For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக கூட்டணியினர் விழிப்புடன் இருக்க வேண்டும் - ராமதாஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தேர்தல் நாளன்று வாக்குச் சாவடிகளில் அதிமுக கூட்டணிக் கட்சியினர் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை...

தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. கூட்டணிக்கு எதிராக மக்கள் மத்தியில் கோப அலை வீசிக் கொண்டிருக்கிறது. இதன் விளைவாக தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மக்கள் மிகத் தெளிவான தீர்ப்பினை அளிக்க காத்திருக்கிறார்கள்.

கடந்த 5 ஆண்டு காலமாக காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சியை தாங்கிப்பிடித்த பெரிய தோழமைக் கட்சிகளில் தி.மு.க. முக்கியமானது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மாநிலத்தின் நலனுக்காகவும், தமிழினத்தைக் காப்பதற்காகவும், அதற்கு இலங்கையில் நடைபெற்று வரும் இனப்படுகொலை போரை தடுத்து நிறுத்திட மத்திய அரசிடம் வலியுறுத்தி செயல்பட வைப்பதில் தி.மு.க. மேற்கொள்ளும் எல்லா நடவடிக்கைகளுக்கும் உறுதுணையாக இருப்போம் என்று நாங்களெல்லாம் உறுதியளித்தோம்.

ஆனால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மத்திய அரசை செயல்பட வைப்பதில் தி.மு.க. படுதோல்வி அடைந்திருக்கிறது என்பதை தமிழக மக்கள் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் தி.மு.க. எப்போதெல்லாம் ஆட்சிக்கு வந்திருக்கிறதோ, அப்போதெல்லாம் தமிழகம் தனது உரிமைகளை ஒவ்வொன்றாக இழந்து வந்திருக்கிறது. மாநிலத்தின் ஆட்சியையும், கூட்டணி உறவால் மத்தியில் கிடைத்த அதிகாரத்தையும் பயன்படுத்தி மாநிலத்தின் உரிமைகளை நிலைநிறுத்திக் கொள்ளவும், இழந்துவிட்ட உரிமைகளை மீண்டும் பெறவும் தி.மு.க. தலைமை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பவையெல்லாம் மக்களின் கோபத்தை அதிகரிக்க செய்திருக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த 2 தேர்தல்களில் தி.மு.க.வின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கூட்டணி கட்சிகளையெல்லாம் தி.மு.க. தனது பெரியண்ணன் போக்கால் இழந்து தனிமரமாக நிற்கிறது. இப்போது துணை நிற்கும் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தேடிக் கண்டுபிடிக்கும் நிலையில் உள்ளது.

1967-ம் ஆண்டு முதல் நமது மாநிலத்தில் நடந்து வந்துள்ள அத்தனை தேர்தல்களிலும் எந்த அணிக்கு கூட்டணி கட்சிகளின் எண்ணிக்கையும், அவர்களது வாக்கு வங்கியும் அதிகமாக இருந்து வந்திருக்கிறதோ அந்த கூட்டணிதான் வெற்றி பெற்று வந்திருக்கிறது. பதவி காலத்தில் அளித்ததாக கூறி கொண்ட இலவசங்களும், மலிவான சலுகைகளும் வெற்றியை தேடித் தரவில்லை என்பது வரலாறு.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. அணியின் பக்கம், கூட்டணி கட்சிகளின் பலமும், வாக்கு வங்கியும் அதிகம் உள்ளது. எனவே புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. அணி வெற்றி பெறப்போவது உறுதியாகிவிட்டது.

இந்த உண்மை தி.மு.க. கூட்டணிக்கு நன்றாக புரிந்துவிட்டது. எனவே, ஒரு மக்களவை தொகுதிக்கு 50 முதல் 100 கோடி ரூபாய் வரை செலவிட முடிவெடுத்து அதற்கான காரியங்களில் அதிகார வர்க்கத்தின் துணையோடு நடந்து கொண்டிருப்பதாக எல்லா இடங்களில் இருந்தும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

முன்பெல்லாம் இடைத்தேர்தல்கள் நடைபெறும்போது மட்டுமே அதிகார துஷ்பிரயோகமும், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதும் நடைபெறுவது வழக்கம். ஆனால், பாராளுமன்ற பொது தேர்தலில் பணம் கொடுத்ததாக வரலாறு இல்லை. அந்த புதிய வரலாற்றை ஆளும் வர்க்கத்தினர் ஏற்படுத்த தயாராகி விட்டார்கள்.

தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது சட்டப்படி குற்றம், ஜனநாயகத்திற்கு விரோதமானது, இதை தடுக்க வேண்டிய பொறுப்பும், வாக்காளர்களுக்கு உணர்த்த வேண்டிய கடமையும் அரசுக்கும், ஆட்சியாளருக்கும் உள்ளது. அந்த ஜனநாயக கடமையை ஆற்ற முதல்-அமைச்சர் கருணாநிதி முன்வர வேண்டும். தேர்தலில் வாக்களிப்பது ஜனநாயக கடமை; வாக்குரிமையை பணத்தால் விலைக்கு வாங்குவது சட்டவிரோதம். இந்த சட்ட விரோத நடவடிக்கையில் யாரும் ஈடுபடக் கூடாது.

பணம் கொடுத்தால் அதை வாங்காதீர்கள். ஜனநாயக உரிமையை விற்காதீர்கள் என்றும் இந்த சட்ட விரோத நடவடிக்கையில் யார் ஈடுபட்டாலும், அவர்களை தயவு தாட்சண்யமின்றி காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் வலியுறுத்தி அறிக்கை வெளியிட வேண்டும். அரசு செலவில் இதனை எல்லா நாளேடுகளிலும் விளம்பரமாக வெளியிட வேண்டும்.

ஆளும் கட்சியினரின் பணபலத்தையும், அடியாள் பலத்தையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் முறியடிக்க அ.தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சி தொண்டர்கள் தயாராக வேண்டும்.

இத்தனை நாட்கள் ஆற்றிய தேர்தல் பணிகளைவிட மே 12 மற்றும் 13 தேதிகளில் ஆற்ற வேண்டிய பணிகள் தான் முக்கியம். வாக்கு சாவடிகளில் விழிப்புடன் இருந்து பணியாற்ற வேண்டும். கொஞ்சம் அசந்தாலும் கள்ள ஓட்டு போட்டு விடுவார்கள்.

வழக்கமாக வாக்கு பதிவு முடிவடைகிற கடைசி மணி நேரத்தில்தான் கள்ள வாக்குகள் பெருமளவு பதிவாகும். இந்த தடவை வாக்கு பதிவு தொடங்குகிற முதல் ஒரு மணி நேரத்திலேயே கள்ள வாக்குகளை பதிவு செய்யும்படி ஆளும் கூட்டணியினருக்கு ரகசியமாக ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. வாக்கு சாவடிகளில் பணியாற்றுகின்ற அரசு அலுவலர்கள் இந்த முறைகேட்டிற்கு துணை போக கூடாது.

அரசு ஊழியர்களும், காவல்துறையினரும் தங்களது கடமையை நடுநிலையாகவும், முறையாகவும் செய்ய வேண்டும். அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் வெற்றி கனியை அளிக்க காத்திருக்கிறார்கள். அதனை எதிரிகள் தட்டிப் பறித்துச் சென்று விடாமல் அ.தி.மு.க. கூட்டணி கட்சி தொண்டர்கள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X