For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாடாளுமன்றத்தில் ஓடி ஒளியும் அழகிரி-ஜெ. தாக்கு

By Staff
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: நாடாளுமன்றத்தில் தனது துறை சம்பந்தப்பட்ட வினாக்களுக்கு பதில் அளிக்காமல் ஒவ்வொரு முறையும் அமைச்சர் அழகிரி அவையை விட்டு ஓடி வருவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

''கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த மொழி'' என்ற பெருமைக்குரிய மொழி தமிழ்மொழி. மிகத் தொன்மையும், வரலாற்றுப் பின்னணியும் கொண்ட மொழி தமிழ்மொழி. இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தமிழ்மொழி தன்னால் தான் செம்மொழி ஆக்கப்பட்டதாக தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் திமுக அரசின் முதல்வர் கருணாநிதி.

ஆனால், இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ்மொழி மூலம் இந்திய நாடாளுமன்றத்தில் ஓர் அமைச்சர் பேச முடியாத துர்ப்பாக்கிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பது உண்மையிலேயே மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது.

நாடாளுமன்றத்தில் ஓர் அமைச்சகம் சம்பந்தப்பட்ட வினாக்கள், கவனஈர்ப்பு தீர்மானங்கள், ஒத்திவைப்பு தீர்மானங்கள் ஆகியவற்றிற்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு அந்தத் துறை சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு உண்டு.

அந்த வகையில் ரசாயனம் மற்றும் உரத்துறை தொடர்பான வினாக்களுக்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு, அந்தத் துறையின் அமைச்சர் மு.க.அழகிரியை சாரும்.

சென்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது ரசாயனம் மற்றும் உரத் துறை தொடர்பான வினாவை சபாநாயகர் எடுத்துக் கொள்ளப் போகிறார் என்ற உடனேயே, இந்தத் துறையின் அமைச்சரான அழகிரி அவையை விட்டு ஓடி ஒளிந்து கொள்வதை வாடிக்கையாக கொண்டிருந்ததாகவும், இதன் காரணமாக இந்தத் துறையின் இணையமைச்சர் பதில் அளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டதாகவும், பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

இவ்வாறு துறை சம்பந்தப்பட்ட வினாக்களுக்கு பதில் அளிக்காமல் ஒவ்வொரு முறையும் மத்திய அமைச்சர் அவையை விட்டு ஓடுவதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எரிச்சலடைந்து அமைச்சரை பரிகாசம் செய்வதாகவும், 'ஓடி ஒளிந்து கொள்ளும் அமைச்சர்" குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்தச் சூழ்நிலையில் நாடாளுமன்றத்தில் தமிழில் பேச அனுமதி கேட்டு மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி மக்களவைச் செயலகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் என்றும், இது போன்ற விசித்திரமான வேண்டுகோளை வைக்கும் முதல் மத்திய அமைச்சர் அழகிரிதான் என்றும், ஆனால் இது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று என்று கூறி, அழகிரியின் கோரிக்கையை மக்களவைச் செயலகம் நிராகரித்து விட்டதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளி வந்துள்ளன.
இதன் காரணமாக ஒரு மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் வாயில்லா பூச்சியாக செயல்பட வேண்டிய துர்ப்பாக்கிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த நிலை நீடித்தால், மத்திய அமைச்சர் தன்னுடைய ஆழ்ந்த கருத்துக்களை, சிந்தனைகளை, யோசனைகளை, அறிவாற்றலை எப்படி நாடாளுமன்றத்திலே எடுத்துரைக்க முடியும்? எப்படி வெளிப்படுத்த முடியும்?.

ஆங்கிலம் மற்றும் இந்தி அல்லாத பிற மொழிகளில் அதாவது பிராந்திய மொழிகளில் ஒருவர் பேசியதை பிறருக்குத் தேவைப்படும் மொழியில் மொழி பெயர்த்துக் கூறும் வசதி உறுப்பினர்களுக்கு மட்டும்தான் அளிக்கப்படுகிறது. அமைச்சர்களை பொறுத்தவரை அவர்கள் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்று நாடாளுமன்ற அதிகாரிகள் கூறுவதாக செய்திகள் வருகின்றன.
உறுப்பினர்களுக்கே இந்த வசதி செய்து தரப்படும்போது அமைச்சருக்கு ஏன் இந்த வசதியை செய்து தரக் கூடாது? அப்படியென்றால் இந்தி மற்றும் ஆங்கிலம் தெரியாதவர்கள் எப்படி மத்திய அமைச்சராக செயல்பட முடியும்? அவர்கள் பொம்மையாக இருக்க வேண்டியதுதானா?.

தமிழ்! தமிழ்மொழி! செம்மொழி என்று சொல்லி தன் மகள் கனிமொழிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக்கொடுத்த திமுக அரசின் முதல்வர் கருணாநிதி, நாடாளுமன்றத்தில் ஓர் அமைச்சருக்கு தமிழில் பேச உரிமை இல்லை என்பதை பார்த்துக் கொண்டு வாய்மூடி மவுனியாக இருக்கிறாரே? மத்திய அரசை தட்டிக் கேட்க மாட்டாரா?.
ஒருவேளை இதைத் தட்டிக் கேட்பதன் மூலம் தன் குடும்பத்தில் ஏதாவது சிக்கல் நேரிடும் என்று நினைக்கிறாரா? இல்லை, தன்னுடைய மகன் நாடாளுமன்றதில் பேசுவதை விட, பேசாமல் இருப்பதே மேல் என்று நினைக்கிறாரா? இல்லை அமைச்சர் பதவி என்பது வருமானம் ஈட்டுவதற்காகத்தான் என்று எண்ணி தன்னுடைய மகன் நாடாளுமன்றத்தில் பேசினால் என்ன, பேசாவிட்டால் என்ன என்று கருதுகிறாரா?.

எது எப்படியோ, தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்து கொண்டு தாய்மொழியாம் தமிழ்மொழியை பாதுகாக்க வேண்டிய தன்னுடைய கடமையிலிருந்து கருணாநிதி நழுவிவிட்டார்.
“உறவுக்குக் கை கொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம்" என்ற கொள்கை எல்லாம் வெறும் வாயளவில் மட்டும்தான் என்பதை தற்போது கருணாநிதி நிரூபித்து விட்டார்.

“வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்" என்று எட்டளவில் சொல்லி எந்தப் பயனும் இல்லை. தமிழ் வீழ்கின்ற இந்தச் சூழ்நிலையில் மத்திய அமைச்சரவையிலிருந்து விலகிக் கொள்வதே சிறந்த வழி என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X