For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வடக்கில் தமிழர்களோடு சிங்களர்களும் குடியமர்த்தப்படுவர்- பசில்

Google Oneindia Tamil News

கொழும்பு: வன்னிப் பிரதேசத்தில் தமிழர்கள் மறு குடியமர்த்தப்படும்போது சிங்களர்களையும் குடியமர்த்துவோம் என்று கூறியுள்ளார் ராஜபக்சேவின் தம்பியான பசில் ராஜபக்சே.

இதுகுறித்து கொழும்பு இதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டி..

வன்னிப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த அனைத்து சமூகத்தவர்களும் அங்கு மறு குடியமர்த்தப்படுவார்கள். தாங்கள் முன்னர் அங்கு தங்கி இருந்தார்கள் என நிரூபிக்கும் எவரும் குடியமர்த்தப்படுவார்கள். ஆனாலும் முன்னுரிமை இடம்பெயர்ந்தோர் முகாம்களில் உள்ள மக்களுக்குத்தான்.

வவுனியா வரைக்கும் வந்து விட்டனர் சிங்களர்கள்...

எல்லா சமூகத்தவர்களும் மறு குடியேற்றப்படுவார்கள். ஏற்கனவே முஸ்லிம்கள் பலர் வடபகுதியில் மறு குடியமர்த்தப்பட்டுள்ளனர். சில சிங்களவர்களும் கூட வவுனியா வரைக்கும் வந்து குடியேறி உள்ளனர்.

இதில் சிங்களக் குடியேற்றங்கள் செய்யப்படுவதான குற்றச்சாட்டுக்கள் எழ வாய்ப்பு இல்லை. ஏனெனில் முன்னர் இப்பகுதிகளில் இல்லாதவர்கள் மறு குடியமர்த்தப்பட மாட்டார்கள்.

'வடக்கின் வசந்தம்' சிறப்பு அணியினர் மறு குடியமர்வு விஷயத்தினை மட்டுமே கையாள்கிறார்கள்.

இந்தப் பகுதியில் இருந்து வெளியேறியவர்கள் அதனை நிரூபிக்க வேண்டும். அதன் அடிப்படையில் மட்டுமே நாங்கள் மறு குடியமர்வுப் பணிகளை மேற்கொள்கின்றோம். அதில் நாங் இன மற்றும் மத அடிப்படையிலான வேறுபாடுகளைப் பார்க்கவில்லை.

அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத தடுப்பு முகாம்கள் என்று இடம்பெயர்ந்தோர் தங்கி இருக்கும் நலன்புரி நிலையங்களைச் சொல்வதில் அர்த்தம் இல்லை. அங்கே யாரும் தடுத்து வைக்கப்படவில்லை.

மருத்துவமனையில் நீங்கள் சேர்க்கப்பட்டால் மருத்துவரின் அனுமதி இன்றி நீங்கள் வெளியேறிச் செல்ல முடியாது. இருக்கக்கூடிய ஒரே மாற்று வழி சொந்தப் பாதுகாப்பில் நீங்கள் வெளியே செல்வது. நலன்புரி நிலையங்களை தடுப்பு முகாம்கள் என்று அழைக்க முடியாது.

இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்குச் செல்ல வேண்டி இருப்பவர்கள் அங்கு செல்வது வரவேற்கப்படுகிறது. உங்கள் வீடுகளுக்குக்கூட நீங்கள் விரும்பாதவர்கள் வருவதை அனுமதிப்பது இல்லை தானே.

ஆனால் யார் விருப்பத்துக்கு உரியவர்கள், யார் விருப்பத்துக்கு உரியவர்கள் அல்லர் என்பதை முகாம் மக்களே தீர்மானிப்பார்கள். இடம்பெயர்ந்த மக்கள் பற்றி உண்மையில் கவலைப்படுபவர்கள் மற்றும் அவர்களுக்குப் பயன்தரும் விஷயங்களைச் செய்பவர்கள் வரவேற்கப்படுவார்கள்.

முகாம்களில் பெற்றோரை இழந்தவர்கள் அல்லது ஆதரவற்ற நிலையில் 1,064 பேர் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரது பிரச்சினைகளும் நீதிமன்றங்கள் மூலமாகத் தீர்த்து வைக்கப்படுகின்றன. சிலர் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் பராமரிப்பு இல்லங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அதிபரின் மனைவியும், இலங்கையின் முதல் பெண்மணியுமான சிராந்தி ராஜபக்சே வவுனியாவில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் ஒன்றை நடத்தி வருகிறார்.

முகாம்களில் பிரிந்திருந்த 18 ஆயிரத்து 800 பேர் அவர்களது குடும்பங்களுடன் மீண்டும் இணைந்துள்ளனர். இப்போது நாங்கள் குடும்பங்களைச் சேர்த்து வைக்க வேண்டி உள்ளது. தமிழ் பேசக்கூடிய 5 காவல்துறைக் குழுக்கள் இந்த விஷயத்தில் பணியாற்றி வருகின்றன.

எந்த ஒரு அரசும் இலங்கை அரசின் மீது தெரிவிக்கும் விமர்சனங்களை நாங்கள் வரவேற்கின்றோம். அதிபர் கூட அப்படித்தான் நினைக்கிறார் என்பதை தனிப்பட்ட ரீதியில் நான் அறிந்து வைத்திருக்கின்றேன். அதேசமயம், அந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் சுதந்திரம் அரசுக்கு இருக்கின்றது.

பத்திரிக்கையாளர்களிடம் அதிகாரம் இருக்கின்றது. அதனை சமூகத்திற்கும் நாட்டிற்கும் எதிராகப் பயன்படுத்தக் கூடாது. நீங்கள் தனிப்பட்ட நபர்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் விதத்தில் எதையாவது எழுதிவிட்டால் அதனைத் திரும்பப் பெற முடியாது.

சீனா தனது நிலையைப் பலப்படுத்திக் கொள்வதற்கு இலங்கையைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை. சீனா மட்டுமல்ல இந்தியா மற்றும் ஏனைய நாடுகளும் எமக்கு உதவி வருகின்றன. அவற்றில் சீனா மிகப் பெரிய வளமாக இருக்கலாம். இந்த உறவு பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் நட்பு சார்ந்தது.

நாம் சீனாவுடன் நீண்ட காலமாகவே உறவு வைத்திருக்கின்றோம். ஐ.நா.வுக்கு வருவதற்கும் சர்வதே சபைகளிலும் சீனாவிற்கு ஆதரவளித்திருக்கின்றோம். சீனாவுடன் ராஜதந்திர உறவுகளைத் தொடங்கிய முதற் சில நாடுகளில் இலங்கையும் ஒன்று.

இந்தியாவும் கூட இங்கு மிகப் பெரியளவில் செயற்படுகின்றது. இந்தியாதான் எமக்கு முன்னுரிமையானது என்பதை அதிபரே தெரிவித்திருக்கிறார்.

நாட்டின் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நிச்சயம் ஒரு அரசியல் முன்மொழிவு தேவை. அதிபர் அப்படித்தான் சிந்திக்கிறார். அனைத்து கட்சிக் குழுவின் தீர்வுத் திட்டம் கூட வந்துள்ளது. ஆனால், கடைசியில் எல்லாவற்றையுமே மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அதற்கான மக்களின் கருத்து எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் மூலம் அல்லது அதிபர் தேர்தல் மூலம் பெறப்படும். மக்கள் அதனை அனுமதிக்க வேண்டும் என்றார் பசில்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X