திமுக-அதிமுக இணைப்பை விரும்பினார் எம்ஜிஆர்- வி.வி.சுவாமிநாதன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்தபோது திமுகவும், அதிமுகவும் இணைய வாய்ப்பிருந்தது. ஆனால் பின்னர் அது கைகூடாமல் போய் விட்டது. இருப்பினும் இப்போதும் கூட இரு கட்சிகளும் இணைய வாய்ப்புகள் உள்ளன என்று கூறியுள்ளார் முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன்.

சமீபத்தில் முதல்வர் கருணாநிதி வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில், திமுகவும், அதிமுகவும் இணைய மறைந்த பிஜூ பட்நாயக் முயற்சி எடுத்தார். இதற்கு நான் சில நிபந்தனைகளைப் போட்டேன். அதை எம்.ஜி.ஆரும் ஏற்றுக் கொண்டார். ஆனால் கடைசி நேரத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் குறுக்கிட்டு குழப்பி விட்டார், இரு கட்சிகளும் இணைவதைக் கெடுத்து விட்டார் என்று கூறியிருந்தார்.

இந் நிலையில் எம்.ஜி.ஆர் காலத்து அமைச்சரும் அவருடன் மிக நெருக்கமாக இருந்தவருமான வி.வி.சுவாமிதன் (வயது 83), திமுக, அதிமுக இணைப்பு அப்போது சாத்தியமாகவே இருந்தது. ஆனால் கை கூடாமல் போய் விட்டது. இருப்பினும் இப்போதும் கூட அதற்கான வாய்ப்புகள் உள்ளன என கூறியுள்ளார்.

சுவாமிநாதன் கூறுகையில், இன்று பண்ருட்டியார் அதிமுகவில் இல்லை. எம்.ஜி.ஆரும் உயிருடன் இல்லை. நிலைமை நிறைய மாறிப் போய் விட்டது.

இருப்பினும் இப்போதும் கூட திமுக, அதிமுக இணைய வாய்ப்புகள் உள்ளன.

இணைப்பை விரும்பினார் எம்.ஜி.ஆர் ...

திமுகவும், அதிமுகவும் இணைவதை எம்.ஜி.ஆர். விரும்பினார். இதை நான் உயிருடன் இருக்கும்போதே மக்கள் முன் பதிவு செய்ய விரும்புகிறேன்.

இப்போதும் கூட இரு கட்சிகளும் இணைய முடியும். லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் இதுகுறித்து இரு கட்சிகளும் யோசித்து முடிவெடுக்க முடியும். காலம் எல்லாவற்றையும் மாற்றும் சக்தி கொண்டது.

கி.வீரமணி மத்தியஸ்தம் செய்யலாம்..

இந்த இணைப்பு முயற்சியை முன்னெடுக்க சரியான நபர் தி.க. தலைவர் கி.வீரமணிதான். அவர் அரசியல் ரீதியாக எந்தப் பதவியிலும் இல்லை. மேலும் இரு தலைவர்களுக்கும் நெருக்கமானவரும் கூட.

எம்.ஜி.ஆருக்கும், தலைவர் ஜெகஜீவன் ராமுக்கும் இடையே டெல்லியில் முன்பு நடந்த பேச்சுவார்த்தையை இப்போது பகிரங்கப்படுத்த விரும்புகிறேன்.

அந்த சந்திப்பின்போது, சர்க்காரியா கமிஷன் பரிந்துரையின்படி, கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்க அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தயங்குவதாக ஜெகஜீவன் ராமிடம் எம்.ஜி.ஆர் வருத்தப்பட்டார்.

மாநில அரசே இதுபோன்ற நடவடிக்கையை எடுக்க அதிகாரம் உள்ளதாக தன்னிடம் இந்திரா கூறியதாகவும் எம்.ஜி.ஆர். தெரிவித்தார்.

கருணாநிதியைக் காப்பாற்றிய ஜெகஜீவன் ராம்..

அதற்கு ஜெகஜீவன் ராம் எம்.ஜி.ஆரிடம், நான் சொல்வதை திமுகவுக்கு ஆதரவான கருத்தாக எடுத்துக் கொள்ளாதீர்கள். மாநில அரசே நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது உண்மைதான். இருப்பினும் நீங்கள் கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம். அது தேவையில்லை என்றார். இதை எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொண்டார்.

அன்று ஜெகஜீவன் ராமுக்கு அளித்த உறுதிமொழியை கடைசி வரை காப்பாற்றினார் எம்.ஜி.ஆர்.

அண்ணா மறைந்த பின்னர், அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு அனைவருக்கும் ஏற்பட்டது. அப்போது எம்.ஜி.ஆர்., கருணாநிதியை உறுதியாக ஆதரித்தார்.

நெடுஞ்செழியனை விட கலைஞர்தான் தமிழகத்தின் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினரின் உரிமைகளை காக்கக் கூடிய தகுதி படைத்தவர். அதுகுறித்து யாருக்கும் இரண்டாவது கருத்தே இருக்க முடியாது என்று எம்.ஜி.ஆர். கூறினார்.

இணைந்தால் அண்ணாவுக்கு மரியாதை ...

தற்போது அண்ணாவின் நூற்றாண்டை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்த சமயத்தி்ல இரு பெரும் திராவிடக் கட்சிகளும் இணைந்தால் அது அண்ணாவுக்கு நாம் செய்யும் சரியான மரியாதையாக இருக்கும் என்றார் வி.வி.சுவாமிநாதன்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...