சென்னையில் மேலும் 2 பேருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி
சென்னை: சென்னையில் மேலும் இருவருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி காணப்பட்டதால் அவர்கள் தண்டையார்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (31). அதேபோல சிவகங்கை மாட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (21). இவருவரும் முறையே துபாய் மற்றும் சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்தனர்.
விமான நிலையத்தில் இருவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது இருவருக்கும் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டதால், உடனடியாக தண்டையார்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
தமிழகத்தில் இதுவரை 180க்கும் மேற்பட்டோருக்கு பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளது. இதில் கிட்டத்தட்ட பாதிப்பேர் குணமடைந்து விட்டனர். மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதற்கிடையே பன்றிக் காய்ச்சல் பரவலைத் தடுக்க தமிழகத்தில், பகல் நேர சினிமாக் கட்சிகளை ரத்து செய்ய அரசு யோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சுகாதாரத் துறை இயக்குநர் இளங்கோ கூறுகையில், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான முன்எச்சரிக்கையை அரசு எடுத்து வருகிறது.
பல ஊர்களில் இருந்து வருபவர்கள் சினிமா தியேட்டருக்கு செல்கிறார்கள். சில தியேட்டர்களில் ஆங்காங்கே எச்சில் துப்பி வைக்கிறார்கள். இது சுகாதார சீர்கேடாகும். இதை தவிர்க்க வேண்டும்.
முடிந்தவரை பகல் காட்சி சினிமாவை தவிர்ப்பது நல்லது. பகல் காட்சிகளை ரத்து செய்ய சொல்லலாமா என்றும் ஆலோசனை நடந்து வருகிறது.
இதேபோல் ஏ.சி. ஓட்டல்களில், கூட்ட அரங்குகளில் நீண்ட நேரம் இருப்பதை தவிர்ப்பது நல்லது. திறந்த வெளி ஹால்களில் கூட்டம் நடத்துவது நல்லது.
பன்றிக்காய்ச்சல் ஏ.சி. அறைகளில் வேகமாக பரவும் என்பதால் முன்பின் தெரியாதவர்கள் ஒன்று கூடும் கூட்ட அரங்குகளில் பங்கேற்பதில் கவனமுடன் இருக்க வேண்டும்.
29-ந்தேதி நடைபெற உள்ள வேளாங்கண்ணி திருவிழாவுக்கு வெளியூர்களில் இருந்து லட்சக்கணக்கில் பொது மக்கள் வருவார்கள்.
இதனால் வேளாங்கண்ணி நகருக்குள் நுழையும் அனைத்து பாதைகளையும் சீல் வைத்து அனைவரையும் பரிசோதித்து அனுப்ப டாக்டர்கள் குழுவினர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக 40-க்கும் மேற்பட்ட டாக்டர்கள், அங்கு நியமிக்கப்பட உள்ளனர். ஆம்புலன்ஸ் வசதி, பரிசோதனை மையம், 20 படுக்கை கொண்ட தற்காலிக மருத்துவமனையும் அங்கு உருவாக்கப்படுகிறது.
இதேபோல திருவண்ணாமலை ஆசிரமங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து ஆட்கள் வருவதால் அங்குள்ள ரமணா ஆசிரமம், வேதகிரி ஆசிரமங்களை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.