For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரெட்டிகள் சொன்னா கேட்டுக்கனும்...!-மாற்றப்பட்ட அதிகாரிகள் மீண்டும் பெல்லாரியில்..!!

Google Oneindia Tamil News

பெங்களூர்: ரெட்டி சகோதரர்கள் விதித்த அடுத்த நிபந்தனையையும் கர்நாடக முதல்வர் எதியூரப்பா நிறைவேற்றிவிட்டார்.

அவர்கள் உத்தரவிட்டது போல பெல்லாரி மாவட்ட கலெக்டர், எஸ்பி ஆகியோருக்கு மீண்டும் அதே பதவி வழங்கப்பட்டு உள்ளது.

ரெட்டிகளின் உத்தரவுகளுக்குப் பணிவதாக பாஜக டெல்லி தலைவர்கள் தலையை ஆட்டியதையடுத்து எதியூரப்பாவை முதல்வர் பதவியில் நீடிக்க அனுமதிப்பதாக ரெட்டிகள் அறிவித்தனர்.

இதையடுத்து முதலில் எதியூரப்பாவுக்கு மிக நெருக்கமான அமைச்சர் ஷோபா தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆர்எஸ்எஸ்சில் இருந்த காலம் முதலே எதியூரப்பாவும் ஷோபாவும் இணைந்து பணியாற்றி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்ககது.

இந் நிலையில் ரெட்டிகள் போட்ட அடுத்த நிபந்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. எதியூரப்பா-ரெட்டிகள் மோதல் உச்சகட்டத்தில் இருந்தபோது ரெட்டிகளின் சொந்த மாவட்டமான பெல்லாரியின் கலெக்டர் சிவப்பா, எஸ்பி சீமந்த் குமார் சிங்கை மாற்றினார் எதியூரப்பா. காரணம், இந்த இருவரும் ரெட்டிகளின் ஆட்கள் ஆவர்.

ஆனால், நேற்று இந்த இரு அதிகாரிகளும் அதே இடத்தில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

அதே போல காடக் மாவட்ட கலெக்டர், எஸ்பியும் ரெட்டிகளின் நிபந்தனைப்படி மறு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர இந்த இரு மாவட்டங்களின் பஞ்சாயத்து நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட பல அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

எதியூரப்பா-ஜனார்த்தன ரெட்டி சந்திப்பு:

இந் நிலையில் கடந்த 20 நாட்களாக ஒருவருடன் ஒருவர் பேசுவதைக் கூட தவிர்த்து வந்த முதல்வர் எதியூரப்பாவும் அவரது அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியும் நேற்று முன் தினம் இரவு முதன் முதலாக சந்தித்துப் பேசினர்.
அப்போது ரெட்டிகளின் வலதுகரமான அமைச்சர் ஸ்ரீராமலுவும் உடனிருந்தார்.

வன வளம் கொள்ளை போகிறதே..எதியூரப்பா:

இதற்கிடையே கர்நாடக வனத்துறையில் உயிர் நீத்தவர்களின் நினைவு தினம் பெங்களூர் மல்லேஸ்வரத்தில் நடந்தது.

அதில் பேசிய எதியூரப்பா, நாட்டில் ஜனநாயகமே கொள்ளை போகிறது. இந்த சூழ்நிலையில் நாட்டை முன்நடத்தி செல்வதே கஷ்டமாகி இருக்கிறது. நம்மை நம்பி உள்ள மக்கள் துயரத்துக்கு தள்ளப்பட்டு உள்ளனர். அவர்களை பற்றி மக்கள் பிரதிநிதிகளால் யோசிக்கக் கூட முடியவில்லை.

கன்னட நாடு மிகுந்த வளமிக்க நாடு. இங்கு உள்ள வன வளங்கள் வீணாகின்றன. வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. அதை தடுக்க இயலவில்லை.

நேர்மையான அதிகாரிகள் எதற்கும் கவலைப்பட வேண்டாம். உங்களுடன் நான் உள்ளேன் என்றார்.

பெல்லாரி மாவட்டத்தில் வனத்துறைக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ரெட்டிகள் வளைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதைத் தான் எதியூரப்பா சுட்டிக் காட்டியுள்ளார்.

பதவி தப்பியதால் கோவில்களில் பூஜை...

இந் நிலையில் மைசூர் சென்ற எதியூரப்பா சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீசுவரி அம்மன் கோவிலில் சண்டி ஹோமம் நடத்தினார்.

மலை அடிவாரத்தில் உள்ள சுத்தூர் மடத்துக்கு சென்று அங்குள்ள சுவாமிஜியை சந்தித்து ஆசி பெற்றார். அதைத் தொடர்ந்து அவர் நஞ்சன் கூடில் உள்ள சிரிகன்டேஸ்வரா சாமி கோவிலுக்கு சென்று அங்கு விசேஷ பூஜை செய்துவிட்டு, மாதேஸ்வர மலைக்கும் சென்றார்.

பணம் இருப்பவர்களை மதிக்க மாட்டேன்...

மைசூரி்ல் நிருபர்களிடம் பேசிய எதியூரப்பா நான் எப்போதும் பணம் பலம், ஆள் பலம், தோள் பலம் இருப்பவர்களை மதிக்க மாட்டேன். பணம் பலம் உள்ளவர்களிடம் அடிமையாகாமல் மாநிலத்தை வளர்ச்சி அடைய செய்யவும், பணம் பலம் உள்ளவர்களை திருத்தி அவர்களை சரியான வழியில் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபடுவேன்.

ஜனநாயகத்தில் கட்சி மேலிடம் கூறுவதை கேட்க வேண்டியுள்ளது. அதனால் மாநில நலனுக்காக சில நிபந்தனைகளை நான் ஒப்புக்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

மக்களுக்காக சண்டி ஹோமமாம்:

அரசியலில் சில சமயங்களில் நேர்மையுடன் பணி செய்பவர்கள் அக்னி பரீட்சைக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படுகிறது. இனிமேல் இப்படி ஆகாதவாறு பார்த்து கொள்கிறேன். எல்லா பிரச்சினைகளையும் தைரியமாக சமாளிப்பதற்கு சக்தி அம்மனிடம் பிரார்த்தனை செய்துள்ளேன். நாட்டு மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று வேண்டி சண்டி ஹோமம் நடத்தினேன்.

பொய் சொல்ல மாட்டேன்:

அமைச்சர் ஷோபா நன்றாக பணியாற்றி வந்தார். அவரது பணியில் எந்த குறைபாடோ, ஊழலோ கிடையாது. சிலரின் மன கசப்புக்கு ஆளாகி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அம்மன் சன்னதியில் நின்று கொண்டு நான் பொய் சொல்ல மாட்டேன். என் பக்கத்தில் இருந்தும் சில தவறுகள் நடந்து உள்ளன. இனிமேல் அப்படி தவறு நடக்காமல் பார்த்துக் கொள்வேன் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X