திருச்செந்தூர் தொகுதி இடைத் தேர்தல் எப்போது?
சென்னை: காலியாகவுள்ள திருச்செந்தூர் சட்டசபைக்கு அனேகமாக அடுத்த மாதம் இடைத் தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் கம்பம் ராமகிருஷ்ணன், தொண்டாமுத்தூர் கண்ணப்பன் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்து விட்டு திமுகவில் இணைந்தனர்.
அதேபோல இளையாங்குடி கண்ணப்பன் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார். ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வராஜ் மரணமடைந்தார். இதனால் காலியான இந்த ஐந்து தொகுதிகளுக்கும் சமீபத்தில் இடைத் தேர்தல் நடந்தது. ஐந்திலும் திமுக கூட்டணியே வென்றது.
இந்த நிலையில் சமீபத்தில் திருச்செந்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் அக்கட்சியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இதையடுத்து எம்.எல்.ஏ. பதவியிலிருந்து விலகிய அவர் திமுகவில் இணைந்தார்.
இதனால் காலியாகவுள்ள திருச்செந்தூர் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்த வேண்டியுள்ளது.
மகாராஷ்டிரா, அருணாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு செப்டம்பர் மாதத்தில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த சமயத்தில் திருச்செந்தூருக்கும் இடைத் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் முதல் வாரத்தில் இதுதொடர்பாக அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தேர்தல் ஆணைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பொதுத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில், அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட அனிதா ராதாகிருஷ்ணன், திமுக வேட்பாளர் ஜெயசீலனை 13,916 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
அதிமுகவுக்கு 58,600 ஓட்டுக்களும், திமுகவுக்கு 44,684 ஓட்டுக்களும் கிடைத்தன. தேமுதிகவின் கணேசன் 3,756 ஓட்டுக்களைப் பெற்றார்.