For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மும்பை-புனேவில் பன்றிக் காய்ச்சல் பீதி-மருத்துவமனைகளுக்கு படையெடுக்கும் மக்கள்

By Staff
Google Oneindia Tamil News

மும்பை: புனேவில் 14 வயது சிறுமி ரீட்டா ஷேக் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானதைத் தொடர்ந்து புனேவிலும், மும்பையிலும் பன்றிக் காய்ச்சல் பீதி வேகமாக பரவியுள்ளது. மருத்துவமனைகளுக்கு குழந்தைகளுடன் மக்கள் படையெடுத்து வருவதால் மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

ரீட்டா படித்த செயின் ஆன்ஸ் பள்ளியில் மேலும் நான்கு பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த பீதி அதிகரித்துள்ளது.

புதன்கிழமை மாலை ஒரு சிறுமிக்கும், இன்று காலை 3 பேருக்கும் பன்றிக் காய்ச்சல் பரவியிருப்பது உறுதியானது. அவர்களில் ஒரு சிறுமி ரீட்டாவின் தோழி ஆவார். நான்கு சிறுமிகளும் தற்போது நாய்டு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

செயின்ட் ஆன்ஸ் பள்ளி மாணவிகள் அனைவரும் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகின்றன். இன்று இப்பள்ளி திறக்கப்படுவதாக இருந்தது. ஆனால் தற்போது நிலைமை சரியில்லாததால் எட்டு நாட்களுக்கு அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பன்றிக் காய்ச்சல் தொடர்பாக தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுக்க வழியில்லாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நாங்கள் பணம் கொடுத்து சிகி்ச்சை பெறத் தயார். ஆனால் அரசு தனியார் மருத்துவனைகள் சிகிச்சை அளிக்க தடை விதித்துள்ளது.

அரசு மருத்துவமனைகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டியுள்ளது. ஆனால் அங்கு போதிய வசதிகள் இல்லை என்கிறார் பரஸ் என்ற ஒரு தந்தை.

தற்போது புனேவில் உள்ள பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க அனுமதிக்கப்பட்டுள்ள ஒரே மருத்துவமனையான நாயுடு மருத்துவமனையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஏகப்பட்ட பெற்றோர் தங்களது குழந்தைளை இங்கு அழைத்து வந்தவண்ணம் உள்ளனர். ஆனால் போதிய வசதிகள் இல்லாததால், அனைவருக்கும் சிகிச்சை தருவதும், சோதனைகள் நடத்துவதும் தாமதமாகி வருகிறது.

நேற்று ஒரேநாளில் சுமார் 12 ஆயிரம் பேர் புனேயில் சோதனை செய்து கொண்டனர். இவர்களில் 20 பேருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருப்பதாக டாக்டர்கள் சந்தேகித்தனர். இதையடுத்து தனி அறைகளில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

நோயாளிகள் அதிகரிப்பு காரணமாக டாக்டர்கள் மிகவும் திணறினார்கள். உடனடியாக நாயுடு மருத்துவமனைக்கு கூடுதல் டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர். என்றாலும் நோயாளிகள் 2 மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்தே சிகிச்சை பெற முடிந்தது.

புனே நகருக்கு பன்றிக் காய்ச்சலை முதன்முதலில் கொண்டு வந்தது, அமெரிக்கா சென்று வந்த மாணவ-மாணவிகள்தான். எனவே பள்ளிகளில் பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்க 42 மருத்துவக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ளது.

மேலும், பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவாமல் தடுக்க உதவும் என்-95 முகமூடி கிடைப்பதும் பற்றாக்குறையாக உள்ளது. அதைத் தேடியும் மக்கள் அலைகின்றனர்.

இதேபோல மும்பையிலும் மக்கள் பன்றிக் காய்ச்சல் சோதனைகளுக்காக மருத்துவமனைகளுக்குப் படையெடுத்து வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 24 பேருக்கு பன்றிக் காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் 8 பேர் டெல்லியைச் சேர்ந்தவர்கள்.

டெல்லி ஐஐடியைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளது. ஹைதராபாத்தில் 13 வயது சிறுமிக்கு பரவியுள்ளது.

மொத்தமே 18 ஆய்வகங்கள்தான்...

இதற்கிடையே, பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்டோருக்கான மாதிரிகளை ஆய்வு செய்ய இந்தியாவில் மொத்தமே 18 ஆய்வகங்கள்தான் உள்ளன. அவற்றில் நான்கு மட்டுமே தற்போது செயல்படும் நிலையில் உள்ளனவாம். மற்ற 14ம் முறையாக செயல்படும் நிலையில் இல்லையாம்.

பீதி வேண்டாம் - தமிழக அமைச்சர்

இதற்கிடையே, பன்றிக் காய்ச்சல் குறித்து மக்கள் பீதி அடையத் தேவையில்லை என்று தமிழக சுகாதார அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பன்றிக் காய்ச்சல் பரவலைத் தடுக்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எனவே மக்கள் பீதி அடையத் தேவையில்லை என்றார்.

சிறுமி பலி-மருத்துவமனை மீது போலீஸில் புகார்:

இந் நிலையில் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியான சிறுமி ரிடா ஷேக்கின் குடும்பத்தினர் அதில் சம்பந்தப்பட் ஜஹாங்கீர் மருத்துவமனை மற்றும் ரூபி ஹால் கிளினிக் ஆகியவற்றின் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று போலீஸில் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்துள்ளனர்.

இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியான முதல் நபர் ரிடாதான். மருத்துவமனைகளின் அலட்சியம் காரணமாகவே ரிடா இறந்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந் நிலையில் ரிடாவின் குடும்பத்தினர் இன்று போலீஸில் புகார் கொடுத்தனர்.

அதில், ஜஹாங்கீர் மருத்துவமனை மற்றும் ரூபி ஹால் கிளினிக் ஆகியவற்றின் அலட்சியத்தால்தான் ரிடா ஷேக் உயிரிழக்க நேரிட்டது.

குறிப்பாக ஜஹாங்கீர் மருத்துவமனையின் டாக்டர் சஞ்சய் அகர்வால் சரியான முறையில் சிகிச்சை அளிக்கவில்லை, ரிடாவுக்கு ஏற்பட்டிருப்பது பன்றிக் காய்ச்சல் வைரஸ் என்பதையும் அவர் கண்டறியாமல் சிகிச்சை தந்ததால்தான் உயிரிழப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து இரு மருத்துவமனைகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்தி பின்னர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என்று ரிடாவின் உறவினரான ஆயிஷா ஷேக்கின் வக்கீல் ஆசிப் லேம்ப்வாலா தெரிவித்தார்.

இதேபோல நுகர்வோர் கோர்ட்டிலும் வழக்குப் பதிவு செய்யப் போவதாகவும் ஆசிப் தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X