For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

42,000 தமிழர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுவிட்டனர்- இலங்கை

Google Oneindia Tamil News

வவுனியா: இலங்கை அகதிகள் முகாமில் இருந்து நேற்று ஒரே நாளில் 42 ஆயிரம் தமிழர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இலங்கை அரசு தகவல் தெரிவித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் 12 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 41 ஆயிரத்து 685 தமிழர்கள் அகதிகள் முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

வவுனியாவுக்கு 2,583 குடும்பங்களைச் சேர்ந்த 8,643 தமிழர்களும், மன்னாருக்கு 2,644 குடும்பங்களைச் சேர்ந்த 6,631 தமிழ் அகதிகளும், முல்லைத் தீவுக்கு 4,415 குடும்பங்களை சேர்ந்த 16,394 பேரும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு 2,453 குடும்பங்களைச் சேர்ந்த 10,017 தமிழர்களும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

உதவித் தொகை- உணவுப் பொருட்கள்

விடுவிக்கப்பட்ட 41,685 தமிழர்களுக்கும் இலங்கை பண மதிப்பில் தலா 5 ஆயிரம் ரூபாயும், 20 ஆயிரம் ரூபாய்க்கான வங்கி சேமிப்பு கணக்கு புத்தகமும், 6 மாதத்துக்கு தேவையான ரேஷன் பொருட்களும், அவசர காலத்தில் பயன்படுத்திக் கொள்ள கூடாரம் கட்டும் சாதனங்களும், போர்வைகளும் வழங்கப்பட்டன.

பின்னர், தமிழர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் மூலம் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

முல்லைத் தீவில் முதல் மீள் குடியேற்றம்...

முல்லைத் தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேசத்திற்கு 300 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரம் பேர் முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் முதலில் பல்வேறு பள்ளிக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டு பின்னர் படிப்படியாக தங்களது வீடுகளில் குடியமர்த்தப்படுவார்கள் எனவும் முல்லைத் தீவு மாவட்ட ஆட்சியாளர் எமில்டா சுகுமார் தெரிவித்தார்.

இதேபோல் வவுனியா இடைத் தங்கல் முகாமில் இருந்து மட்டக் களப்புக்கு அழைத்துச் செல்லப்பட்ட 298 குடும்பங்களைச் சேர்ந்த 785 பேர் சிங்கள மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கு நடந்த விழாவில் இலங்கை சமூக நலத்துறை மந்திரி டக்ளஸ் தேவானந்தா, மீள் குடியேற்ற உதவித் தொகையாக 5 ஆயிரம் ரூபாயை தமிழ் அகதிகளிடம் வழங்கினார்.

ஆண்டு இறுதிக்குள் மேலும் 1 லட்சம் பேர்...

அகதிகள் மீள்குடியேற்றம் குறித்து இலங்கை அரசின் பொது நிர்வாகம் உள்நாட்டு அலுவல்கள் மந்திரி சரத் அமுனுகம கூறியதாவது:

இடைத் தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அனைவரையும் விரைவில் மீள் குடியேற்றம் செய்வதற்கும், அவர்கள் இயல்பு வாழ்க்கையை தொடங்குவதற்கும் அனைத்து விதமான வசதிகளையும் ஏற்படுத்தி தரவும் அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

வட பகுதியில் இந்த ஆண்டு இறுதிக்குள் பொது நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டு இடம் பெயர்ந்து வாழும் மக்களில் ஒரு லட்சம் பேர் தங்களது சொந்த இடங்களில் மீள் குடியமர்த்தப்படுவார்கள். இதற்காக பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சகமும், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டமும் இணைந்து பெரிய திட்டம் ஒன்றை மேற்கொள்ளவிருக்கிறது" என்றார் அவர்.

அகதிகள் முகாம்களில் இன்னும் அடைக்கப்பட்டிருக்கும் இரண்டரை லட்சம் தமிழர்களை விடுவிப்பது தொடர்பாக இலங்கை அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கண்ணிவெடிகளை அகற்றியதை ஐக்கிய நாடுகள் சபை தெளிவுபடுத்தி சான்றிதழ் அளித்த பிறகும், மீள்குடியேற்றம் செய்யப்படுபவர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த பின்னரும் அவர்கள் படிப்படியாக விடுவிக்கப்படுவார்கள்' என்று தெரிவித்தார்.

சிறுவர் போராளிகள் கல்லூரியில் சேர்ப்பு

இதனிடையே, விடுதலைப்புலிகள் அமைப்பில் சிறுவர் போராளிகளாக இருந்து சரணடைந்த 258 பேரை கொழும்பின் வெள்ளவத்தை, ரத்தமலானா ஆகிய இடங்களில் உள்ள இந்துக் கல்லூரிகளில் அனுமதித்து அவர்களின் உயர் கல்விக்கான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்து இருக்கிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X