For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரிட்டன் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு ஆயிரக்கணக்கான தமிழர்கள் போராட்டம்-2 பேர் நதியில் குதிப்பு

By Staff
Google Oneindia Tamil News

லண்டன்: இலங்கை அரசு தனது தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும். உடனடியாக அங்கு போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி இங்கிலாந்து நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு ஆயிரக்கணக்கான தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

2 தமிழர்கள் தேம்ஸ் நதியில் குதித்தனர். உடனடியாக அவர்களை மீட்புப் படையினர் மீட்டனர். நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். 20 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வரும் போராட்டத்தால் லண்டனில் பரபரப்பு நிலவுகிறது.

நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்றிருக்கும் அமைச்சர்கள் அல்லது உறுப்பினர்களில் எவராவது வெளியே வந்து தமது கோரிக்கைக்கு பதிலளிக்கும் வரை நாடாளுமன்றம் முன்பு தொடர்ந்து இருக்கப்போவதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆர்ப்பரித்து திரண்டு வந்த தமிழர்கள் வெஸ்ட் மினிஸ்டர் நாடாளுமன்ற வளாகம் முன்பு நேற்று பிற்பகல் முதல் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ் மாணவர்கள் அமைப்பு ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் ஐயாயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

தமிழ் மாணவர்கள் மேற்கொள்ளும் இந்த ஆர்ப்பாட்டத்தினால் நாடாளுமன்றத்தை சுற்றி உள்ள பிரதான வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து காவல்துறையினர் வாகனங்களை நடாளுமன்றத்திற்கு முன்பகுதியில் உள்ள வீதிகளை நோக்கி வரவிடாமல் வேறு வீதிகளில் திருப்பி விடுகின்றனர்.

தேம்ஸில் குதித்த இருவர் ...

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அருகில் உள்ள தேம்ஸ் பாலத்திற்குச் சென்றனர். இதனால் தேம்ஸ் நதியில் தமிழர்கள் கூட்டம் கூட்டமாக குதித்துத் தற்கொலை செய்து கொள்ளக் கூடும் என்ற அச்சம் நிலவியது.

இதையடுத்து மீட்புப் படகுகள் அங்கு வரவழைக்கப்பட்டன. அந்த சமயத்தில் 2 பேர் நதியில் குதித்து விட்டனர். உடனடியாக அங்கு விரைந்த மீட்புப் படகு அவர்கள் இருவரையும் மீட்டது. அவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் தங்களுடன் பேச வேண்டும் என்று போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரியதாக பிபிசி செய்தி கூறுகிறது.

இங்கிலாந்து இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும். இனப்படுகொலை தொடர்பாக இங்கிலாந்து தனது மெளனத்தைக் கலைக்க வேண்டும். அதுவரை போராடுவோம் என தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறப்புத் தூதர் விரைகிறார் ...

தமிழர்கள் பெரும் திரளாக திரண்டு நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து இலங்கைக்கான இங்கிலாந்து சிறப்புத் தூதரும், முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான டெஸ் பிரவுன் தனது விடுமுறையை ரத்து செய்து விட்டு
லண்டன் விரைந்துள்ளார்.

தொடர்ந்து பெரும் திரளாக தமிழர்கள் வந்தவண்ணம் இருப்பதால் போராட்டம் விஸ்வரூபம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு போலீஸ் அதிகாரி கூறுகையில், இது சாதாரண பிரச்சினை போலத் தெரியவில்லை. அரசியல் பிரச்சினையாக தெரிகிறது. உயர் மட்டத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் இதில் தலையிட்டாக வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.

வெஸ்ட்மின்ஸ்ட் பகுதியில், கூடியுள்ள தமிழர்களை கலைக்க போலீஸார் எடுத்துக் கொண்ட முயற்சிகள் பலிக்கவில்லை. இதையடுத்து அங்கு அமர்ந்து போராட்டம் நடத்தியவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று வேறு பகுதிகளுக்கு திருப்பி விட்டனர்.

ஆனாலும், அங்கும் மக்கள் கலையாமல் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

நாடாளுமன்றத்திற்குள் தமிழர்கள் புகுந்து விடுவார்களோ என்ற அச்சம் காரணமாக அங்கு அதிரடிப்படை போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

4 பேர் கைது ..

போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டதாக ஸ்காட்லாந்து யார்ட் போலீஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஒருவர் வன்முறையில் ஈடுபட்டதற்காகவும், 2 பேர் பொது ஒழுங்கை சீர்குலைத்ததற்காவும், ஒருவர் அமைதியை சீர்குலைத்ததற்காவும் கைது செய்யப்பட்டனர் என்றார்.

தற்போது நாடாளுமன்ற வளாகம் முன்பு 500க்கும் மேற்பட்டோர் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டுள்ளனர்.

அங்கேயே படுத்து போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

போராட்டத்தில் பங்கேற்ற விஜய் மகாலிங்கம் என்ற தமிழ் இளைஞர் கூறுகையில், எங்களது தாயகத்தின் பிரச்சினைகளைத் தீர்க்குமாறு பிரிட்டிஷ் அரசையும், உலக நாடுகளையும நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். அதை வலியுறுத்தவே இந்தப் போராட்டம்.

கடந்த வாரம் உலகின் சக்தி வாய்ந்த பல்வேறு தலைவர்கள் இங்கு கூடினர். ஆனால் எங்களது தாயகத்தில் நடைபெற்று வரும் இனப்படுகொலை குறித்து யாருமே ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X