இந்துக்களை இழிவுபடுத்திய முதல்வர்-ராம.கோபாலன்
சென்னை: சர்வஞ்னர் சிலை திறப்பு விழாவில் மீண்டும் இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் முதல்வர் கருணாநிதி பேசியுள்ளார் என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 13ம் தேதி சென்னையில் நடந்த கன்னட கவிஞர் சர்வஞ்னரின் சிலை திறப்பு விழாவில் பேசிய முதல்வர் கருணாநிதி சர்வஞ்னரின் பாடலுக்கு 'தனி உரை' எழுதி மீண்டும் தான் ஒரு இந்துக்களின் விரோதி என்பதை வெளிக்காட்டியுள்ளார்.
இதனைக் கடுமையாகக் கண்டிக்கிறோம்.
''படைத்தவன் பிரம்மன் எனும்பற்று வேண்டற்க
படைத்தவன் சிரத்தை சிவனறுக்க பிறிதொன்றை
படைத்துக் கொள்ளாததேன் சர்வஞ்ன'' என்று தனது மனதுக்கு 'பற்று கொள்ளாதே' என்று பாடியிருக்கிறார் சர்வஞ்ன.
"ஈசனோடாயினும் ஆசை அறுமின்' என்ற திருமூலர் வார்த்தையைப்போல 'பற்று வேண்டாம்' என்று சொன்ன தத்துவ வார்த்தையை முதல்வர் எவ்வாறு திரித்துக் கூறுகிறார் பாருங்கள்...
கருணாநிதி பேசுகையில், "பிரம்மனைத் தனது அந்தப்புரத்தில் பின்னால் இருந்து பார்த்த பார்வதி, பிரம்மனின் ஐந்து தலைகளை வைத்து சிவனோ என்று எண்ணி ஏமாந்தாள். இதையறிந்த சிவன், பிரம்மாவிற்கு ஐந்து தலைகள் இருப்பதனால் தானே பார்வதி ஏமாந்தாள் என்று ஒருதலையை கிள்ளி எறிந்தார். பிரம்மா படைப்புத் தொழிலில் கெட்டிக்காரன் ஆயிற்றே; ஏன் இன்னொரு தலையைப் படைத்துக்கொள்ளவில்லை என்று பிரம்மனைப் பார்த்துக் கேட்கிறார் சர்வக்ஞர்! பெரியாரின் கருத்துக்களை நினைவுபடுத்துகிறார் சர்வக்ஞர்!.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
இரு மாநில நல்லுறவுக்குப் பாலமாக அமைய வேண்டிய விழாவில், இந்துக்களைக் கீழ்த்தரமாகப் பேசிய முதல்வரின் பேச்சு வேதனையை அளிக்கிறது. வீர சைவ மரபில் தோன்றிய சிவனடியாராக வாழ்ந்தவர் சர்வஞ்னர். அத்தகைய ஞானியின் கருத்தைத் திரித்துக் கூறி இந்துக்களை இழிவு படுத்தியிருக்கிறார் தமிழக முதல்வர்!
தான் என்றும் இந்து விரோதிதான் என்பதை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார். இந்துக்களை இழிவுபடுத்தத் துணியும் முதல்வர் கருணாநிதிக்கு ஏன் முஸ்லீம், கிறிஸ்தவ மதங்களின் கதைகள் தெரியாதா? ஏன் அவற்றை வம்புக்கு இழுப்பதில்லை? அவர்களைப் பற்றிப் பேசினால் கருணாநிதி வீதியில் வர முடியுமா?.
இந்துக்களின் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு!. இந்துக்களை இழிவுபடுத்துவதன் மூலம், இந்துக்கள் தங்கள் சமய, தெய்வ நம்பிக்கைகளைக் கைவிட்டு மதமாறத் தூண்டும் வேலையைத் தான் பகுத்தறிவு என்ற பெயரில் முதல்வர் கருணாநிதி செய்து வருகிறார்.
இந்து நம்பிக்கைகளை, இந்து தெய்வங்களைக் கேலி, கிண்டல் செய்து இழிவுபடுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இந்தச் சதித் திட்டத்தை இந்துக்கள் உணர வேண்டும். இத்தகைய பேச்சுக்கு கட்சிக்கு அப்பாற்பட்டு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ராம கோபாலன்.