பிராந்தி என நினைத்து விஷ பானம் குடித்த மாணவன் பலி
மதுரை: மதுரை அருகே பிராந்தி என நினைத்து மர்ம பானத்தைக் குடித்த மாணவன் பலியானான். 3 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வாடிப்பட்டிக்கு அருகில் உள்ள டி. மேட்டுப்பட்டியைச் சேர்ந்த அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வந்த மாணவன் குமார்.
இவன், கொழிஞ்சிபட்டி ஓடை பகுதியில் ஒரு பிராந்தி பாட்டில் கிடப்பதை பார்த்து அதை பள்ளிக்கு எடுத்து சென்றிருக்கிறான். அங்கு செல்வகுமார், நாகராஜ், சின்ன நாகராஜ் மற்றும் ராஜா ஆகியோர், குமாரிடம் இருந்த பிராந்தி பாட்டிலை வாங்கிக்கொண்டு பள்ளிக்கு வெளியே இருக்கும் சிறு குன்று பகுதிக்கு சென்று அதை குடித்திருக்கிறார்கள்.
அதைக் குடித்த கொஞ்ச நேரத்தில் நாகராஜூக்கு கடும் வயிற்று வலி வரவே அவன் வீட்டிற்கு சென்றிருக்கிறான். அங்கு அவனுக்கு வாந்தி மயக்கம் வந்ததால் வீட்டில் உள்ளவர்கள் அவனை பாலமேடு மருத்துவமனைக்கு கூட்டி சென்றிருக்கிறார்கள்.
பின்னர் மதுரை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான் நாகராஜு. ஆனால் வழியிலேயே அந்த மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
அவனுடன் சேர்ந்து மர்ம பானத்தைக் குடித்த மற்ற 3 மாணவர்களும் வீட்டில் மயங்கி விழவே, அவர்களும் மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டனர்.
அவர்கள் குடித்தது பிராந்தியா அல்லது பிராந்தி பாட்டிலில் இருந்த பூச்சி மருந்தா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.