For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயல்லிதாவின் தரம் வேகமாக குறைந்து வருகிறது – கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: மின்வாரியத்தின் மீது சேறு வாரி இறைக்கும் ஜெயல்லிதா நிலக்கரியின் தரம் குறைந்திருப்பதாக கூறியுள்ளார். ஆனால் அவரது தரம்தான் வேகமாக குறைந்து கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

பெண்ணாகரம் தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா விமானத்தில் பறந்து சென்று இரண்டு நாள் சூறாவளிப் பயணம் நடத்தி கடைசியாக காரிலேயே சென்னை திரும்பியதைத் தொடர்ந்து ஏடுகள் எல்லாம் இரண்டாம் இடம் யாருக்கு என்று பெரிய அளவில் செய்தி வெளியிட்டு வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு அதிமுக 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டு டெபாசிட் தொகையையும் இழந்து நிற்கின்ற நிலையில் அந்தத் தோல்வியை மறைக்ஊக வேறு எந்த வழியும் தெரியாமல் மின்வாரியத்தின் மீது சேறு வாரி இறைக்கும் முயற்சியில் ஜெயலலிதா ஈடுபட்டு அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது குற்றச்சாட்டு கற்பனையானது, உண்மைக்கும் அதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதை நான் விளக்கிட விரும்புகிறேன்.அவரே சொல்லியிருப்பது போல், நம்பகமான இடத்திலிருந்து கிடைத்த தகவல் என்பதிலிருந்தே அது இட்டுக்கட்டிய தகவல் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள முடியும். ஆண்டுதோறும் கூடுதல் விலைக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் நிலக்கரியை இறக்குமதி செய்வதன் மூலம் ஏற்படுகின்ற இழப்பு ஆயிரம்கோடி ரூபாய் என்று ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

2009 10ம் ஆண்டில் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் மொத்த விலையே 520 கோடி ரூபாய் தான். 520 கோடி ரூபாய்க்கு நிலக்கரி வாங்கிய நிலையில், அதிலே ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு அறிக்கை விட ஜெயலலிதா ஒருவரால் தான் முடியும்.

அடுத்து ஜெயலலிதா தனது அறிக்கையில் ஆறு மில்லியன் டன் அளவுக்கும் மேலான, குறைந்த வெப்பத்திறன் கொண்ட நிலக்கரி, ஒரு டன் 120 அமெரிக்க டாலர் என்ற வீதத்தில் இந்தோனேசியாவிலிருந்து தமிழ்நாடு மின்சார வாரியத்தால் ஆண்டுதோறும் இறக்குமதி செய்யப்படுகிறது என்று சொல்லியிருக்கிறார். தமிழ்நாடு மின்சார வாரியத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் சராசரி விலை ஒரு டன்னிற்கு 90 முதல் 95 டாலர்கள் மட்டுமே. ஆனால் ஒரு டன் 120 டாலர்கள் என்று ஜெயலலிதா அறிக்கையிலே சொல்லியிருக்கிறார்.

தமிழகத்தின் தற்போதைய மின் நிலையங்களின் உற்பத்திக்கான தேவையான சுமார் 15 மில்லியன் டன் நிலக்கரியில் 13 மில்லியன் டன் நிலக்கரி மட்டுமே மத்திய அரசாங்கத்திற்கு உட்பட்ட நிலக்கரி நிறுவனத்தின் மூலமாக கிடைக்கப் பெற்று வருகிறது. மீதமுள்ள சுமார் 2 மில்லியன் டன் நிலக்கரியை மட்டுமே தமிழ்நாடு மின்சார வாரியம் இறக்குமதி செய்துள்ளது.

அந்த நிலக்கரியும் கூட மத்திய அரசின் நிறுவனமான எம்எம்டிசி மூலமாகத் தான் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் எதிர்க்கட்சித்தலைவர் ஜெயலலிதா தனது அறிக்கையில் ஆறு மில்லியன் டன் நிலக்கரியை தமிழ்நாடு மின்சார வாரியம் இறக்குமதி செய்துள்ளது என்று சொல்வது அவருக்குக் கிடைத்தது நம்பகமான தகவல் அல்ல. யாரோ வேண்டுமென்றே அவரை ஏப்ரல் 1ம் தேதி என்பதை நினைவிலே கொண்டு கேலி செய்வதற்காகக் கொடுத்த தகவல் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஜெயலலிதா தனது அறிக்கையில் ஸ்டார் எம்சன்ஸ் ரிசோர்ஸ் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான நிலக்கரி சுரங்கத்திலிருந்து தான் பெரும்பாலான நிலக்கரியை தமிழ்நாடு மின்சார வாரியம் இறக்குமதி செய்கிறது என்றும், இந்த நிறுவனம் தலைமைச் செயலகத்தை கட்டுகின்ற நிறுவனத்திற்கு வேண்டிய நிறுவனம் என்றும் எழுதியிருக்கிறார். இதுவும் முற்றிலும் தவறான தகவல்.

