For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சோக சூழலை காமெடியாக மாற்றும் கருணாநிதியின் முயற்சி - ஜெ. தாக்கு

Google Oneindia Tamil News

Jayalaitha
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த ஆளும் கூட்டணியின் எம்.பிக்கள் கொண்ட குழுவை இலங்கைத் தமிழர் முகாம்களைப் பார்வையிட அனுப்பியிருப்பது, முக்கியப் பிரச்சினைகளை கருணாநிதி திசை திருப்புகிறார் என்பதற்கு இன்னொரு அழுத்தமான உதாரணம் ஆகும் என்று கடுமையாக சாடியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மனித உரிமைகள் மீறல் மற்றும் தனி மனித சுதந்திரம் ஆகியவற்றை மீறியதற்காக ஒத்த கருத்துடைய சர்வதேச நாடுகள் மற்றும் சமூக உரிமைகளுக்கான அமைப்புகளால் குற்றம் சாட்டப்பட்ட இலங்கை அதிபர் மஹிந்தா ராஜபக்சே, இலங்கை நாட்டிற்குள்ளேயே இடம் பெயர்ந்து, அண்மையில் நடைபெற்ற போரில் அனாதைகளாக்கப்பட்டு கிட்டத்தட்ட நான்கு லட்சம் தமிழர்கள் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அங்குள்ள இலங்கைத் தமிழர்களின் நிலையை நேரில் கண்டறிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்தக் குழுவில் தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த சில குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் இடம் பெற்றிருப்பதாக அடுத்த அறிவிப்பு வருகிறது.

அடுத்தபடியாக, இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

இது எந்த வகையான குழு?

இக்குழுவில் எதிர்க்கட்சியைச் சார்ந்த உறுப்பினர்கள் இடம் பெறவில்லை; பத்திரிகையாளர்கள் இடம்பெறவில்லை; மனித உரிமைகளில் ஆர்வம் உடையவர்கள் இடம் பெறவில்லை; சுதந்திரமான கண்காணிப்பாளர்கள் யாரும் இந்தக் குழுவில் இடம் பெறவில்லை. பாரதப் பிரதமர் இது குறித்து ஒரு வார்த்தைக் கூட தெரிவிக்கவில்லை! மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரோ, மத்திய உள்துறை அமைச்சரோ, அல்லது மத்திய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரோ கூட இதுகுறித்து வாயே திறக்கவில்லை!

இது எந்த வகையான நாடாளுமன்றக் குழு? இந்த நாடாளுமன்றக் குழு இலங்கை சென்று திரும்பியதும், கருணாநிதியிடம் அறிக்கையை அளிக்குமா? அல்லது இந்திய நாடாளுமன்றத்திடம் அறிக்கையை அளிக்குமா? இந்தக் குழுவில் உள்ள உறுப்பினர்களை யார் தேர்வு செய்தது? இந்தக் குழுவின் சுற்றுப்பயணத்தை யார் அனுமதித்தது?

தமிழர்கள் அருவருக்கத்தக்க நிலையில் இருப்பதாக அண்மையில் பி.பி.சி. தொலைக்காட்சியில் பதிவு செய்து ஒளிபரப்பப்பட்ட உண்மையான முகாம்களுக்கு சென்று பார்வையிட இந்தக் குழு அனுமதிக்கப்படுமா? அல்லது தமிழர்கள் ஆடம்பரமாக ஓய்வெடுத்துக் கொண்டிருப்பது போன்று உருவாக்கப்பட்ட போலி முகாம்கள் மட்டும் இந்தக் குழுவிற்கு காண்பிக்கப்படுமா?

மனித சமுதாயத்தின் மிகப் பெரிய அவலம்...

இலங்கைத் தமிழர்களின் சோகம், மனித சமுதாயத்தின் மிகவும் மோசமான அவல நிலை ஆகும். பத்து லட்சம் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் அமெரிக்கா, கானடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அண்மைக் கால வரலாற்றில் நடைபெற்ற நீண்டகால இலங்கைப் போரில் இடம்பெயர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள், தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 4 லட்சம் தமிழர்கள் தங்களுடைய சொந்த மண்ணிலிருந்து அகற்றப்பட்டு; சொத்துக்களையும் இழந்து; குடும்பத்தினரிடமிருந்து பிரிக்கப்பட்டு; அடிப்படை வசதிகள் கூட இன்றி, உணவும், மருத்துவவசதியும் இல்லாமல் இலங்கை முகாம்களில் அல்லல்பட்டு தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய பூர்வீக இடங்கள் இலங்கை அரசால் ஆக்கிரமிக்கப்பட்டு, போர்க்கால அடிப்படையில் சிங்களர்களால் நிரப்பப்பட்டு வருகின்றன.

மகளிருக்கு, தங்களுடைய கணவன்மார்கள், மகன்கள் எங்கிருக்கிறார்கள் என்று கூட தெரியாது. இளம் பெண்கள், தாங்கள் மானபங்கப்படுத்தப்படுவார்களோ என்ற அச்சத்தில் வாழ்கிறார்கள். பெரும்பாலான இடம்பெயர்ந்த மக்கள் உணவில்லாமல் பட்டினியாகத் தவிக்கிறார்கள். அவர்களுக்கென்று அனுப்பப்படுகிற உணவு முகாம்களுக்கு வந்து சேருவதில்லை.

கருவுற்றிருக்கும் பெண்கள், தங்களுக்குத் தேவையான சத்துணவு மற்றும் மருத்துவ வசதிகள் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் காலத்தை கழிக்கிறார்கள். வயதானவர்களும், படுகாயமடைந்தவர்களும் மருத்துவ வசதியோ, கவனிப்போ இல்லாமல் வலியினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இயற்கை உபாதைகளுக்கும், குளிப்பதற்கும், திறந்தவெளியைத் தவிர வேறு ஏதுமில்லாத அவல நிலை அங்கு நிலவுகிறது. இலங்கையிலிருந்து வரும் அனைத்துச் செய்திகளும் தணிக்கை செய்யப்படுகிறது. மனித உரிமை நிறுவனங்கள், செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக் கூட இந்த உயிருடன் இருக்கும் இறந்தவர்களை காண அனுமதிக்கப்படுவதில்லை. இது தான் இலங்கையில் வாழும் தமிழர்களின் சோகமான உண்மை நிலை.

தான் உண்மையாகவே தமிழின ரட்சகர் தான் என்பதை எப்படியாவது நிலைநாட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இதுபோன்ற நாடகத்தை நடத்துகிறார்.

முக்கியப் பிரச்சினைகளை எப்போது திசை திருப்புபவர் கருணாநிதி என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். சோகமயமான சூழலில் உள்ளவர்களை வைத்து காமெடி செய்ய நினைக்கிறார் கருணாநிதி என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X