For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரபாகரன் எங்கும் தப்பிச் செல்ல மாட்டார்-புலிகள்

By Staff
Google Oneindia Tamil News

Nadesan
சென்னை: விடுதலைப் புலிகளை ஒழித்துவிட்டு அவர்களுக்கு 'பிந்தைய காலகட்டம்' என்று ஒரு காலம் வரவே வராது என்று அதன் அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன் கூறியுள்ளார்.

டெகல்கா இதழுக்கு அவர் அளித்துள்ள சிறப்புப் பேட்டி:

கேள்வி: பிரபாகரனின் மறைவுக்கு பிறகு என்ன ஆகும் என்று பேச ஆரம்பித்துள்ளார்களே?

நடேசன்: நான் ஒரு விஷயத்தை தெளிவாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். விடுதலைப் புலிகளை அழித்துவிட்டு அவர்களுக்குப் 'பிந்தைய காலம்' என்று ஒன்று இருக்கப் போவதில்லை. அவர்கள் எப்போதும் இருப்பார்கள்.

இலங்கைத் தமிழர்களின் உணர்வில் சுதந்திரத்திற்கான தாகம்தான் குடிகொண்டுள்ளது. தமது அரசியல் விருப்பங்களை அடைவதற்கான ஒரு வழிமுறையாகவே விடுதலைப் புலிகள் இயக்கத்தை தமிழர்கள் கருதுகின்றனர்.

போர்க் களங்களில் பின்னடைவுகளும் முன்னேற்றங்களும் தவிர்க்க முடியாதவை. இறுதியாக எதை அடைகிறோம் என்பதுதான் முக்கியம். விடுதலைப் புலிகளுக்கு பிந்தைய காலம் ஒன்று வரும் என காத்திருந்து காலத்தை வீணாக்காமல் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் தாயகத்துக்கான போராட்டத்தை அங்கீகரித்து அவர்களின் அரசியல் விருப்பங்களை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தும்படி இந்தியாவையும் உலக நாடுகளையும் கேட்டுக் கொள்கிறேன்.

கேள்வி: தனி ஈழத்தை அடைய முடியும் என்று பிரபாகரன் இப்போதும் நம்புகிறாரா?

நடேசன்: சுதந்திர தமிழ் ஈழத்தை அடைய முடியும் என்ற நம்பிக்கையை பிரபாகரன் எப்போதும் கைவிட்டதில்லை. அவ்வாறு அவருக்கு நம்பிக்கை இல்லாமல் போயிருந்தால் இந்த போராட்டத்தை எப்போதோ கைவிட்டிருப்பார்.

கேள்வி: இலங்கை ராணுவத்துடன் இந்திய ராணுவமும் இணைந்து போரை நடத்துகிறதா?

நடேசன்: இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் மிக உயர்ந்த மட்டத்தில் ராணுவம் சார்ந்த ஒத்துழைப்பு இருக்கிறது என்பதை என்னால் சொல்ல முடியும்.

கேள்வி: பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்துகிறீர்களா?

நடேசன்: இது பொய் பிரச்சாரம். இலங்கை அரசாங்கம் தமிழர்களை ஒழிக்க பல்வேறு முறைகளை கையாள்கிறது. அவர்கள் கைகளில் சிக்க தமிழர்கள் விரும்பவில்லை. எனவே இங்கு வாழும் மக்களை போர் முனைக்குள் சிக்கி கொண்டவர்கள் என்றோ அல்லது மனித கேடயங்கள் என்றோ குறிப்பிடுவது அர்த்தமற்றது.

கேள்வி: போர் நிறுத்தத்துக்கு தயார் என்று நீங்கள் சொல்வது உங்கள் பலவீனத்தின் அடையாளமா?

நடேசன்: போர் என்ற பெயரில் தமிழ் மக்களுக்கு எதிரான இனப் படுகொலையை இலங்கை அரசாங்கம் தீவிரப்படுத்தியிருப்பதால் தான் விடுதலைப் புலிகள் போர் நிறுத்தம் கோருகின்றனர். மனிதாபிமான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், அத்தியாவசியப் பொருட்கள் அவர்களுக்கு கிடைப்பதற்கும் போர் நிறுத்தம் அவசியம்.

கேள்வி: சர்வதேச சமுதாயத்திற்கு உங்கள் கோரிக்கை என்ன?

நடேசன்: அப்பாவி சிறுவர்கள், தாய்மார்கள் மற்றும் முதியவர்கள் இலங்கை ராணுவத்தால் தினமும் படுகொலை செய்யப்படுகிறார்கள். பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் தமிழ் மக்களை வேரறுக்க முயற்சிக்கிறார்கள். இலங்கை அரசின் இந்த முயற்சிக்கு உலக நாடுகள் துணை போக வேண்டாம்.

போரை உடனடியாக நிறுத்தி தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் நிரந்தர அரசியல் தீர்வு காண பேச்சுவார்த்தைகளுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

கேள்வி: பிரபாகரன் எங்கு இருக்கிறார்?

நடேசன்: எங்கள் மக்களுடன்தான் அவர் இருக்கிறார். அவர்தான் தலைமையேற்று விடுதலைப் போராட்டத்தை நடத்துகிறார். தலைமை தளபதி என்ற வகையில் போருக்கு தலைமை ஏற்றுள்ளார். அவர் எங்கும் தப்பிச் செல்ல மாட்டார்.

கேள்வி: இலங்கை ராணுவம் பிரபாகரனை உயிருடன் பிடிக்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறதே?

நடேசன்: (பலமாக சிரித்தபடி) இதற்கு இதுதான் பதில்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X