ஸ்டார் எம்சன்ஸ் ரிசோர்ஸ் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை. மத்திய அரசின் நிறுவனமான எம்எம்டிசி மூலமாகத் தான் தமிழ்நாடு மின்சார வாரியம் நிலக்கரியைப் பெறுகிஙிறது. தலைமைச் செயலகக் கட்டிடப் பணியும் உலகளாவிய ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு முறைப்படி தான் அளிக்கப்பட்டுள்ளது. எனவே கனவுலகத்திலிருந்து ஜெயலலிதா மீண்டு வருவது நல்லது.

மேலும் ஜெயலலிதா தனது அறிக்கையிலே மின் உற்பத்திக்காக தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது என்று சொல்லி யிருப்பதும் தவறான தகவல் தான். உண்மை என்னவென்றால், எந்தவொரு மாநிலத்தின் மின்சார வாரியமும் தன்னுடைய மின் உற்பத்தித் தேவைக்கான நிலக்கரியில் 70 சதவிகிதத்தை மட்டுமே மத்திய நிலக்கரி அமைச்சகத்திடமிருந்து பெற முடியும். மீதம் உள்ள 30 சதவிகித நிலக்கரியை அந்த வாரியங்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொள்ள வேண்டிய நிலை தான் உள்ளது. இந்தக் கொள்முதல் முறை 2005ம் ஆண்டு இதே ஜெயலலிதா ஆட்சியிலே இருந்த காலத்திலிருந்தே நடைபெற்று வரும் முறை தான். அதிலே எந்தவித மாற்றமும் இன்றி இப்போதும் செய்யப்பட்டு வருகிறது என்பதுதான் உண்மை.

அடுத்த ஜெயலலிதா தனது அறிக்கையில் தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்துவிட்டதாக ஒரு குற்றச்சாட்டைச் சொல்லியிருக்கிறார். இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் தன்மையைப்பொறுத்தவரையில் மத்திய அரசாங்கத்தின் மத்திய மின்சார ஆணையம் மூலம் நிர்ணயிக்கப்பட்ட அளவான 6000 வெப்பத்திறன் இருக்க வேண்டும். ஆனால் தமிழ்நாடு மின்வார வாரியம் இறக்குமதி செய்யும் நிலக்கரியின் வெப்பத்திறன் 6000 ஜிசிவி முதல் 6300 ஜிசிவி வரை உள்ளது. எனவே ஜெயலலிதாவின் இந்தத் தகவலும் நம்பகரமானதல்ல தவறான ஒன்றாகும்.

மேலும் ஜெயலலிதா தனது அறிக்கையில் மின் பற்றாக்குறை பற்றியெல்லாம் எழுதியிருக்கிறார். அதற்கெல்லாம் முழு முதல் காரணம் ஜெயலலிதா தனது ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் மின் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கத்தோடு புதிய மின் திட்டங்களைக்கொண்டு வராதது தான். அதையெல்லாம் மறைத்து விட்டு பெண்ணாகரம் தொகுதி இடைத் தேர்தலில் தனக்கு ஏற்பட்ட டெபாசிட இழப்பை சரிக்கட்டுவதற்காக இத்தகைய கற்பனையான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

பெண்ணாகரம் தொகுதியில் பாமகவுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிடுவதற்காக அதிமுகவினர் எந்த அளவிற்கு முயன்றார்கள். பாமகவின் தலைவர் ஜி.கே.மணியுடன் யார் யார் அதிமுக தரப்பிலேயிருந்து தொலைபேசியிலே தொடர்பு கொண்டு பேசி போயஸ் தோட்டத்திற்கு வருமாறு அழைத்தார்கள் என்பதையெல்லாம் இன்று ஜி.கே.மணி வெளிப்படையாக தெரிவித்து அந்தச் செய்தியும் எடுகளிலே வெளிவந்திருக்கின்றது.

இதற்கெல்லாம் பதில் கூற வேண்டிய நெருக்கடியிலே உள்ள ஜெயலலிதா ஏதோ நம்பகமாக கிடைத்த தகவல் என்றெல்லாம் கூறி அறிக்கை விடுவதால் நிலக்கரியின் தரம் குறைந்து விடவில்லை. அவரது தரம் தான் வேகமாகக் குறைந்து வருகிறது என்பதைத் தான் காட்டுகின்றது என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X