For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணை கொலை செய்யுங்கள்-ராஜிவ் கொலை கைதி

By Staff
Google Oneindia Tamil News

Robert Pias
சென்னை: தன்னைக் கருணைக் கொலை செய்துவிடுமாறு ராஜிவ் காந்தி கொலையாளிகளில் ஒருவரான ராபர் பயஸ் கோரியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் ராபர்ட் பயஸ். இவர் கடந்த 19 ஆண்டுகளாக வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

14 ஆண்டுகள் வரை ஜெயிலில் இருப்பவர்களை ஆலோசனை குழு (prison advisory board-PAB) விடுதலை செய்வது வழக்கம். ராபர்ட் பயஸ் வழக்கில் 15 ஆண்டுகளுக்கு பின் கடந்த 2006ம் ஆண்டில் ஆலோசனைக் குழு கூடியது. அப்போது உளவியல் மருத்துவர் தகுதி சான்றிதழும், சிறைக் கண்காணிப்பாளர் நன்னடத்தை சான்றிதழும் வழங்கினார்.

ஆனாலும இலங்கையில் நடைபெறும் போரை காரணம் காட்டி ராபர்ட் பயஸை குழு விடுதலை செய்யவில்லை. இதை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இதை விசாரித்த நீதிமன்றம் அரசு சார்பற்ற, அதிகாரிகளை நியமித்து சட்டப்படி மீண்டும் ஆலோசனைக் குழுவை கூட்டி இது குறித்து முடிவெடுக்குமாறு உத்தரவிட்டது.
ஆனால் தீர்ப்பு வந்து ஒரு வருடம் ஆகியும் ஆலோசனை குழு கூட்டப்படவில்லை.

இது குறித்து கலெக்டர், சிறைத்துறை உயர் அதிகாரி ஆகியோருக்கு பயஸ் மனு செய்தும் பயன் ஏற்படவில்லை.

இதையடுத்து முதல்வர் கருணாநிதி, தலைமை நீதிபதி, மத்திய -மாநில மனித உரிமைகள் ஆணையம் ஆகியவற்றுக்கும் ராபர்ட் பயஸ் மனுக்களை அனுப்பி உள்ளார்.

மேலும் தன்னை விடுதலை செய்யக்கோரி 3வது நாளாக இன்றும் வேலூர் சிறையில் ராபர்ட் பயஸ் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

தனது போராட்டம் குறித்து அவர் அனுப்பியுள்ள மனுவில்,

கடந்த 19 ஆண்டுகளாக எனது குடும்பத்தை பிரிந்து தனிமைச் சிறையில் இருக்கிறேன். அரசியல் சாசனம் 161வது பிரிவின்படி மத்திய அரசின் ஆலோசனை பெறாமலேயே மாநில அரசு விடுதலை செய்யலாம். ஆனால் மாநில அரசு அதிகாரிகள் அதன்படி நடக்கவில்லை.

அரசியல் உள்நோக்கம் காரணமாகவே எனக்கு நீதி, நியாயம் மறுக்கப்படுகிறது. எனது நீண்ட கால சிறைவாசம், குடும்ப சூழ்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு விடுதலை செய்யுங்கள்.

இல்லையென்றால் என்னை கருணை கொலை செய்துவிடுங்கள். அல்லது உண்ணாவிரதம் இருந்து நான் உயிர் விடுவதை இடையூறு செய்யாமல் விட்டுவிடுங்கள். தினந்தோறும் சாவதை விட ஒரு நாளில் செத்துவிடுவது நல்லது.

கரகாட்டக்காரன் படத்தில் செந்தில்-கவுன்டமணி வாழைப்பழ ஜோக் மாதிரி, என்னை விடுவிப்பது குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசும் ஆலோசனை கேட்பதில்லை. மத்திய அரசும் இந்த விஷயத்தில் எந்த முடிவும் எடுப்பதில்லை என்று கூறியுள்ளார்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோரிக்கை:

இந் நிலையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வாழ்நாள் சிறைத் தண்டனை பெற்ற ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் 18 ஆண்டுகளாகச் சிறையில் உள்ளனர்.

கடந்த ஆண்டு விடுதலை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்குத் தொடுத்தார். அப்போது, புதிதாகத் தகுதி ஆய்வு மன்றம் அமைத்து அவரது விடுதலை குறித்து முடிவு செய்ய வேண்டும் என்று நீதிபதி ஆணையிட்டார். ஆனால் இதுவரை தமிழக அரசு அம்மன்றத்தை அமைக்கவில்லை.

இப்பொழுது அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி பத்தாண்டுகளுக்கு மேல் சிறையில் கழித்த சிறையாளிகளை விடுதலை செய்யப் போவதாகத் தமிழக முதல்வர் அறிவித்து, தமிழகம் முழுவதற்கும் பத்துப் பேரை மட்டுமே விடுவித்தார். இது ஒரு கண்துடைப்பு நாடகமாகவே முடிந்தது.

பத்தாண்டுகள் சிறையில் கழித்த அனைத்துச் சிறையாளிகளையும் விடுதலை செய்வதே அறவழிப்பட்ட, நேர்மையான பொது மன்னிப்பாகும். அவ்வாறு செய்யாமல் சுமை தாங்காமல் திணறும் ஒட்டகத்தின் முதுகிலிருந்து ஒரு துரும்பை எடுத்துக் கீழே போட்டு ஒட்டகத்தை ஏமாற்றுவது போல் பத்துப் பேரை மட்டும் விடுதலை செய்த நிகழ்வு அமைந்துள்ளது.

சிறப்பு நாட்களுக்காகப் பொது மன்னிப்பு வழங்கும்போது, எத்தகைய குற்றச்சாட்டுகளின் கீழ் தண்டனை பெற்றிருந்தாலும் அவர்களிடையே வேறுபாடு காட்டாமல் பத்தாண்டுகள் தண்டனை கழித்த அனைவரையும் விடுதலை செய்வதே நியாயம்.

சிறப்பு நாட்களல்லாத போதும், வழக்கமாக 14 ஆண்டுகள் தண்டனை கழித்த அனைவர்க்கும் விடுதலை குறித்து முடிவு செய்ய ஆய்வுமன்றம் நிறுவுவதே மனித உரிமையை மதிக்கும் செயலாகும்.

ராபர்ட் பயாஸ் தொடங்கியுள்ள காலவரம்பற்ற உண்ணாப் போராட்டம் அவர்களுக்கு மட்டுமின்றித் தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் 14 ஆண்டுகள் தண்டனை கழித்த அனைவர்க்கும் நீதி கோரும் போராட்டமாகும். எனவே மனித உரிமை அமைப்புகளும், ஆர்வலர்களும், மனித உரிமையில் அக்கறை உள்ள கட்சிகளும் இப்போராட்டக் கோரிக்கையை ஆதரித்துத் தமிழக முதல்வர் கவனத்தை இதன்பால் ஈர்க்க வேண்டும்.

தமிழகச் சிறைகளில் 14 ஆண்டுகள் கழித்த அனைத்துச் சிறையாளிகளையும், குற்றப்பிரிவு விதிவிலக்கு எதுவுமின்றி, விடுதலை செய்ய வேண்டும் என்றும், குறைந்த அளவாக அவர்கள் விடுதலை குறித்து ஆய்வு செய்ய உடனடியாக மன்றம் அமைக்க வேண்டும் என்றும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழக முதல்வரைக் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X