For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ.25,000 வரை வருமான வரி விலக்கு-தேமுதிக தேர்தல் அறிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சேலம்: கர்நாடகம், கேரளம், ஆந்திராவுடனான காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு பிரச்சனைகளி்ல் தமிழகத்துக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேமுதிக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலையொட்டி அதன் தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவர் விஜயகாந்த் சேலத்தில் வெளியிட்டார். அதன் முக்கிய அம்சங்கள்:

-தமிழ்நாட்டில் ஓடுகிற ஒரே ஜீவ நதி காவிரி ஆறுதான். தமிழ்நாட்டின் உணவுத் தேவையை பெருமளவுக்கு நிறைவு செய்வதும் காவிரிப் பாசனம்தான். இந் நிலையில் தமிழ்நாட்டுக்கும் கர்நாடகத்துக்கும் இடையிலான காவிரி நீர் பிரச்சினையில் தற்போதைய நடுவர் மன்றத் தீர்ப்பின் மூலம் தமிழ்நாடு சுமார் 5 லட்சம் ஏக்கர் பாசன வசதியை இழக்க நேரிடும். ஆனால் கர்நாடக மாநிலம் தமிழ்நாட்டை போன்று 3 மடங்கு நீர்வளம் கொண்டது.

எனவே தமிழ்நாட்டை பட்டினி போட்டு கர்நாடகத்தை வாழ வைக்க வேண்டிய அவசியம் இல்லை. கர்நாடகத்தில் உள்ள நீர்வளத்தை கொண்டே இரு மாநிலங்களின் தேவையையும் பூர்த்தி செய்ய முடியும். மத்திய அரசின் மூலம் தேமுதிக அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும்.

-முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் கேரள அரசு பிடிவாதமாக மறுக்கிறது. இந்த அணை தொடர்பாக கேரள மக்களிடையே உள்ள அச்சத்தை போக்கி, அதன்மூலம் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் தண்ணீரின் அளவு குறையாமல் பார்த்துக் கொள்ளும் வகையில் மத்திய அரசின் மூலம் தேமுதிக வழி வகை காணும்.

-ஆந்திர மாநிலம் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதை தடுக்க மத்திய அரசு மூலம் தேமுதிக முயற்சிகள் எடுக்கும்.

-தேசிய நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு முன்னுரிமை கொடுப்பதன் மூலம் ஒரே நேரத்தில் இந்தியாவை வளம் கொழிக்கச்செய்ய முடியும். தேமுதிக இதற்கான முயற்சிகளில் உடனடியாக ஈடுபடும்.

-சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்றப்படுவதன் மூலம் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல் இந்தியாவின் மேல் கடற்கரையையும் கீழ கடற்கரையையும் இணைக்க முடியும். இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, இந்த திட்டத்தால் பாதிப்பு ஏற்படும் என்று கருதும் மீனவர்களுடன் கலந்து பேசி எந்த மதத்தினரும் புண்படாத வகையில் இந்த திட்டத்தை மாற்றி அமைத்து செயல்படுத்துவோம். மேலும் இந்த திட்டத்தில் நடைபெற்றுள்ள ஊழல் பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

-தமிழ்நாட்டு மக்களின் இதயங்களை உலுக்குகின்ற பிரச்சனையாக இலங்கை தமிழர் பிரச்சினை உருவெடுத்துள்ளது. இந்த பிரச்சினையில் ஆரம்பம் முதலே சிங்கள அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கையால் தற்போதைய நெருக்கடியான நிலை ஏற்பட்டு உள்ளது. உண்மையில் இலங்கையின் ஒற்றுமையை சிங்கள அரசுதான் தனது ஜனநாயக விரோத நடவடிக்கைகளாலும், ராணுவ தீர்வு காணவேண்டும் என்ற முயற்சியாலும் சீர்குலைத்துவிட்டது. இனியும் தமிழர்களும், சிங்களர்களும் சேர்ந்து வாழ்வது இயலாத ஒன்று. தமிழ் ஈழம் அமையுமானால் அதற்கு முழு பொறுப்பும் சிங்கள அரசின் இனவெறிப் போக்கே தவிர வேறு எந்த காரணமும் அல்ல.

எனவே மனிதாபிமான அடிப்படையிலும், தமிழின படுகொலை தடுக்கப்பட வேண்டும் என்ற வகையிலும் இந்திய அரசின் வெளிநாட்டுக் கொள்கை அமைய தேமுதிக நடவடிக்கை எடுக்கும்.

-சர்வதேச அளவில் போடப்படும் ஒரு ஒப்பந்தம், பின்னர் ஒரு சாராருக்கு பாதிப்பு ஏற்படுத்துமேயானால், அந்த ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்வதோ, அதனை நீக்குவதோ தவறு இல்லை. அந்த அடிப்படையில் இலங்கை அரசுடன் செய்து கொண்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேமுதிக பாடுபடும்.

-ஊழல் அரசியல்வாதிகள், கிரிமினல் தாதாக்கள் போன்றோர் சட்டவிரோதமாக தங்கள் கறுப்பு பணத்தை சுவிஸ் வங்கியிலும், இதர வெளிநாட்டு வங்கியிலும் போட்டுள்ளனர். இந்த பணம் ரூ.70 லட்சம் கோடி வரை இருக்கும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. இந்த பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவர தேமுதிக முயற்சிகள் மேற்கொள்ளும்.

-நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளில் பெண்களுக்கான 3ல் ஒரு பங்கு இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும்.

-மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதியமும், மருத்துவ வசதியும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். அனைத்து வசதிகளும் கொண்ட முதியோர் இல்லங்கள் மாவட்டம் தோறும் அமைக்கப்படும்.

-மாதம் ரூ.25,000 வரை ஊதியம் பெறுவோர்க்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ராணுவத்தை அனுப்ப வேண்டும்:

பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில், மத்தியில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்று தற்போது கூற முடியாது. ஆனால், மாநிலக் கட்சிகளின் உதவியோடுதான் மத்தியில் ஆட்சி அமையும்.

இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகத்தில் நடைபெற்ற பொது வேலை நிறுத்தம் கண் துடைப்பு. கருணாநிதி நேரில் டெல்லி சென்று பிரதமருடன் பேசி இருக்க வேண்டும். எதிர்க்கட்சிகள்தான் இதுபோன்ற வேலை நிறுத்தத்தை செய்ய வேண்டும்.

இலங்கை தமிழர்களுக்காக இரண்டாவது முறையாக அனுப்பிய பொருள்கள் அவர்களைச் சென்றடையவில்லை. இனியாவது உணவுப் பொருள்கள், மருந்துகளை விமானம் மூலம் போட வேண்டும்.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட அரசியல் தீர்வுதான் நிரந்தர முடிவு. அங்குள்ள தமிழர்களைக் காக்க இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்றார் விஜயகாந்த்.

தேனி தேமுதிக நிர்வாகி நீக்கம்-விஜயகாந்த்

இதற்கிடையே கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி தேனி தேமுதிக நகர செயலாளர் வி.எஸ்.சந்திரனை கட்சியிலிருந்து நீக்கியுள்ளார் விஜயகாந்த்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X