண்டு வருகிறது.

போர் நிறுத்தம் ஏற்பட்டால்தான் அப்பாவி மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர முடியும்.

இலங்கையில் ஏனைய குடிமக்கள் அனுபவித்து வருவதைப் போல தமிழ் மக்களும் சமத்துவ நிலையினையும், சமமான உரிமைகளையும் பெற்று வாழ்வதற்கேற்ற அதிகாரப் பகிர்வு ஏற்படுவதற்கு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணப்படவேண்டும் என்ற நமது அரசின் நிலையினை காங்கிரஸ் கட்சி மீண்டும் வலியுறுத்திட விரும்புகிறது. நீங்கள் முழு நலம் பெற்றுவிட்டீர்கள் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார் சோனியா காந்தி.

இலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழகத்தில் முக்கிய தேர்தல் பிரச்சினையாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. சமீபத்திய என்டிடிவி கருத்துக் கணிப்பில் விடுதலைப் புலிகளுக்கு இந்திய அரசு ஆதரவு தெரிவிக்க வேண்டும், அங்கு தமிழர்கள் மீதான தாக்குதலை இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசியல் கட்சிகள், அமைப்புகள், பல்வேறு இயக்கங்கள் இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் ஏற்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலையிட்டு தமிழர்களைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

ஆனால் சோனியா காந்தி தரப்பிலிருந்து அப்போது பெரிய அளவில் எந்த ரியாக்ஷனும் இல்லை. இந்த நிலையில் தற்போது உடனடி போர்நிறுத்தம் அவசியம் என சோனியா காந்தி கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X