• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொடநாட்டில் முகாம்- 100வது நாளைத் தாண்டிய ஜெ.

By Staff
|

Jayalalitha
சென்னை: லோக்சபா தேர்தல் தோல்விக்குப் பின்னர் கொடநாடு எஸ்டேட்டுக்குப் போன ஜெயலலிதா 100வது நாளைக் கடந்துள்ளார். ஒரு மிக முக்கிய அரசியல் கட்சியின் தலைவர் இவ்வாறு சேர்ந்தாற்போல இத்தனை நாட்கள் சென்னையை விட்டு விலகியிருப்பது இதுவே முதல் முறை.

ஜெயலலிதா கொடநாடு போனதன் 100வது நாளை இப்படியும் சொல்லலாம் - தமிழக அரசியலில் தனது ஆதிக்கத்தை அவர் இழந்து 100 நாட்களாகின்றன.

லோக்சபாத் தேர்தல் தோல்விக்குப் பின்னர் கடந்த மே 30ம் தேதி கொடநாடு சென்றார் ஜெயலலிதா. இன்றோடு 106 நாட்களாகின்றன.

ஜெயலலிதாவின் நம்பர் ஒன் எதிரியான திமுக இடம் பெற்றுள்ள மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்களைத் தாண்டியுள்ள நிலையில், ஜெயலலிதா மலைக்குப் போய் 100 நாட்களைத் தாண்டிருப்பது வேடிக்கை விநோதமாகும்.

862 ஏக்கர் பரப்பளவிலான பிரமாண்ட கொட நாடு எஸ்ட்டேடுக்குள் இருக்கும் பங்களாவுக்குள் கடந்த 106 நாட்களாக முடங்கியிருக்கும் ஜெயலலிதா எப்போது வெளியே வருவார் என்பது தெரியவில்லை.

கொடநாடு எஸ்டேட்டிலிருந்து இப்போது அதிமுகவை நடத்தி வரும் ஜெயலலிதா, இந்த 106 நாட்களில் சில சரிவுகளையும், பல விமர்சனங்களையும் சந்தித்துள்ளார்.

வழக்கம் போல பல்வேறு போராட்டங்களை அறிக்கைகள் மூலம் டிக்டேட் செய்து வரும் ஜெயலலிதா, கட்சியின் முக்கியப் பிரமுகரமாக இருந்த அனிதா ராதாகிருஷ்ணனை டிஸ்மிஸ் செய்தார். அதேபோல நடிகர் எஸ்.வி.சேகரையும் கட்சியை விட்டுத் தூக்கினார்.

தன்னைப் பற்றியும், தனது அரசியல் ஸ்டைல் குறித்தும், கட்சியினர் திமுகவுக்குத் தாவப் போவதாக தொடர்ந்து எழுந்து வரும் வதந்திகளையும் உரிய முறையில் தடுத்து நிறுத்தவும், அவற்றுக்கு உறுதியான பதிலடி தரவும் அவர் முயலவில்லை.

கூட்டணிக் கட்சித் தலைவர்கள் யாரையும் இந்த 100 நாட்களில் அவர் சந்திக்கவே இல்லை. (நேற்று தான் பாமக தலைவர் ஜி.கே.மணியை சந்தித்தார்)

அதிமுகவுக்கும், மக்களுக்கும் இடையிலான தூரம் மட்டுமல்லாமல், ஜெயலலிதாவுக்கும், அதிமுகவினருக்கும் இடையிலான தூரமும் கூட அதிகரித்துப் போய் விட்டது.

கொடநாடு எஸ்ட்டேடில் அவர் ரெஸ்ட் எடுத்து வரும் நிலையில், அதிமுகவால் புறக்கணிக்கப்பட்ட ஐந்து தொகுதி இடைத் தேர்தலை தேமுதிக சரியாகப் பயன்படுத்திக் கொண்டு தனது வாக்கு வங்கியை ஏற்றி வைத்து விட்டது. திமுகவுக்கும் ஓசியாக கணிசமான வாக்குகள் கிடைத்து விட்டன.

