For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதா ஒரு ஊழல் பெருச்சாளி-சென்னை மேயர்

Google Oneindia Tamil News

சென்னை: ஊழலில் திளைத்து, ஊழல் பெருச்சாளியாக வாழ்பவர் ஜெயலலிதா என்று சென்னை மாநகராட்சி மேயர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையை நவீனப்படுத்தும் பணியில் முறைகேடுகள் நடந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள சுப்பிரமணியன் இவ்வாறு பதில் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா புகார்:

இந்த விவகாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையை நவீனப்படுத்தும் பணியை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

இதற்காக தண்டையார்பேட்டை மருத்துவமனையின் பழைய கட்டிடங்களை இடிக்கும் பணியை ரூ.15.50 லட்சம் செலவில் மூன்று பிரிவுகளாகப் பிரித்து பணியினை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது. அதில் டெண்டர்களை 16ம் தேதி 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் டெண்டர்களை திறப்பதற்கு முன்பாகவே, மருத்துவமனையின் கட்டிடங்கள் அனைத்தும் ஒப்பந்ததாரரால் இடிக்கப்பட்டு விட்டதாகவும், பழைய கட்டிடத்தில் உள்ள அதிக அளவிலான மரத் தளவாடங்கள், இரும்பு உத்திரங்கள், இரும்பு கட்டில்கள் ஆகியவை மாயமாய் மறைந்து போய் விட்டதாகவும், புகைப்படத்துடன் செய்திகள் வெளிவந்தன.

டெண்டர்கள் திறக்கப்படுவதற்கு முன்பாகவே மருத்துவமனையின் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு விட்டதை ஒப்புக்கொள்ளும் வகையில், பராமரிப்பு ஒப்பந்தம் மூலம் மேற்படி இடிப்பு பணியை மேற்கொண்ட செயற்பொறியாளரை தற்காலிக பணி நீக்கம் செய்து சென்னை மாநகராட்சி செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

மேற்படி பழைய கட்டிடங்கள் இடிக்கும் பணியை மேற்கொள்வதற்கு முன்பு சென்னை மாநகராட்சி நிலைக் குழுக்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மாநகராட்சிக் கூட்டத்தில் ஒப்புதல் பெற வேண்டாமா?.

சென்னை மாநகராட்சியால் முடிந்த பணிக்கு எப்படி டெண்டர் கோரப்பட்டது?. ஒரு வேலை கண் துடைப்பிற்காக கோரப்பட்டதா? சென்னை மாநகராட்சி மேயரின் உத்தரவு இல்லாமல் இது போன்று செய்ய முடியுமா?.

மேயருக்கு இதில் எந்த அளவுக்குத் தொடர்பு இருக்கிறது?. சென்னை மாநகராட்சியால் மேற்கொள்ளப்படும் பணிகள் அனைத்தும் இது போன்று தான் நடைபெறுகிறதா? என பல்வேறு வினாக்கள் மக்கள் மத்தியில் எழுகின்றன.

எனவே, சென்னை மாநகராட்சியில் கடந்த 3 ஆண்டு காலமாக நிலவிவரும் நிர்வாகக் சீர்கேடுகளைக் கண்டித்தும், பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டதில் நடந்த முறைகேடுகளுக்கு காரணமான திமுக அரசை கண்டித்து, அதிமுக சார்பில் 24ம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

முறைகேடு ஏதும் நடக்கவில்லை-மேயர்:

இந் நிலையில் சென்னை மேயர் சுப்பிரமணியன், வெளியிட்டுள்ள பதில் அறிக்கை:

தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை குறித்து உண்மை நிலையினை அறிந்திட சில விளக்கங்கள் அளிப்பது எனது கடமையாகும்.

தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையை நவீனப்படுத்தி, பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் அதற்கான பணிகளை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் 27.08.2009 அன்று தொடங்கி வைத்தார்.
பழைய தொற்றுநோய் மருத்துவமனை கட்டிடங்களை இடிப்பதற்கு 18.09.2009 அன்று நடைபெற்ற மண்டலக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்டுமான பணியினை உடனடியாக தொடங்க வேண்டிய சூழ்நிலையில் பராமரிப்புப் பணி, டெண்டர்கள் மூலம் இடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

ரூ.15 லட்சத்திற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய டெண்டர் பணியினை பராமரிப்பு பணியில் மேற்கொண்டதற்காக அந்த மண்டல செயற்பொறியாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

சென்னை மாநகராட்சியில் எங்கு தவறு நடந்தாலும் அதை உடனடியாக களைய வேண்டும் என்பதே முதல் அமைச்சர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோரின் உயரிய நோக்கம் ஆகும். அதன்படி சென்னை மாநகராட்சி உடனடி நடவடிக்கை மேற்கொண்டது.

இடிக்கப்பட்ட கட்டிடத்தின் மொத்த பரப்பளவு 3265.72 சதுர மீட்டர் ஆகும். அதில் 69 மரக்கதவுகள், 113 மர ஜன்னல்கள், 30 இரும்புடன் கூடிய கண்ணாடி ஜன்னல்கள் என 23.975 மெட்ரிக் டன் மரத்தளவாடங்கள், 13.765 மெட்ரிக் டன் இரும்பு பொருட்கள் போன்றவை 100 சதவீதம் பத்திரமாக அண்ணாபிள்ளை சாலையில் உள்ள மாநகராட்சி பணிமனையில் வைக்கப்பட்டுள்ளன. இதற்கான புகைப்படமும் நாளிதழ்களுக்கு வழங்கப்பட்டு வெளிவந்துள்ளது.

இத்தனை உண்மைகளும் அறியாத ஜெயலலிதா, பத்திரிகைகளை படிக்கும் பழக்கமும் இல்லாதவர் என்பது அவருடைய அறிக்கையிலிருந்து தெள்ளத் தெளிவாக தெரிகின்து.

ஜெயலலிதாவிற்கு உண்மையாகவே அக்கறை இருக்குமானால் நேரிடையாக சவால் விடுக்கிறேன். யானை கவுனி மாநகராட்சி பணிமனையில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ள பொருட்களை வந்து காண வேண்டும். மற்றவர்களால் எழுதித் தரப்படும் அறிக்கைகளை மட்டும் நாள்தோறும் கையெழுத்திடுவதே தனது பணியாக கொண்டு செயல்படும் ஜெயலலிதா உண்மைகளை அறிய அந்த இடத்திற்கு வந்து பார்க்க வேண்டும்.

பொய்களை நாள்தோறும் அறிக்கையாக விடுவதை இனிமேலாவது நிறுத்திக் கொண்டு சென்னை மாநகராட்சி செய்து வரும் அரும் பணிகளை கண் திறந்தும், காது கொடுத்தும் கேட்க வேண்டும்.

சென்னை மாநகராட்சி கடந்த 3 ஆண்டுகளில் எந்தவித சொத்து வரியையும் உயர்த்தாமல் செய்து வரும் மக்கள் பணியினை அனைவரும் அறிவர்.

போக்குவரத்து நெரிசலை குறைத்திட சென்ற ஆண்டில் 3 மேம்பாலங்கள் கட்டி திறக்கப்பட்டன. தற்பொழுது 5 மேம்பாலங்கள், 2 சுரங்கப்பாதை பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. 600க்கும் மேற்பட்ட பூங்காக்கள் ரூ.47 கோடியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சி லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது, உலக தலைமை பண்பிற்கான விருது பெற்றது, முதன்மை மாநகராட்சிக்கான விருது பெற்றது.

நாள்தோறும் மக்கள் தொண்டில் சிறந்து விளங்கும் சென்னை மாநகராட்சி செயல்பாட்டை கண்டு மிரண்டு போய் உள்ள ஜெயலலிதா புழுதி வாரி தூற்ற நினைப்பது மஞ்சள் காமாலை நோய் வந்தவனுக்கு அனைத்தும் மஞ்சளாக தெரியும் என்பார்கள்.

அதுபோல் ஊழலில் திளைத்து, ஊழல் பெருச்சாளியாக வாழும் ஜெயலலிதா எங்களை தவறாக நினைப்பதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை. இந்த அறிக்கையும் நல்ல மனம் படைத்தவர் அறிந்திடவே வெளியிட வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார் சுப்பிரமணியன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X