For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிங்கள அதிகாரிகள் பிடியில் கேபிக்கு ராஜ உபசாரம்!

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு: சிங்கள அதிகாரிகள் பிடியில் இருக்கும் கேபி என்கிற குமரன் பத்மநாதனுக்கு எந்தவிதமான செளகரியக் குறைவும் இல்லாமல் ராஜ போக வாழ்க்கையை சிங்கள அதிகாரிகள் வழங்கியுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்பு இருந்ததைப் போலவே கேபி இப்போதும் எந்தவிதப் பிரச்சினையும் இன்றி வாழ்ந்து வருவதாகவும் அது கூறுகிறது.

அதேசமயம், சிங்கள ராணுவத்தினரின் பிடியில் சிக்கியுள்ள விடுதலைப் புலி வீரர்கள் தொடர்ந்து சொல்லொணாத் துயரத்திற்கும், சித்திரவதைக்கும் ஆளாக்கப்பட்டு வருகிறார்களாம்.

முன்பு கடுமையான முறையில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த கேபி தற்போது தனி மாளிகை ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளாராம். வீட்டைச் சுற்றிலும் பாதுகாப்பு கடுமையாக இருந்தாலும் கூட வீட்டுக்குள் கேபிக்கு எந்த வசதிக் குறைவும் இல்லையாம். தேவையான அனைத்து வசதிகளையும் இலங்கை அரசு செய்து கொடுத்துள்ளதாம்.

இதுதவிர எங்காவது அவர் செல்ல விரும்பினால் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டு அழைத்து வரப்படுகிறாராம்.

கருணா உள்ளிட்டர்களுக்குக் கூட தரப்படாத பல சலுகைகளை அரசு கேபிக்கு தருகிறதாம்.

கேபியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் விடுதலைப் புலிகளின் சொத்துக்கள், பெரும் பணம் உள்ளிட்டவை குறித்த பெரும்பாலான தகவல்களை அவர் ஏற்கனவே தெரிவித்து விட்டார். அதன் அடிப்படையில் அதை அரசு அபகரித்துக் கொண்டிருக்கிறது. இருப்பினும் கேபி சொல்லாத பல விஷயங்கள் இருப்பதாக அரசு கருதுகிறது.

அவற்றையும் பறிக்க கேபியை சித்திரவதைக்குட்படுத்தாமல் தனது பக்கம் இழுத்துக் கொண்டு கூட்டாக கொள்ளையடிக்கலாம் என்ற எண்ணத்தில் அரசு இருப்பதாக தெரிகிறது. இதையடுத்தே கேபியை நல்ல மாதிரியாக கவனித்து அவரை தங்களது பக்கம் முழுமையாக இழுத்துக் கொள்ளும் முயற்சியாகவே இது தோன்றுவதாக சிங்கள நாளிதழ் மேலும் தெரிவிக்கிறது.

வதை முகாம்களில் சிறுவர் உட்பட 11,000 தமிழர்கள்:

இந் நிலையில் இலங்கையில் உள்ள ரகசிய முகாம்களில் சிறுவர்கள் உட்பட 11 ஆயிரம் தமிழர்கள் எவ்வித விசாரணையும் இன்றி அடைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இலங்கையில் போருக்குப் பின்னர் வவுனியா உட்பட வடக்கில் பல்வேறு இடங்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 3 லட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்பி குடியமர்த்தி விட்டோம் என்று இலங்கை அரசு அறிவித்தது.

ஆனால் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவரகள், தொடர்பு இருப்பதாக சந்தேகத்துக்கு இடமானவர்கள், அவர்களின் உறவினர்கள் என பலவகையாகப் பிரித்து ரகசிய முகாம்களில் இலங்கை அரசு அடைத்து வைத்திருக்கிறது. இதுபோன்ற முகாம்களுக்கு இலங்கை அரசு 'புனர் வாழ்வு மையங்கள்' என்று பெயர் வைத்திருக்கிறது.

இலங்கை அரசு முகாம்களில், முற்றிலும் சந்தேகத்துக்கு இடமளிக்காத வகையில் உள்ள மக்கள் மட்டுமே இப்போது விடுவிக்கப்பட்டுள்ளார்கள். அப்படி விடுவிக்கப்பட்டவர்களில் கூட எல்லோரையும் அவர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் குடியமர்த்தவில்லை.

இந்நிலையி்ல், 'புனர் வாழ்வு மையங்கள்' என்றழைக்கப்படும் வதை முகாம்களில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எவ்வித முறையான வழக்குப் பதவோ ஆதாரங்களோ இல்லாமல் அடைத்துவைக்கப்பட்டிருப்பதாக லன்டணில் வெளியாகும் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை மிகக் குறைவானது என்றும் நிஜ நிலவரத்தை ஆராய்ந்தால் அதிகமான அளவில் மக்கள் அங்கு இருக்கக்கூடும் என்றும், இதில் சிறுவர்கள் ஏராளமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசு யார் யாரை எல்லாம் விடுதலைப் புலிகள் என வரையறுக்கிறது என்பதில் பெரும் குழப்பம் உள்ளதாகவும் அந்த செய்தி அறிக்கையில் சுட்டிக்காட்டப்படுகிறது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தொடர்பு கொண்டவர்கள் மட்டுமல்லாது, அப்பாவி இளைஞர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், போரின் போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் என பலரையும் எவ்வித ஆதாரமும் இல்லாமல் வலுக்கட்டாயமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X