கிங்பிஷர் விமானத்தில் நாட்டு வெடிகுண்டு வைத்தவர் கைது

Subscribe to Oneindia Tamil
Kingfisher Airlines
திருவனந்தபுரம்: கிங்ஃபிஷர் விமானத்தில் நாட்டு வெடிகுண்டு வைக்கப்பட்ட வழக்கில் துப்பு துலங்கியது. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 21ம் தேதி பெங்களூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சென்ற கிங்ஃபிஷர் பயணிகள் விமானத்தில் நாட்டு வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம், விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாதுகாப்பு கட்டுப்பாடுகளை மீற வெடிப்பொருளை விமானத்துக்குள் கொண்டுபோய் வைத்தவர் யார் என போலீசாரும், மத்திய தொழில்பாதுகாப்பு படையினரும் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

விமானத்தில் பயணம் செய்தவர்கள், திருவனந்தபுரம் மற்றும் பெங்களூர் விமான நிலையத்தில் பணிபுரிவோர் என பலரையும் சந்தேக வலைக்குள் கொண்டுவந்து சிசிடிவி பதிவுகள் மூலமாகவும் பல்வேறு வழிமுறைகளிலும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தனியார் சரக்கு போக்குவரத்து ஏஜென்சி நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

போலீசாரின் தீவிர விசாரணையில் விமானத்தில் நாட்டு வெடிகுண்டு வைத்தது அவர் தான் எனத் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுபற்றி போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுவதாவது: இப்போதைக்கு கைது செய்யப்பட்டவரின் பெயரை வெளியிட முடியாது. முறைப்படியான அறிவிப்பு விரைவில் வரும். ஆனால் இந்த வழக்கில் துப்பு துலங்கிவிட்டது.

இந்த விவகாரத்தில் தீவிரவாதிகள் யாரும் சம்பந்தப்படவில்லை. பிடிபட்ட நபர் தனியார் 'கார்கோ' நிறுவனத்தில் வேலை பார்ப்பவர். திருவனந்தபுரம் புறநகர் பகுதியில் வசிப்பவர்.

தற்போது அவர் போலீஸ் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளார். அவர் எதற்காக நாட்டு வெடிகுண்டை வைத்தார் என்ற தகவல் எல்லாம் விரைவில் வெளியாகும் எனக் கூறினர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...