For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லாலு-சரத் மோதல்: கருத்தை நீக்கிய மீரா குமார்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: மக்களவையை நடுநிலையுடன் நடத்துவேன் என்று அதன் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மீரா குமார் கூறினார்.

ஆனால், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவீர்களா என்று கேட்டதற்கு அவர் பதில் சொல்லாமல் தவிர்த்துவிட்டார்.

சபாநாயகராக பதவியேற்ற அவர் நிருபர்களிடம் பேசுகையில்,

மக்களவையை சுமுகமாக நடத்த என்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன். அவையை நடுநிலையோடு நடத்தி அதன் கண்ணியத்தை கட்டிக் காப்பேன். அனைத்து உறுப்பினர்களுக்கும் அவையில் பேச உரிய வாய்ப்பு கிடைக்கச் செய்வேன்.

அவையில் உருப்படியான விவாதம் நடத்தப்படவேண்டும் என்பதே எனது விருப்பம்.

ஆண்டுக்கு குறைந்தது 100 நாட்களாவது மக்களவை கூடவேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது. அவையின் கூட்ட நாள்கள் எண்ணிக்கையை உயர்த்துவது பற்றி அனைத்து கட்சிகளையும் அழைத்துப் பேசுவேன்.

மக்களவை, சட்டசபை உள்ளிட்ட அவைகளில் மகளிருக்கு 33 இட ஒதுக்கீடு தரும் மசோதா விஷயத்தில் அனைத்துக் கட்சிகளிடம் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இது கவலை தந்தாலும் கருத்தொற்றுமை எட்ட எல்லா கட்சிகளும் விவாதிக்க வேண்டும்.

முதல் பெண் குடியரசுத் தலைவர் என்கிற பெருமை பிரதிபா பாட்டீலுக்கு கிடைத்தது, எனக்கு மக்களவைத் தலைவர் பதவி கிடைத்தது. இவையெல்லாம் அரசு ஒப்புக்கு செய்வதல்ல. பெண்களை அதிகாரமிக்கவர்களாக மாற்ற அது மேற்கொள்ளும் மனப்பூர்வ நடவடிக்கையாகும்.

முந்தைய மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, சிக்கல் மிகுந்த சூழ்நிலையிலும் மிகச் சிறப்பாக அவையை நடத்திக் காட்டினார்.

அவரைத் தொடர்ந்து நான் இந்த பதவியில் அமர்வது பாக்கியம். சூழ்நிலைகள் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. உரிய நேரத்தில் உரிய முடிவை எடுப்பேன்.

அவையில் ஏற்படும் அமளி மற்றும் அவை நடவடிக்கையை குலைக்கும் எம்பிக்கள் சம்பளத்தை குறைப்பது போன்ற விஷயங்கள் பற்றி கட்சிகளுடன் பேசுவேன் என்றார் மீரா குமார்.

எம்பிக்கள் மோதல்-கருத்தை நீக்கிய மீரா:

மீரா குமார் பதவியேற்றதும் பல்வேறு கட்சியினரும் அவரை வாழ்த்திப் பேசினர். அப்போது ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் தெரிவித்த சில கருத்துக்களுக்கு ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் எதிர்ப்புத் தெரிவித்தார்.

இதையடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசிக் கொண்னர். அதை அவைக் குறிப்பிலிருந்து நீக்கி அதிரடியாக உத்தரவிட்டார் சபாநாயகர் மீரா. பதவியேற்ற பின் அவர் பிறப்பித்த முதல் உத்தரவு இது என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் மசோதா-சமாஜவாதி எதிர்ப்பு:

இதற்கிடையே இப்போதைய வடிவிலேயே மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கலாவதை சமாஜவாதி கட்சி எதிர்க்கும் என்று அக் கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார்.

திமுக அமைச்சர்கள் பங்கேற்கவில்லை:

இந் நிலையில் நேற்று மக்களவையில் அமைச்சர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சியில் திமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் கலந்து கொள்ளவில்லை.

புதிய அமைச்சர்களை பிரதமர் மன்மோகன் சிங் அறிமுகம் செய்து வைத்தார். ஆனால், இந்த நிகழ்ச்சியில் 17 திமுக எம்பிக்களும் கலந்து கொள்ளவில்லை.

முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள திமுக எம்பிக்கள் சென்னை சென்றுள்ளதால் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலவில்லை என்று மன்மோகன் சிங் கூறினார்.

ஆனால், திமுக எம்பி டி.ஆர்.பாலு மட்டும் அவையில் இருந்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X