For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமைச்சர் வீடு முன் போராட்டம்-காங். எச்சரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: வட சென்னையில் 400 வீடுகளை அப்புறப்படுத்தும் ரயில்வே துறையின் நடவடிக்கைகளை குடிசை மாற்று வாரியத்துறை அமைச்சர் சுப.தங்கவேலன் கண்டும் காணாமல் இருப்பதால் மக்களை திரட்டி அவரது வீட்டின் முன் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும் என்று சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ சுதர்சனம் எச்சரிக்கை விடுத்தார்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் இந்தப் பிரச்சனை தொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது பேசிய சுதர்சனம்,

போஜராஜன் நகர் பகுதியில் உள்ள குடிசைவாசிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சுமார் 100 ஆண்டு காலமாக அந்த பகுதியில் துப்புரவு தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள்.

கடந்த 24.8.2006 அன்று ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்து இதுபற்றி ஏற்கனவே பேசி இருக்கிறேன். மாற்று இடம் கொடுத்த பிறகுதான் குடிசைகளை அகற்றுவது என வாக்குறுதி தரப்பட்டது.

கடந்த 26.2.2009 அன்றும் 400 குடிசைகளை ரெயில்வே துறையினர் போலீஸ் மூலம் அப்புறப்படுத்தும் போதும் முறையிட்டேன். அப்போது அமைச்சர் ஆற்காடு வீராசாமி ரயில்வே அமைச்சரைத் தொடர்பு கொண்டு இரண்டு மாத கால அவகாசம் வாங்கி கொடுத்தார்.

இப்போது திடீரென 16ம் தேதிக்குள் அந்த இடத்தை காலி செய்து தருமாறு ரயில்வே நோட்டீஸ் கொடுத்துள்ளது. அங்கு வசிப்பவர்களுக்கு மாற்று இடம் தருமாறு கடந்த 3 ஆண்டாக பலமுறை பேசி வருகிறேன். நாங்கள் உங்களுக்கு தோழமை கட்சியாக இருந்து வருகிறோம். 3 ஆண்டுகளாக குடிசை மாற்று வாரியத்துறை அமைச்சரிடம் கூறியும்ம் எந்த பலனும் இல்லை.

இந்த விஷயத்தில் அமைச்சர் மென்மையாக உள்ளார். அவரால் எந்த முன்னேற்றமும் செய்ய முடியவில்லை. நீங்கள் இப்படி இருப்பது மன வேதனையை தருகிறது. இப்படி கண்டும் காணாமல் இருந்தால் என்ன அர்த்தம்?. இது அந்தப் பகுதி ஆதி திராவிட மக்களுக்கு அநீதி இழைப்பதாகவே அர்த்தம்.

எனவே அந்த பகுதி மக்களுக்கு ஒரு செண்ட் இடமாவது கொடுத்து வேறு பகுதியில் அவர்களை குடியமர்த்த வேண்டும். நாங்கள் கூறுவதை எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் இருந்தால் அப்பகுதியை சேர்ந்த ஆயிரம் பேரை திரட்டி அமைச்சரின் வீட்டு முன்பு போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை என்றார்.

இதையடு்த்துப் பேசிய அதிமுக உறுப்பினர் சேகர்பாபு, கடந்த 5 ஆண்டுகளாக இந்த பிரச்சனை இருந்து வருகிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் ஒதுக்கீடு செய்து இடம் வழங்கப்பட்டு அதற்கு அந்த மக்கள் தவணையாக பணமும் கட்டுகிறார்கள்.

இப்போது திடீரென அவர்களை வெளியேற சொன்னால் அவர்கள் என்ன செய்வார்கள். ஒரு பக்கம் மாநகராட்சி சார்பில் பாலம் கட்டுவதால் இட ஆர்ஜிதம் செய்யப்படுகிறது. மறுபக்கம் மூன்றாவது பாதை அமைக்க ரயில்வே நிர்வாகம் மக்களை அப்புறப்படுத்த நினைக்கிறது. இந்த பகுதி மக்களுக்கு இரு பக்கமும் இடியாக இருக்கிறது.

ஏற்கனவே அகற்றிய 600 குடிசைகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டதில் 160 பேர்தான் பயன்பெற்றுள்ளனர்.

