For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாலாறு: துரைமுருகன் தூங்கிக் கொண்டிருந்தாரா?-ஜெ

By Staff
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: போர்க்கால அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தை அணுகியோ, அல்லது மத்திய காங்கிரஸ் அரசு மூலமாக ஆந்திர அரசை நிர்பந்தித்தோ, பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

கொடநாடு கெஸ்ட் ஹவுசில் ரெஸ்ட் எடுத்தபடி அவர் வெளியிட்டுள்ள இன்றைய அறிக்கையில்,

ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே குப்பம் பகுதியை அடுத்த கணேசபுரத்தில் தடுப்பு அணை கட்ட வசதியாக, அந்தப் பகுதியில் மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தார் சாலை போடப்பட்டுள்ளதாகவும், அணை கட்டும் பகுதியில் உள்ள பாறைகளின் தன்மைகளை கண்டறியும் பரிசோதனைகளை நடத்தி வருவதாகவும், முதல் கட்டமாக கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இது குறித்த தகவல்கள் தமிழக அரசின் பொதுப் பணித்துறைக்கு ஆந்திர அரசு முன் கூட்டியே தெரிவித்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

திமுகவினரின் மணல் கொள்ளையினாலும், தமிழக மக்களுக்கு எதிரான ஆந்திர அரசின் நடவடிக்கையினாலும், வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயகரமான சூழ்நிலை உருவாகி உள்ளது. இது மட்டும் அல்லாமல், விவசாய உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்படும்.

மணல் கடத்தலை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல், ஆந்திர அரசை தட்டிக்கேட்காத திமுக அரசுக்கு முதலில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது ஆட்சிக் காலத்தில், பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பு அணை கட்ட இருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்தவுடன், மிகப் பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதாக அன்றைய எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன் கொக்கரித்தார். இது குறித்த செய்திகள் பத்திரிகைகளில் வந்தவுடன், உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகளை அந்தப் பகுதிக்கு அனுப்பி வைத்து உண்மை நிலவரத்தை கண்டறியுமாறு ஆணையிட்டேன்.

ஆனால், அப்போது அந்தப்பகுதியில் எந்தவிதமான நடவடிக்கையும் ஆந்திர அரசால் தொடங்கப்படவில்லை. இருப்பினும், ஆந்திர அரசின் நடவடிக்கைகளை கூர்ந்து கண்காணிக்குமாறு பொதுப்பணித் துறையினரைக் கேட்டுக்கொண்டேன்.

அதோடு நின்றுவிடவில்லை. ஆந்திர மாநில முதல்வருக்கு இது குறித்து கடிதம் ஒன்றையும் எழுதினேன். ஆனால், ஆந்திர மாநில முதல்வரிடமிருந்தோ அல்லது ஆந்திர அரசிடமிருந்தோ எந்தவிதமான பதிலும் வரவில்லை.

இதையடுத்து, 1892ம் ஆண்டு ஒப்பந்தத்தை மீறிய ஆந்திர அரசின் செயலை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக எனது ஆட்சிக் காலத்தில் 2006ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வழக்குத் தொடரப்பட்டது.

ஆனால் இன்று என்ன நிலைமை?. தடுப்பு அணை கட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இது தான் ஒத்த கருத்துகளுடைய கட்சிகள் ஆட்சி புரியும் லட்சணமா?. இதுவரை துரைமுருகன் என்ன தூங்கிக் கொண்டிருந்தாரா?

திமுக அரசு பொறுப்பேற்ற மூன்று ஆண்டு கால ஆட்சியில், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை துரிதப்படுத்தி, ஆந்திர அரசின் தடுப்பு அணை கட்டும் பணியை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்திருக்கலாம்; அல்லது மத்திய அரசில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி ஆந்திர மாநில காங்கிரஸ் அரசிற்கு ஒரு நிர்ப்பந்தத்தை கருணாநிதி ஏற்படுத்தி இருக்கலாம்.

அல்லது ஆந்திர அரசுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி தடுப்பு அணை கட்டுவதை நிறுத்தியிருக்கலாம். எதையுமே செய்யவில்லையே!.

காப்புக் காடுகள் பகுதியில் தான் ஆந்திர அரசு தடுப்பு அணை கட்டும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தப்பகுதியில் இது போன்ற பணிகளை மேற்கொள்ள மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி வேண்டும்.

2009ம் ஆண்டு மே மாதம் வரை திமுகவின் வசம் தான் சுற்றுச்சூழல் அமைச்சகம் இருந்தது. காப்புக் காடுகள் பகுதியில் தடுப்பு அணை கட்ட மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்திடம் ஆந்திர அரசு அனுமதி கோரியதா?. அனுமதி கோரியதென்றால் அதற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததா?.
அனுமதி அளிக்கவில்லை என்றால், அதை மீறி தடுப்பு அணை கட்டும் பணிகளை மேற்கொண்ட ஆந்திர அரசின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்றால் ஏன் எடுக்கப்படவில்லை? கருணாநிதி இது குறித்து வலியுறுத்தினாரா? இவற்றிற்கெல்லாம் கருணாநிதி விடையளிக்கத் தயாரா?

போர்க்கால அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தை அணுகியோ, அல்லது மத்திய காங்கிரஸ் அரசு மூலமாக ஆந்திர அரசை நிர்பந்தித்தோ, பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்திட முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X