For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழர் படுகொலையில் நம்பியார்கள் சதி-நடவடிக்கை கோரும் ராமதாஸ்

By Staff
Google Oneindia Tamil News

Satish Nambiar and Vijay Nambiar
சென்னை: தமிழர்களை இலங்கை ராணுவம் படுகொலை செய்த சதிக்கு பின்னணியில் இருந்த விஜய் நம்பியார், அவரது சகோதரர் சதீஷ் நம்பியார் ஆகியோர் மீது கிரிமினல் வழக்குத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்,

இந்தியப் பிரதமராக இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றிருக்கும் உங்களுக்கு என் இதயங்கனிந்த வாழ்த்துகள். உங்களுக்கு இருக்கும் திறமையையும் அனுபவத்தையும் கொண்டு அரசு நிர்வாகத்திலும், செயல்பாட்டிலும், கொள்கைகளை வகுப்பதிலும் புதிய தரத்தை ஏற்படுத்துவீர்கள் என்று உறுதியாக நம்புகிறோம்.

இப்போது எங்களுக்கு இருக்கும் கவலையெல்லாம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறித்துதான். இலங்கையைப் பொறுத்தவரையில் நமது வெளியுறவுக் கொள்கை பெருங்கேடு விளைவித்து வருகிறது. அண்மைக் காலங்களில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையானது இரண்டு முதன்மையான காரணங்களுக்காகக் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

முதலாவது, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று இந்தியா போற்றப்படுகிற போதிலும் பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், மியான்மர், இலங்கை போன்ற அண்டை நாடுகளின் எதேச்சதிகார, சர்வாதிகார அரசுகளுக்கு ஆதரவாக அது செயல்பட்டு வருகிறது. இதில் சீனாவுக்கு இந்தியா ஒத்தூதி வருகிறது.

இரண்டாவது, வலுவான அரசியல் மதிப்பீடுகள் அல்லது பாதுகாப்பு அக்கறைகளின் அடிப்படையில் அல்லாமல், ஒரு சார்பான அதிகாரவர்க்க சக்திகளால் நமது வெளியுறவுக் கொள்கை வகுக்கப்பட்டு பின்பற்றப்படுகிறது.

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை அமைப்புகளை சேர்ந்த உயரதிகாரிகள் பாகிஸ்தானின் முன்னாள் சர்வாதிகாரி பர்வேஸ் முஷரப்புக்கு தொடர்ந்து புகழ்பாடி வருகிறார்கள். நேபாளத்தின் ஜனநாயக சக்திகளுக்கு எதிராக அந்நாட்டின் மன்னருக்கும், இலங்கையின் அடக்குமுறை ஆட்சியாளர்களுக்கும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

மக்கள் சமுதாயத்தில் இருந்து வருகிற அறிவார்ந்த கருத்துகளை எடுத்துக் கொள்ளுதல், பொது விவாதம், கலந்தாய்வு ஆகியவற்றுக்கு வெளியுறவுக் கொள்கையில் முற்றிலும் இடமில்லாத நிலை உள்ளது.

இந்தப் பின்னணியில்தான், ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் கடந்த மே 22ம் தேதி வெளியுறவு அமைச்சகம் மேற்கொண்ட பெருந்தீங்கு விளைவிக்கும் நடவடிக்கை அமைந்திருந்தது.

வன்னிப் பகுதியில் அண்மையில் முடிவடைந்துள்ள விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசு இழைத்த போர்க் குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி ஜெர்மனியும் வேறு 16 நாடுகளும் விடுத்த வேண்டுகோளை விவாதிப்பதற்காகக் கடந்த மே 26ம் தேதி சிறப்புக் கூட்டம் ஒன்றை ஐ.நா. மனித உரிமை மன்றம் கூட்டியிருந்தது.

தங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று அஞ்சிய இலங்கை அரசு, எதிர் நடவடிக்கை எடுத்தது. சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் துணையுடன் இந்திய உள்ளிட்ட 12 நாடுகளின் ஒப்புதலுடன் தானே உருவாக்கிய தீர்மானம் ஒன்றை இலங்கை சுற்றுக்கு விட்டது.

இலங்கை அரசின் இந்தத் தீர்மானமும், ஜெனீவாவில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி மற்றும் இந்தியத் தூதரான ஏ.கோபிநாதன் இத்தீர்மானத்துக்கு ஆதரவாகப் பேசியதும், ஐ.நா. மனித உரிமை மன்றம் ஒரு பிற்போக்கான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு வழிவகுத்தது.

இத்தீர்மானம் உலகம் முழுவதும் கண்டனத்துக்குள்ளாகி இருக்கிறது. இப்போது இருள்படிந்த அமைப்பாக மாறிவிட்ட ஐ.நா. அமைப்பு வரலாற்றில் மிகவும் கோட்பாடற்ற, வெட்கமற்ற முறையில் நிறைவற்றப்பட்ட ஒரு தீர்மானம் இதுவாகத்தான் இருக்கும்.

வெறுக்கத்தக்க இத்தகைய தீர்மானத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டு அது நிறைவேற வழிவகுத்திருப்பது இந்தியாவுக்கும் அதன் வெளியுறவுக் கொள்கைக்கும் பெரும் இழிவை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்திய வெளியுறவுத் துறை அதிகாரியும் இப்போது ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூனின் தலைமை செயலாளராக இருப்பவருமான விஜய் நம்பியார் இந்த இனப் படுகொலைக்கு உடந்தையாக இருந்திருக்கிறார் என்று கடுமையாகக் குற்றம் சாற்றப்பட்டுள்ளது.

விஜய் நம்பியாரின் சகோதரரும், ஊதியம் வாங்கிக் கொண்டு இலங்கைப் படைக்கு கருத்துரையாளராக இருப்பவருமான ஓய்வுபெற்ற இந்தியப் படை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் சதீஷ் நம்பியார் தான் தமிழர்களை அழித்தொழிக்கும்' இந்த சதி முழுவதற்கும் பின்னணி என்று கூறப்படுகிறது.

இந்த விஷயம் குறித்து உடனடியாக விசாரணைக்கு ஆணையிடுமாறு உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன். அதற்கிடையே, இப்போதுள்ள முதன்மையான பொறுப்புகளில் இருந்து இந்த அதிகாரிகள் அனைவரையும் நீக்க வேண்டும்.

ஐ.நா.வில் பணியாற்ற விஜய் நம்பியாருக்கு அளிக்கப்பட்டுள்ள அரசு அங்கீகாரத்தைத் திரும்பப்பெற வேண்டும்.

இனப் படுகொலைக்கு உடந்தையாக இருந்ததற்காக ஓய்வுபெற்ற லெப்டினனட் ஜெனரல் சதீஷ் நம்பியாருக்கு எதிராகக் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய அரசின் ஆவணங்களில் இருந்து இந்த இழுக்கும், கறையும் அகற்றப்படாத வரையில், இந்த நாட்டு மக்களுக்கு நீங்கள் அளித்துள்ள வாக்குறுதிப்படி நல்லாட்சியை, பொறுப்பான ஆட்சியை வழங்குவது உங்களால் இயலாத ஒன்றாகிவிடும்.

இவ்வாறு ராமதாஸ் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X