2005ம் ஆண்டு புரட்சித் தலைவி ஆட்சியின்போது குடிசைகளை இழந்தவர்களுக்கு பாரதி நகரில் இடம் கொடுத்து குடியமார்த்தப்பட்டார்கள். ஆனால் இந்த ஆட்சியில் 3 ஆண்டாக எதுவும் நடக்கவில்லை என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் சுப.தங்கவேலன், இந்த கவன ஈர்ப்புத் தீர்மானம் இன்று எடுத்துக் கொள்ளப்படுகிறது என எனக்கு தகவல் இல்லை. இருந்தாலும் இது பற்றிவிளக்க வேண்டியது எனது கடமை.

காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் சுதர்சனம் கூறும்போது 3 ஆண்டுகளாக இந்த விஷயத்தை கூறி வருவதாக தெரிவித்தார். அது தவறாகும். அந்த பகுதியில் ரயில் என்ஜின் தீப்பொறி பட்டு தீ விபத்து ஏற்பட்டபோதுதான் நான் அதிகாரிகளுடன் சென்று அங்குள்ள நிலைமையைப் பார்த்தேன். அந்த இடத்திலேயே தொலைபேசி மூலம் ரயில்வே அமைச்சருடன் பேசி எடுத்துச் சொன்னேன்.

எந்த துறைக்கு சொந்தமான இடமாக இருந்தாலும் அந்த துறைதான் இழப்பீடுகளை கொடுத்து அப்புறப்படுத்த வேண்டுமென்பது மத்திய அரசின் விதியாக உள்ளது. 2007ம் ஆண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இது பற்றி ரயில்வே துறைக்கு பலமுறை கடிதம் எழுதியிருக்கிறோம். ஆனால், அவர்களிடமிருந்து ஒரு பதிலும் வரவில்லை. நான் இதில் தனிப்பட்டு எந்த முடியும் எடுக்க முடியாது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு கூட சைதாப்பேட்டையில் 500 குடிசைகளை பிரிக்க திட்டமிட்டனர். இதற்காக ரூ. 15 கோடி செலுத்தினால் மாற்று இடம் தருவதாக கூறப்பட்டு ரூ. 3 கோடியே 72 லட்சத்துக்கு சம்பந்தப்பட்ட துறை முன் பணமாக செக் தந்துள்ளனர். தியாகராய நகரில் ரயில் தண்டவாளவே ஓரம் தீப்பிடித்த போதும் 324 வீடுகளுக்கு இதே அடிப்படையில் மாற்று வீடு வழங்கப்பட்டது. எனவே 3 ஆண்டாகி இதை கவனிக்காமலா இருப்போம். நீங்கள் (காங்கிரஸ்) சொல்லி, நாங்கள் கேட்காமல் இருப்போமா? என்றார்.

தொடர்ந்து பேசிய சுதர்சனம், 24.8.2006 அன்றும் 26.2.009 அன்றும் அமைச்சர் இதற்கு பதில் கூறி இருக்கிறார். மாற்று இடம் தருவதாக அறிவித்திருந்தார். தற்போது ஒன்றும் தெரியாது என்று சொன்னால் நியாயமான பதிலாக தெரியவில்லை. அமைச்சரின் பதில் கும்பகோணத்திற்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்கு விலை என்ன என்று கேட்பது போல உள்ளது. இதை நியாயமான பதிலாக எடுத்துக் கொள்ள முடியாது என்றார்.

அப்போது பேசிய முதல்வர் கருணாநிதி, நம் சுதர்சனம் பழமொழியை மாற்றி சொல்கிறார். பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்கு என்ன விலை என்று கேட்பது போல என்பதுதான் பழமொழி. இதில் கும்பகோணம் எங்கிருந்து வந்தது? என்றார்

இதனையடுத்து மீண்டும் பேசிய சேகர்பாபு, ரயில்வே துறை அப்புறப்படுத்த இருக்கும் அந்த இடமே குடிசை மாற்று வாரிய இடம்தான். இதில் தப்பு அரசின் பக்கமே தவிர மக்களின் குற்றம் அல்ல. இந்த விஷயத்தில் மக்கள் எந்த குற்றமும் செய்யவில்லை என்றார்.

இதற்கு பதிலளித்த சுப.தங்கவேலன்: இந்த பிரச்சினை குறித்து முதல்வருடன் கலந்து பேசி ரயில்வேக்கு கடிதம் எழுதி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X