ஜெயலலிதா இப்படி தொடர்ந்து கொடநாட்டில் உட்கார்ந்திருப்பதால் எதிர்க்கட்சியினருக்கு கை நிறையப் பொங்கலைக் கொடுத்து கூடவே ஊட்டியும் விட்டது போலாகி விட்டது. அவர்களின் கேலி, நக்கல், நையாண்டி கலந்த கிண்டலுக்குப் பதிலளிக்க முடியாமல் நெளிகின்றனர் அதிமுகவினர்.

சென்னையைச் சேர்ந்த ஒரு திமுக எம்.எல்.ஏ. கூறுகையில், கொடநாட்டில் நிலவும் கிளைமேட், ஜெயலலிதாவுக்கு தப்புத் தப்பாக முடிவெடுக்கத் தோன்றுகிறதோ என்னவோ. இது எங்களுக்கு லாபம்தான். இவர் அங்கேயே இருந்தால் எங்களுக்கு நல்லதுதான் என்கிறார்.

ஆனால் அதிமுகவினரோ வேறு மாதிரியாக கூறுகிறார்கள் அல்லது சமாளிக்கிறார்கள்.

ஒரு முன்னாள் அதிமுக அமைச்சர் கூறுகையில், அம்மா கொடநாட்டில் இருப்பதால் கட்சி விவகாரங்களில் ஈடுபடாமல் இருப்பதாக அர்த்தம் இல்லை. கட்சியின் செயற்குழுவை ஒரு முறை கூட்டினார். மூத்த நிர்வாகிகள், எம்.எல்.ஏக்களுடன் தொடர்ந்து ஆலோசனை, தொடர்புகளில் இருக்கிறார்.

போராட்டங்களை திட்டமிட்டு கொடுத்தபடி இருக்கிறார். அந்தப் போராட்டங்களும் அம்மா சொன்னபடி நடந்த வண்ணம் உள்ளன.

சென்னையில் இருந்தால் என்ன செய்திருப்பாரோ, அதையேதான் தற்போது கொடநாட்டிலிருந்தும் செய்து வருகிறார். இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது என்றார்.

இன்னொரு மூத்த தலைவர் புதிய விஷயத்தைச் சொல்கிறார். அதாவது கொடநாட்டில் ஜெயலலிதா சும்மா இருக்கவில்லையாம். மாறாக அடுத்த சட்டசபைத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களை அவர் தேர்வு செய்து வருகிறாராம். ஒரு ஆண்டுக்கு முன்னதாக அதாவது 2010வது ஆண்டிலேயே சட்டசபைத் தேர்தல் வரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளாராம் ஜெயலலிதா. இதனால்தான் தற்போது வேட்பாளர் தேர்வை கொடநாட்டில் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா என்கிறார் அந்தத் தலைவர்.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் கொடநாடு அரசியலை துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி நியாயப்படுத்துகிறார்.

அவர் கூறுகையில், இந்தத் தகவல் தொடர்பு காலத்தில் ஒருவரால் எங்கிருந்தும் செயல்பட முடியும். மேலும், கொடநாடு தமிழகத்தில்தான் இருக்கிறது. அங்கு எடுக்கும் முடிவுகளை, சென்னையில் இருந்திருந்தாலும் அவர் எடுத்திருப்பார். எனவே இதில் எந்த வித்தியாசமும்

இல்லை என்கிறார்.

இது குறித்து அதிமுகவினர் கூறுகையில், சனிப் பெயர்ச்சி இந்த மாதக் கடைசியில் நடைபெறவுள்ளது. அதன் பிறகே சென்னை வருமாறு ஜோதிடர்கள் ஜெயலலிதாவுக்கு அறிவுரை கூறியுள்ளனர்.

தனக்கு முன்பு உள்ள சவால்களை சந்திக்கும் மன தைரியம் மற்றும் பெரும் நம்பிக்கையுடன், புத்துணர்ச்சியோடு புரட்சித் தலைவி சென்னை திரும்புவார் பாருங்கள் என்கிறனர் தன்னம்பிக்கையோடு.

நம்பிக்கைதானே வாழ்க்கை...

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X