For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தலித்களுக்கு 'தாட்கோ' கடன் கிடைப்பதில்லை-காங்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: கவனிக்க வேண்டியவர்களை 'கவனித்தும்' கூட ஆதி திராவிட மக்களுக்கு தாட்கோ நிறுவனம் மூலம் கடனுதவி கிடைப்பதில்லை என்று சட்டமன்றத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ யசோதா குற்றம்சாட்டினார்.

சட்டசபையில் இன்று ஆதி திராவிடர் நலத்துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. அதில் யசோதா பேசுகையில்,

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை. குறிப்பாக இந்தப் பிரிவு மாணவ, மாணவியருக்கு கல்விக்காக கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட அதே அளவு நிதிதான் இந்த ஆண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இப்படி இருந்தால் ஆதி திராவிட மாணவர்களின் கல்வித்தரம் எப்படி உயரும்? அதனால் மத்தியில் ரயில்வே துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்வது போல ஆதி திராவிடர் நலத்துறைக்கென்று இங்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்து கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

மத்திய அரசு வழங்குகின்ற நிதியை முறையாக செலவழிக்க வேண்டும். அங்கிருந்து கூடுதல் நிதி பெற வேண்டுமே தவிர, வரும் நிதியை செலவு செய்யாமல் திருப்பி அனுப்பும் நிலை இருக்கக் கூடாது.

ஆதி திராவிட சமுதாயத்தை சேர்ந்த அதிகாரிகளுக்கு சரியான துறை பொறுப்புகள் வழங்கப்படுவதில்லை. போணியாக துறையும், பொறுப்புக்களும்தான் வழங்கப்படுகின்றன.

தாழ்த்தப்பட்டோர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தாட்கோ நிறுவனம் மூலம் ஆதி திராவிட மக்களுக்கு எளிதாக கடன் கிடைப்பதில்லை. நிறுவனம் பரிந்துரைத்தாலும் வங்கிகள் சொத்துப் பத்திரத்தை ஜாமீனாக கொடுத்தால்தான் கடன் தருவதாக சொல்கிறார்கள்.

ஆனால் சொத்துப் பத்திரம் இருந்தால் இந்த கடன் பெறுவதற்கே அவர்கள் தகுதியற்றவர்களாகி விடுவார்கள் என்று தாட்கோ விதி கூறுகிறது.

ஆதி திராவிட மக்கள், கிராம நல அதிகாரி முதல் துறை சார்ந்த அனைவர்களையும் 'கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து' கடனுக்காக காத்திருந்தாலும் அவர்களுக்கு கிடைப்பதில்லை.

ஆதி திராவிட சமுதாயத்தினர் இறந்தால் அவர்களுக்கு வழங்கப்படும் ஈமச்சடங்கிற்கான தொகையை அதிகரிக்க வேண்டும். பெருமாள் கோயில்களில் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக ஆதி திராவிடர்களை நியமிக்க முடியாது என்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும் என்றார் யசோதா.

அமைச்சர் பொன்முடி: எங்கள் பகுதியில் பெருமாள் கோயிலில் ஆதி திராவிட சமுதாயத்தை சேர்ந்த ஒருவர்தான் அறங்காவலராக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஒவ்வொரு கோயிலிலும் ஒரு பெண் உறுப்பினர், ஒரு ஆதி திராவிட சமுதாய உறுப்பினர் நியமிக்கப்பட வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார் என்றார்.

அமைச்சர் கே.என்.நேரு: பேசுகையில், ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலில் கூட ஆதி திராவிடர் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்றார்.

யசோதா: ஸ்ரீபெரும்புதூரில் உள்ள உடையவர் கோயில் என்னும் பெருமாள் கோயிலில் ஆதி திராவிடர் ஒருவரை அறங்காவலர் குழு உறுப்பினராக போடுமாறு கேட்டுக் கொண்டேன். ஆனால் அங்கு ஆதி திராவிடர்களை உறுப்பினர்களாக நியமிக்க முடியாது என்று அமைச்சரும், அதிகாரிகளும் தெரிவித்துவிட்டனர் என்றார்.

அறநிலையத் துறை அமைச்சர் பெரியகருப்பன்: அந்தக் கோயில்
பரம்பரை கோயில். மற்ற கோயில்களில் ஆதி திராவிடர் ஒருவரும், ஒரு பெண் உறுப்பினரும் நியமிக்கப்பட வேண்டும் என்று சட்டமே இயற்றப்பட்டுள்ளது என்றார்.

புதிரைவண்ணான் இன மேம்பாட்டக்கு வாரியம்:

ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசி பதிலுரை வழங்கினார். அவர் கூறுகையில்,

பொருளாதார, சமூக, கல்வி நிலைகளில் மிகவும் அடித்தளத்தில் வாழ்ந்து வரும் புதிரைவண்ணான் இனத்தை சேர்ந்த மக்களுக்கென்று தனி நல வாரியம் அமைக்கப்படும்., மற்ற நல வாரிய உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும் அனைத்து சலுகைகளும் இவர்களுக்கு வழங்கப்படும்.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவி விடுதிகள் அனைத்திற்கும் இந்த ஆண்டு கலர் டிவிக்கள் வழங்கப்படும்.

6 ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைபள்ளி ஆக்கவும், 6 உயர்நிலை பள்ளிகளை, மேல் நிலைப்பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும்.

இதே போல 2 அரசு உண்டி, உறைவிட, பழங்குடியினர் நடுநிலைப்பள்ளிகள் உயர் நிலைப்பள்ளியாகவும், 2 உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளியாகவும் நிலை உயர்த்தப்படும்.

சினிமா துறையில் ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களை ஊக்குவிக்க விஷுவல் மீடியா, சினிமாடோகிராபி மற்றும் ஒளிப்பதிவு போன்ற திரைப்படம் சார்ந்த பயிற்சிகள் 340 பேருக்கு வழங்கப்படும்.

இந்தாண்டு 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாட்கோ மூலமாக ஆதி திராவிட மாணவ, மாணவியருக்கு இதழியல் பயிற்சி, கடல்சார் பயிற்சி, உயர் கல்வி படிப்பதற்கான சிறப்பு பயிற்சி, தேசிய நிறுவனங்கள் மூலம் சிறப்பு பயிற்சி, விமான பணிப்பயிற்சி, ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி, திரைப்படம் சார்ந்த துறையில் பயிற்சி, செவிலிய பட்டயப் பயிற்சி, கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி உள்ளிட்ட 26 விதமான பயிற்சிகள் வழங்கப்படும்.

152 ஆதி திராவிடர் நல மாணவ, மாணவியர் விடுதிகளுக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்படும். 130 ஆதி திராவிடர் பள்ளிகளுக்கும், 141 விடுதிகளுக்கும் குடிநீர் சுத்திகரிப்பு கருவி வழங்கப்படும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 25 விடுதிகள் ரூ.30 லட்ச செலவில் பழுதுபார்த்து பராமரிக்கப்படும். இந்த துறையில் ஒதுக்கப்படும் நிதியில் 77 சதவீதம் கல்வி சார்ந்த திட்டங்களுக்கே செலவிடப்படுகிறது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X