For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மின்னணு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய முடியும்-சென்னையில் நிபுணர்கள் விளக்கம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் குளறுபடிகள் செய்ய முடியும் என்பதை சென்னையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் நிபுணர்கள் விளக்கிக் காட்டினர்.

ஆனால், தேர்தல் ஆணையம் பயன்படுத்தும் எந்திரத்தில் பல்வேறு விசேஷ வசதிகள் உள்ளது. அதில் தில்லுமுல்லு செய்ய முடியாது என இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் தலைமை தேர்தல் ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி மறுத்துவிட்டார்.

வாக்குப்பதிவு எந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்த கருத்தரங்கு ஒன்று நேற்று சென்னை தியாகராயநகரில் நடந்தது. இந்த கருத்தரங்கிற்கு வக்கீல்கள் சமூக நீதிப்பேரவை, இந்திய தேர்தல் ஆணைய சீர்திருத்தத்திற்கான தேசிய பேரவை ஆகியவை ஏற்பாடு செய்திருந்தது.

இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம், அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் மனோஜ் பாண்டியன், பாஜகவின் பொன். ராதாகிருஷ்ணன், மதிமுக செய்தி தொடர்பாளர் ஜி. நன்மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது கருத்தரங்கில் ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை காண்பித்து அதன் செயல்பாடுகள் பற்றி விளக்கினார்கள். பின்னர் அந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் வைக்கப்பட்டது.

அந்த எந்திரத்தில் சமீபத்தில் முடிந்த சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட 6 வேட்பாளர்கள் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அப்போது கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்தவர்கள் வாக்களிக்க விருப்பமுள்ளவர்கள் வரலாம் என கூறினர்.

இதையடுத்து 30 பேர் வாக்களித்தனர். அவர்களிடம் வாக்களித்துவிட்டு யாருக்கும் வாக்களித்தோம் என அருகில் இருக்கும் மற்றொரு தாளில் எழுதி வைக்குமாறு கூறப்பட்டது.

கிருஷ்ணமூர்த்தி வெளிநடப்பு...

முதலில் வாக்களித்தவர் முதல் பட்டனை அழுத்தினார். இதையடுத்து ப.சிதம்பரத்துக்கு வாக்கு விழுந்ததாக அறிவிக்கப்பட்டது. அரசியல் கட்சியை சேர்ந்தவர்களின் பெயரை பயன்படுத்தியதை கண்ட முன்னாள் தலைமை தேர்தல் ஆணையாளர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி, நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக கூறினார்.

இதையடுத்து பெயர்கள் பயன்படுத்தப்படுவதை தவிர்த்து விடுவதாக கூறி கிருஷ்ணமூர்த்தியை கருத்தரங்கை ஏற்பாடு செய்தவர்கள் நிகழ்ச்சியை பார்க்க செய்தனர்.

வாக்குப்பதிவு முடிவில் முதலில் இருந்த பெயருக்கு 15 ஓட்டுக்கள் பதிவானதாக எந்திரம் தெரிவித்தது. ஆனால், முதல் நபருக்கு இரண்டு பேர் மட்டும் தான் ஓட்டு போட்டதாக அருகில் தாளில் கூறிப்பட்டிருந்தது. இதையடுத்து மின்னணு இயந்திரத்தில் குளறுபடி செய்ய முடியும் என்பது நிரூபிக்கப்பட்டதாக கருத்தரங்கை நடத்தியவர்கள் தெரிவித்தனர்.

கிருஷ்ணமூர்த்தி மறுப்பு...

ஆனால் இதை கிருஷ்ணமூர்த்தி நிராகரித்தார். 'வாக்குப் பதிவுக்குப்' பின்னர் அவர் பேசுகையில்,

தேர்தல் ஆணையத்தின் மின்னணு வாக்குபதிவு எந்திரத்தில் பல ரகசிய பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் உள்ளன. ஒரு மாநிலத்தில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அடுத்த தேர்தலில் வேறு மாநிலத்திற்கு அனுப்பப்படுகிறது. எந்த எந்திரம் எந்த வாக்குச்சாவடிக்கு செல்லும் என்று யாருக்கும் தெரியாது.

கால்குலேட்டர் தான், கம்ப்யூட்டர் அல்ல...

இங்கு செயல்விளக்கம் காண்பிக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு எடுத்துச் செல்வது உங்கள் விருப்பம். என்னைப் பொறுத்தவரை மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை தவறாக பயன்படுத்த முடியாது. அது ஒரு கால்குலேட்டர் தான். கம்ப்யூட்டர் அல்ல என்றார்.

சந்தேகங்களை தீர்க்க வேண்டும்-ராமதாஸ்...

நிகழ்ச்சியில், பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில்,

மின்னணு எந்திரத்தில் தொடர்ந்து பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. அந்த சந்தேகங்களை தீர்க்க வேண்டிய தேர்தல் ஆணையத்தின் கடமை. ஆனால், அவர்கள் வாக்குப் பதிவு இயந்திரத்தில் தவறு செய்ய முடியாது என ஒரு வரியில் பதில் சொல்வது ஏன்?

வாக்குப் பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுப்பியுள்ள அனைவரும் தேர்தல் ஆணையத்தால் அழைக்கப்பட வேண்டும். அவர்கள் தங்கள் குற்றச்சாட்டுகளை தெளிவாக விளக்க வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.

தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடைந்த அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் மின்னணு வாக்குப் பதிவு எந்திர முறையை கைவிட்டது ஏன்? என்பது பற்றி நாம் ஆராய வேண்டும்.

வி.பி. சிங் பிரதமராக இருந்தபோதே, மின்னணு வாக்குப் பதிவு முறையை செயல்படுத்த முயற்சி நடந்தது. ஆனால் இந்த முறை நம்பகத்தன்மை அற்றது எனக் கூறி, அதற்கு வி.பி. சிங் மறுத்து விட்டார் என்றார் ராமதாஸ்.

ஜெர்மனி நீதிமன்ற தீர்ப்பு...

அதிமுக வக்கீல்கள் பிரிவு செயலாளர் பி.எச். மனோஜ்பாண்டியன் பேசுகையில், "மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தவறு வர வாய்ப்புள்ளது என்று கூறி ஜெர்மனி நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் முறைகேடுகளுக்கு வாய்ப்பளிக்க கூடியது என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா முன்பே வழக்கு தொடர்ந்தார். எனவே மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்துவது பற்றி தேர்தல் ஆணையம் பரிசீலிக்கவேண்டும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X