For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக தியாகிகள் பென்ஷன் ரூ. 5,000 ஆக உயர்வு

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் மாத பென்ஷன் ரூ. 4,000ல் இருந்து ரூ. 5,000ஆக உயர்த்தப்படும் என்றும் தியாகிகளின் குடும்பத்தாருக்கு அளிக்கப்படும் பென்ஷன் தொகை ரூ. 2,000ல் இருந்து ரூ. 2,500 ஆக அதிகரிக்கப்படும் என்றும் முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

கோட்டையில் சுதந்திர தின கொடியேற்றி உரையாற்றிய அவர் கூறுகையில்,

இந்த ஆகஸ்ட் திங்கள் 15ம் நாள் ஏறத்தாழ 200 ஆண்டுகள் நமது நாட்டை அடிமைப்படுத்தி ஆண்ட ஆங்கிலேயர்கள் வெளியேறிய நாள். நமது நாட்டை நாமே ஆளும் உரிமை பெற்ற உன்னதமான நாள்.

இந்த நன்னாளில் 18 ஆண்டுகளாக என் நெஞ்சை சுட்டெரித்துக் கொண்டிருந்த கவலைக்கு மாமருந்தாக பெங்களூரில் திறக்கப்படாமல் இருந்த அய்யன் திருவள்ளுவர் சிலையை அருமை சகோதரர் கர்நாடக முதல்வர் எதியூரப்பாவின் சீரிய ஒத்துழைப்பால் கடந்த 9ம் தேதி திறந்து வைத்தேன்.

அந்த மனநிறைவோடு, திராவிட மொழி குடும்பத்தின் முக்கிய மொழிகளில் ஒன்றாகிய புகழ்மிக்க கவிஞர் சர்வஞ்னர் சிலையை சென்னையில் எதியூரப்பா திறந்து வைத்தார்.

தமிழகம்-கர்நாடகம் ஆகிய இரு மாநில மக்களிடையே நல்லுறவு தழைக்கச் செய்திடும் திருப்பணிகளை நிறைவேற்றிய மனநிறைவோடு இன்று 13வது முறையாக இந்த கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையை நிகழ்த்துவதில் நான் உவகை கொள்கிறேன்.

கத்தியின்றி ரத்தமின்றி ஆயுதம் ஏந்தாமல் அகிம்சா யுத்தம் நடத்தி வெள்ளை ஏகாதிபத்தியத்தை விரட்டிய அண்ணல் காந்தியடிகள் தமிழ் மண்ணை நேசித்தவர். 14 முறை தமிழகத்துக்கு வந்த காந்தியடிகளுக்கு விடுதலை இயக்கத்துக்கான போர் முறைகளை வகுப்பதில் தமிழகம் ஒரு களமாக பயன்பட்டிருக்கிறது.

விடுதலை போர்க் களத்தில் பல தியாக முத்திரைகளை பதித்த தமிழகம், நாடு சுதந்திரம் பெற்றபின் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு திரு உருவச் சிலைகள், மணி மண்டபங்கள் போன்ற பல நினைவுச் சின்னங்களையும் அமைத்து தியாகிகளை போற்றி வருகிறது.

இந்த ஆண்டு பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழா என்பதையும், தியாகி கக்கனின் நூற்றாண்டு விழா என்பதையும் மனதிலே கொண்டு சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியமான 4 ஆயிரம் ரூபாயை 5 ஆயிரம் ரூபாயாகவும்,

அவர்களது வாரிசுகளுக்கு வழங்கப்பட்டு வரும் குடும்ப ஓய்வூதியமான 2 ஆயிரம் ரூபாயை 2,500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்க இந்த அரசு முடிவு செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இது அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரும்.

தமிழக அரசியலில் தன்மான உணர்வுகளை மீட்டி எழுச்சியை ஏற்படுத்திய அறிவு ஆசான், பேரறிஞர் அண்ணா சுட்டிக் காட்டி வந்த பொறுப்புணர்ச்சியோடு திமுக அரசு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திட பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

2006க்குப் பிறகு இதுவரை புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படாமல் பல்வேறு வரிச் சலுகைகளை வழங்கி இந்தியாவில் எந்த ஒரு மாநிலமும் நிறைவேற்றாத பல புதிய திட்டங்களை நிறைவேற்றி தமிழக மக்களின் அரசியல், சமூக, பொருளாதார நிலைகளை இந்த அரசு மேம்படுத்தி வருகிறது.

இலங்கைப் போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவ தமிழக அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்று தமிழக மக்கள் வழங்கிய ரூ. 52 கோடி நிதி உதவியில் இதுவரை 4 கட்டங்களில் ரூ. 38 கோடியே 83 லட்சம் மதிப்பிலான அரிசி, பருப்பு, துணி உள்பட பல்வேறு பொருட்கள் தமிழக அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தவிர இலங்கை தமிழ் மக்களின் நிவாரண உதவிக்காக பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்த ரூ. 500 கோடியுடன் தமிழக அரசின் சார்பில் ரூ. 25 கோடி நிதி உதவி அளிக்கப்படும்.

13வது நிதி ஆணையத்தின் தலைவர் டாக்டர் விஜய் கேல்கர், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி திண்டுக்கல், சிவகங்கை, கடலூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு தேசிய விருது பெற்றுள்ள தமிழகம் மற்ற மாநிலங்களெல்லாம் பின்பற்றப்பட வேண்டிய முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்கிக் கொண்டிருக்கிறது என்று பாராட்டியுள்ளார்.

சுதந்திரத்தின் பயன் தமிழக மக்களுக்கு குறிப்பாக ஏழைகளுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும், அவர்கள் வாழ்வு மேலும் வளம்பெற வேண்டும், சமூக அறிவியல் பொருளாதார நிலைகளில் தொடர்ந்து முன்னேறி எல்லா வகையிலும் இந்தியாவில் தமிழகமே முதல் மாநிலம் எனும் நிலை உறுதி செய்யப்பட வேண்டும் என்ற விழைவோடு ஒவ்வொரு நொடி நேரத்தையும் எண்ணி எண்ணி செலவிட்டு வருகிறது இந்த அரசு என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X