ஜெவுக்கு வந்த ரூ.2 கோடி டிடி-செங்கோட்டையனை விடுவிப்பு இல்லை
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வந்த ரூ.2 கோடி டி.டிக்கள் தொடர்பான வழக்கில் இருந்து செங்கோட்டையனை விடுவிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டது.
1992ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா தனது பிறந்தநாளை தடபுடலாகக் கொண்டாடினார். அப்போது அவருக்கு ரூ. 2 கோடி மதிப்புள்ள 89 வங்கி டி.டிக்கள் வந்தன.
முதல்வருக்கு வரும் டிடியை அரசு நிதியில் சேர்க்காத அவர் அதில் 57 டிடிக்களை தனது சொந்த வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்தார். இத்தனைக்கும் அதை அதை அனுப்பியது யார் என்றும் தெரியாது என்றார்.
பரிசு பணத்தை அரசு கஜானாவில் ஒப்படைக்க தவறிய ஜெயலலிதா மீது வருமானவரி துறை, சிபிஐயிடம் புகார் செய்தது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ ஜெயலலிதா, மாஜி மந்திரிகள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் மீது சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
அப்போது நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்ததால் என் மீது வழக்குத் தொடர சபாநாயகரிடம் அல்லது கவர்னரிடம் அனுமதி பெறவேண்டும் என்றும், இதை செய்ய சிபிஐ தவறியதால் என்னை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றும் செங்கோட்டையன் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீது நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. செங்கோட்டையன் மீது வழக்குத் தொடர சபாநாயகர் அல்லது கவர்னரிடம் அனுமதி பெறத் தேவையில்லை என்று நீதிபதி முகமது இஷாத் அலி தீர்ப்பளித்தார்.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், அரசு பதவி வகிக்கும் ஒருவர் மீது வழக்குத் தொடர முன் அனுமதி பெறத் தேவையில்லை என்று நீதிபதி தனது தீ்ர்ப்பில் கூறினார்.
இதையடுத்து இந்த வழக்கில் இருந்து செங்கோட்டையனை விடுவிக்கப்படமாட்டார்.