For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மக்களே..கையில் சாட்டையை எடுங்கள்-விஜய்காந்த்

By Staff
Google Oneindia Tamil News

Vijayakanth
லால்குடி: தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வந்தது காவல்துறையை திமுகவும், அதிமுகவும் சீர்குலைத்து விட்டனர் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

சூறாவளி சுற்றுப்பயணத்தில் இருக்கும் விஜயகாந்த் நேற்று பெரம்பலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் துரை. காமராஜை ஆதரித்து லால்குடி, குளித்தலை, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார்.

அவர் பேசுகையில்,

திமுக, அதிமுக ஆகியவற்றின் கூட்டணியோடு மத்தியில் பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் ஆட்சி செய்தன. இருந்தாலும், காவிரி நீர் பிரச்னை தீர்க்கப்படவில்லை.

திமுக அரசு மாணவர்களின் நலனிலும், பொதுமக்களின் சுகாதாரத்திலும் அக்கறை செலுத்தவில்லை. பெரும்பாலான அரசுப் பள்ளிகளின் கட்டடங்கள் தரமாக இல்லை. அரசு மருத்துவமனைகளில் பாம்பு, வெறிநாய்க் கடிக்கு மருந்துகள் தட்டுப்பாடாக உள்ளன.

மாணவர்களுக்கு பெரும்பாலான வங்கிகள் கல்விக் கடன் தருவதில்லை. கூட்டுறவுக் கடன் தள்ளுபடியில் திமுகவினர் பொய்யான தகவல்களைக் கொடுத்து, கடன் தள்ளுபடி பெற்றனர். உண்மையான விவசாயிகள் கடனைத் திரும்பச் செலுத்தியும் அவர்களால் மீண்டும் கடன் பெற முடியவில்லை.

பணக்கார விவசாயிகள் தான் கடன் தள்ளுபடி பெற்றிருக்கிறார்களே தவிர ஏழை விவசாயிகள் பயன்பெறவில்லை.

சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகி விட்டது. இன்னும் மரத்தடியில்தான் ஏழை குழந்தைகளுக்கு கல்வி போதிக்கப்படுகிறது. ஏழைக்கு ஒரு கல்வி, பணக்காரர்களுக்கு ஒரு கல்வி என்ற நிலை இன்னும் உள்ளது. இதனால் சமச்சீர் கல்வி வேண்டும்.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் 50 சதவீத டாக்டர்கள் பற்றாக்குறை இருப்பதாக மருத்துவ அதிகாரி ஒருவர் சொல்கிறார். ஆளுங்கட்சி நினைத்தால் நிரப்ப முடியாதா?

மக்கள் மீது அரசியல்வாதிகளுக்கு பயம் இருக்க வேண்டும். அப்படி பயம் வர வேண்டும் என்றால் ஓட்டு எனும் சவுக்கை கையில் எடுத்து வீச வேண்டும்.

ராமேஸ்வரம் மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள். மீன் பிடிக்க செல்லும் மீனவருக்கு கடலில் எல்லை தெரியுமா? அவர்கள் மீது மத்திய அரசுக்கு அக்கறை இருந்தால் அவர்கள் தாக்கப்படுவார்களா?

இன்னும் 2 நாளில் இலங்கையில் மொத்த தமிழர்களையும் கொன்று குவித்து விடுவார்கள்.

தன்னோடு கூட்டணி வைத்துள்ள மாநில அரசு கூறுவதை மத்திய அரசு ஏற்கவில்லை. பிறகு ஏன் கூட்டணி வைத்திருக்கிறீர்கள்.

திமுகவும், அதிமுகவும் ஊழல் செய்வதில் யார் பெரியவர் என்ற போட்டியில் இறங்கியுள்ளன. தேமுதிகவின் தேர்தல் பிரசாரத்தையும், எனக்கு கூடும் மக்கள் கூட்டத்தையும் பார்த்து திமுகவும், அதிமுகவும் பயந்து போய்க் கிடக்கின்றன, அதிர்ச்சி அடைந்து போயுள்ளன.

தேமுதிக கட்சி பெயரையோ, என் பெயரையோ திமுக, அதிமுகவினர் கூறுவதே கிடையாது. என் மீது அந்தளவு பயம். நான் மக்கள் பிரச்சனையை பேசுவதால் வந்த பயம் அது.

கரூர்-சேலம் அகல ரயில்பாதை திட்டம் போட்டு எத்தனை ஆண்டானது?. இங்கு 'பஸ் பாடி' கட்டுமான தொழிலில் ஏன் தடுமாறுகிறது? இதற்கெல்லாம் மத்திய அரசுதான் காரணம். இங்குள்ள பஸ் பாடி கட்டுமான தொழிலில் ஈடுபடுவோர், பஸ்ஸை விட லாரி வாங்கி விட்டிருந்தால் பிழைத்திருக்கலாம் என்கின்றனர். கரூரில் லாரி இருந்தால் மணல் அள்ளியாவது பிழைக்க முடியும்.

இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தியவர்களுக்கு உதவி தொகை அளிக்கப்படுகிறது. ஆனால், அதனால் படிப்பை பாதியில் இழந்து பாதிக்கப்பட்டவருக்கு எந்த நிவாரணமும் இல்லை.

'13 வயதில் அரசியலுக்கு வந்தேன்' என்கிறார் கருணாநிதி. திருக்குவளையில் இருந்து என்ன கொண்டு வந்தார்?. இன்று நாட்டில் முக்கிய பணக்காரர்களில் அவரும் ஒருவர். கட்சிகள் ஒவ்வொரு முறையும் ஒரே தேர்தல் அறிக்கையை தருகின்றன.

மூச்சுக்கு முந்நூறு தடவை சசிகலாவின் மிடாஸ் மதுபான தொழிற்சாலை பற்றி கூறி வந்த கருணாநிதி, ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டாக அதைப்பற்றி எதையுமே பேசவில்லை. சுடுகாட்டு ஊழல் என்று பேசப்பட்ட செல்வகணபதி, திமுகவுக்கு வந்ததும் ரொம்ப நல்லவரு என்கின்றனர். சேடப்பட்டி முத்தையாவும் இப்போது நல்லவர்.

அரசு அலுவலகங்களில் ரெய்டு நடத்தும் லஞ்ச ஒழிப்புத்துறை, என்றாவது அமைச்சரை பிடித்ததுண்டா?.

பிரதமர் மன்மோகன்சிங், அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் இலங்கையிடம் கூறியும் போர் நிறுத்தம் செய்யப்படவில்லை என்று கூறுகின்றனர். நம் நாட்டுக்கு எவ்வளவு பெரிய அவமானம் இது.

மக்கள் சாட்டையை எடுக்க வேண்டிய நேரம் இது. எங்களுக்கு ஓட்டு அளித்து பாருங்கள், நான் அவர்களை என்ன பாடுபடுத்துகிறேன் என்று.

இவ்வாறு விஜய்காந்த் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X