• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தேவர் இருந்திருந்தால் ஈழத்திற்குப் படை அனுப்பியிருந்திருப்பார்- வைகோ

By Staff
|

Vaiko
பசும்பொன்: முத்துராமலிங்கத் தேவர் உயிருடன் இருந்திருந்தால் இலங்கைத் தமிழர்களைக் காக்க படை ஒன்றை அனுப்பியிருந்திருப்பார் என்று கூறினார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்தில் குருபூஜை நேற்று சிறப்பாக நடந்தது. அதில் கலந்து கொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் அக்கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின்னர் வந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், முத்துராமலிங்கத் தேவர் இந்நேரம் உயிருடன் இருந்திருந்தால், ஈழத்தில் தமிழர்கள் படும் அவதியைக் கண்டு கொதித்து, ஒரு தனிப்படையை அனுப்பி தமிழர்களைக் காத்திருப்பார்.

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசையும், மத்திய அரசையும் கண்டித்து 2 கட்ட போராட்டம் நடத்தப்படும்.

தேனியில் நவம்பர் 6ம் தேதி கண்டனப் பொதுக் கூட்டமும், மதுரையில் நவம்பர் 14ம் தேதி உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தப்படும்.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மீது தாக்குதல் தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதில், போலீசார் வெறும் அம்புகள் தான். அதை எய்த்தவர் முதல்வர் கருணாநிதி என்பதால் அவர் தான் தண்டனைக்குறியவர் என்றார்.

ஜெ பசும்பொன் செல்லவில்லை:

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 102வது பிறந்த நாள் மற்றும் நினைவுநாளையொட்டி அவரது சிலைக்கும், பசும்பொன் கிராமத்தில் உள்ள நினைவிடத்திலும் ஏராளமான தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை நந்தனம் தேவர் சிலை அரசு சார்பில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கீழே அவரது உருவப் படம் வைக்கப்பட்டிருந்தது. அங்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

சபாநாயகர் ஆவுடையப்பன், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பரிதி இளம்வழுதி, ராமச்சந்திரன், பூங்கோதை, கே.பி.பி.சாமி, மதிவாணன், மைதீன்கான், மேயர் மா.சுப்பிரமணியன், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு எம்.பி. உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலிதா தேவர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதற்காக படிகளில் ஏறி அவர் வந்தபோது தேவர் சிலையில் இருந்த ஒரு மாலை அவரது தோள் பட்டையில் விழுந்தது. இதைக் கண்டு அவர் திடுக்கிட்டு நின்றார். பின்னர் அஞ்சலி செலுத்தி விட்டு வந்தார்.

ஜெயலலிதாவுடன் சசிகலா, அதிமுக நிர்வாகிகள் மதுசூதனன், பொன்னையன், ஜெயக்குமார், செங்கோட்டையன், தளவாய்சுந்தரம், முத்துசாமி, பா.வளர்மதி, செ.ம.வேலுசாமி, பி.எச்.பாண்டியன், மாவட்ட செயலாளர்கள் பி.கே.சேகர்பாபு, வி.பி.கலை ராஜன் மற்றும் ஜி.செந்தமிழன் எம்.எல்.ஏ. சுலோசனா சம்பத் உள்ளிட்டோர் பெரும் திரளாக வந்திருந்தனர்.

இதேபோல காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, முன்னாள் தலைவர் குமரி அனந்தன், கராத்தே தியாகராஜன், வசந்தகுமார், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது கட்சியின் தலைமைக் கழகத்தில் தேவர் படத்துக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் அவைத்தலைவர் பண்ருட்டி ராமசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நடிகர் கார்த்திக் தனது கட்சியினரோடு வந்து தேவர் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.

பாஜக, பாமக ஆகியவற்றின் சார்பிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

திராவிட விழிப்புணர்ச்சி கழகம் சார்பில் ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து வந்து தேவர்சிலைக்கு அபிஷேகம் செய்தனர். 500-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக முளைப்பாரியும் கொண்டுவந்தனர்.

பசும்பொன் நினைவிடத்தில்...

பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திலும் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.

நேற்று அங்கு குருபூஜையாக விழா நடைபெற்றது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் வந்து அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் சார்பி் தென்காசி எம்.பி லிங்கம், மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் அஞ்சலி செலுத்தினர். ஸ்ரீதர் வாண்டையாருடன் கரகாட்டம், ஒயிலாட்டக் குழுவினர் ஆடியபடி வந்தனர்.

பின்னர் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி அஞ்சலி செலுத்தினர்.

அமைச்சர்கள்:

இதையடுத்து தமிழக அரசு மற்றும் தி.மு.க. சார்பில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், திண்டுக்கல் ஐ.பெரியசாமி, சுப.தங்கவேலன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், தமிழரசி, ஜே.கே.ரித்திஷ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, காங்கிரஸ் சார்பில் சித்தன் எம்.பி., முன்னாள் மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், திருநாவுக்கரசர் எம்.பி, முன்னாள் எம்.எல்.ஏ. எச்.ராஜா, பா.ம.க. சார்பில் ஜி.கே.மணி, அ.தி.மு.க. சார்பில் மாநில பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், அன்வர்ராஜா, ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள் தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன், தே.மு.தி.க. சார்பில் மாநில பொருளாளர் சுந்தர்ராஜன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

குருபூஜையையொட்டி பசும்பொன் கிராமத்திலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதுதவிர ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களிலும் முக்கியப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலை மலர் அலங்காரம் செய்யப்பட்டு விளக்குகளால் ஜொலித்தது. அங்கும் ஆயிரக்கணக்கானோர் வந்து அஞ்சலி செலுத்தினர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more