For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னைக்கு இந்த ஆண்டே 'கடல் குடிநீர்'

By Staff
Google Oneindia Tamil News

Stalin
சென்னை: மீஞ்சூரில் அமைக்கப்படும் வரும் கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தின் பணிகள் இந்த ஆண்டுக்குள் முடிந்துவிடும். இதனால் இந்த ஆண்டே 'கடல் குடிநீர்' சென்னை மக்களுக்கு கிடைக்கும் என்று துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

சட்டசபையில் இன்று உள்ளாட்சி துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. அதன் விவரம்:

சாமி (அதிமுக): முன்னாள் அமைச்சர் கக்கன் நூற்றாண்டு விழா ஆண்டு இது. அவருக்கு அரசு சார்பில் நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டும். தபால் தலை வெளியிட வேண்டும். முல்லைப் பெரியாறில் கேரள அரசு புதிய அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். என் தொகுதியில் பல்வேறு கோரிக்கைள் நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது.

துணை முதல்வர் ஸ்டாலின்: உறுப்பினர் உள்ளாட்சி துறை மானிய கோரிக்கையை மட்டும் விட்டுவிட்டு வேறு எல்லா பிரச்னைகளையும் பேசுகிறார். மானியக் கோரிக்கை தொடர்பாக பேசுவாரா?.

சாமி (அதிமுக): உள்ளாட்சி துறையில் தற்போது நடப்பது எல்லாமே புரட்சித் தலைவி அம்மா கொண்டு வந்த திட்டம்தான்.

ஸ்டாலின்: உங்கள் அம்மா திட்டத்தை கொண்டு வந்தாலும் அதை நிறைவேற்றுவது திமுக ஆட்சி தான்.

செங்கோட்டையன் (அதிமுக): யார் திட்டத்தை கொண்டு வந்தாலும் அடுத்த ஆட்சி அதை நிறைவேற்ற வேண்டியதுதான்.

ஸ்டாலின்: நல்ல திட்டமாக இருந்தால் அதை தொடர்ந்து நிறைவேற்றுவது முதல்வர் கலைஞரின் ஆட்சி. ஆனால் அதிமுக ஆட்சியில் அப்படி நிறைவேற்றியதே இல்லை.

அமைச்சர் வேலு: அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை கலைஞர் கொண்டு வந்தார். ஆனால் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்தார் என்பதற்காக அதை ஒதுக்கி வைத்தார்கள்.

செங்கோட்டையன்: அண்ணா மறுமலர்ச்சி திட்டம் நிறுத்தப்படவில்லை. புதிய அண்ணா மறுமலர்ச்சி திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டது.

அமைச்சர் வேலு: திட்டத்தை மாற்றினார்கள். ஆனால் அது செயல்படவில்லை.

சாமி: இந்த ஆட்சியில் தவித்த வாய்க்கு தண்ணீர் இல்லை.

அமைச்சர் பரிதி இளம்வழுதி: ஏழைகளுக்கு 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி கொடுத்து வாழ வைப்பது இந்த அரசு.

அமைச்சர் சுப.தங்கவேலன்:- உறுப்பினர் தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்கவில்லை என்கிறார். ராமநாதபுரம் மாவட்டத்துக்கு ரூ. 616 கோடி செலவில் 2 ஆண்டுகளில் கூட்டு குடிநீர் திட்டம் தந்தவர் கலைஞர். அதை தொடங்கி வைத்தவர் மு.க.ஸ்டாலின். உறுப்பினர் தேவையில்லாமல் குறை கூறக்கூடாது.

சாமி: 2006ம் ஆண்டில் துணை முதல்வர் மதுரையில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது மேலூருக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும் என்றார். ஆனால், 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் திட்டம் நிறைவேற்றப்படவில்லை.

ஸ்டாலின்:- உறுப்பினர் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன். காவிரிக் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் மேலூர், திருமங்கலம், அவுனியாபுரம் உள்பட 155 குடியிருப்புகளுக்கு ரூ. 291 கோடியே 37 லட்சம் செலவில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட இருக்கிறது. இதனால் 3.59 லட்சம் மக்கள் பயன்பெற உள்ளனர். மத்திய அரசு இதற்கு ஒப்புதல் வழங்கி விட்டது. விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.

இதையடுத்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானியக் கோரிக்கைகள் மீதான கொள்கை விளக்க குறிப்புகளை ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை நகரின் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு தினமும் 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் 2 நிலையங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.

மீஞ்சூரிலும், நெம்மேலியிலும் இந்த நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மீஞ்சூரில் அமைந்து வரும் நிலையத்தில் இருந்து கிடைக்கும் குடிநீரை சென்னை நகர வினியோகத்துக்கு கொண்டு செல்ல தேவைப்படும் கட்டமைப்பும் பணிகள் ரூ. 93 கோடி மதிப்பில் முடிந்துவிட்டது.

நிலைய பணிகள் அனைத்தும் இந்த ஆண்டுக்குள் முடிந்துவிடும். இந்த ஆண்டே கடல் குடிநீர் சென்னை மக்களுக்கு கிடைக்கும்.

நெம்மேலியில் உருவாகி வரும் மற்றொரு கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.908 கோடி ஒப்புதல் வழங்கி உள்ளது.
கடந்த மார்ச் மாதம், மத்திய அரசு இதற்காக ரூ.300 கோடி வழங்கியது. இந்த திட்டத்தை நிறைவேற்ற டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன.

24 மாதங்களில் இந்தப் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த 2 குடிநீர் திட்டங்களையும் செயல்படுத்துவதன் மூலம் சென்னை மாநகருக்கு தினமும் 200 மில்லியன் லிட்டர் தண்ணீர் கூடுதலாக கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

எம்.ஆர்.எப்-தீர்ப்பின் அடிப்படையி்ல் நடவடிக்கை:

அரக்கோணம் அருகே உள்ள எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலை பிரச்சினை பற்றி இன்று சட்டசபையில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அமைச்சர் தா.மோ. அன்பரசன் பதில் அளிக்கையில்,

எம்.ஆர்.எப். தொழிற்சாலை பணியாளர்கள் 904 பேர் பணிக்கு திரும்பி உள்ளனர். இன்னும் 495 பேர் பணிக்கு திரும்பவில்லை. அடுத்த மாதம் 8ம் தேதி உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதன் தீர்ப்புக்கு ஏற்ப அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X