For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சோயப்பிடம் போலீஸ் விசாரணை- பாஸ்போர்ட் பறிமுதல்: திட்டமிட்டபடி கல்யாணம் - சானியா

By Staff
Google Oneindia Tamil News

Shoib Malik and Ayesha
ஹைதராபாத்: ஆயிஷா சித்திக்கி கொடுத்த புகாரின் அடிப்படையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் மீது வழக்குப் பதிவு செய்துள்ள ஹைதராபாத் போலீஸார், இன்று அவரிடம் 2 மணி நேரம் சானியா மிர்ஸா வீட்டில் வைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணை முடியும் வரை அவர் நாட்டை விட்டுச் செல்லக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சோயப் மாலிக்கின் பாஸ்போர்ட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விசாரணைக்குப் பின்னர் சானியாவும், சோயப் மாலிக்கும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கினர்.

2 மணி நேரம் போலீஸ் விசாரணை

ஆயிஷாவுக்கும், தனக்கும் திருமண ஒப்பந்தப் பத்திரம் ஏற்படுத்தப்பட்டது உண்மை, தான் அதில் கையெழுத்துப் போட்டது உண்மை என்று சோயப் மாலிக் நேற்று முதல் முறையாக ஒப்புக் கொண்டார். இதையடுத்து ஆயிஷாவின் தந்தை ஹைதராபாத் போலீஸில் ஒரு புகார் கொடுத்தார்.

பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் ஆயிஷாவின் தந்தை இந்தப் புகாரைக் கொடுத்துள்ளார். இதையடுத்து சோயப் மாலிக் மீது மோசடி, வரதட்சணைக் கொடுமை, கிரிமினல் சதிச் செயல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சோயப் மட்டுமல்லாமல் அவரது மைத்துனர் இம்ரான் மீதும் புகார் தரப்பட்டுள்ளது.

வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து சானியா மிர்ஸா வீட்டுக்குப் போலீஸ் குழு விரைந்த்து. அங்கு வைத்து சோயப் மாலிக்கிடம் விசாரணை நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 2 மணி நேரம் விசாரணை நடந்த்து.

பாஸ்போர்ட் பறிமுதல்

ஆயிஷா கூறிய புகார்கள் குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. விசாரணை முடியும் வரை சோயப் மாலிக் ஹைதராபாத்தை விட்டுச் செல்லக் கூடாது என்றும் போலீஸ் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவரது பாஸ்போர்ட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விசாரணை குறித்து போலீஸ் உதவி கமிஷனர் துவாரகா திருமலா ராவ் கூறுகையில், சோயப் மாலிக்கிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவரது பாஸ்போர்ட்டும் பறிமுதல் செய்ய்பட்டுள்ளது. இதுகுறித்து குடியேற்றத் துறை அதிகாரிகளுக்கும் தகவல் தரப்பட்டுள்ளது.

சானியா மிர்ஸாவின் வீட்டுக்குச் சென்று அங்கு தங்கியுள்ள சோயப் மாலிக்கிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆதாரங்களைத் திரட்டும் முயற்சிகளில் நாங்கள் இறங்கியுள்ளோம். சோயப் மாலிக் விசாரணைக்கு ஒத்துழைக்கிறார். சோயப்புக்கு ஆதரவாக சானியா மிர்ஸா இருக்கிறார். இந்த விவகாரம் குறித்த முழு விவரமும் தங்களுக்குத் தெரியும் என்று சானியாத் தரப்பில் கூறியுள்ளனர் என்றார்.

விசாரணையின்போது சித்திக்கி குடும்பத்தினர் தன்னை ஏமாற்றி விட்டதாக சோயப் கூறினாராம்.

கெளரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் – சானியா, சோயப்

விசாரணைக்குப் பின்னர் வீட்டுக்கு வெளியே பெருமளவில் திரண்டிருந்த செய்தியாளர்களை சோயப்புடன் இணைந்து சந்தித்தார் சானியா மிர்ஸா.

அப்போது சோயப் மாலிக் கூறுகையில், நான் இங்கு வந்திருப்பது சானியா மிர்ஸாவை கல்யாணம் செய்து கொள்வதற்கு மட்டுமல்ல, என் மீது குற்றச்சாட்டுக்கள் தவறு என்று நிரூபிக்கவும்தான்.

நான் இந்திய அரசுக்கும், காவல்துறைக்கும் முழுமையாக ஒத்துழைப்பு தருகிறேன். இந்தப் பிரச்சினை தீரும் வரை இந்தியாவை விட்டு வெளியேறப் போவதில்லை.

என்னுடன் கல்யாணம் நடந்ததாக ஆயிஷா கூறியுள்ளார். அவர் திருமணம் நடந்ததாக கூறிய ஆண்டில் எனக்கு 18 வயதுதான் நடந்து கொண்டிருந்தது. அவர் தனது புகார்களை நிரூபிக்க வேண்டும். அதற்குப் பதிலளிக்க நான் தயாராக இருக்கிறேன்.

தொலைபேசி மூலமாகவே மீடியாக்களிடம் பேசிக் கொண்டிருக்கும் ஆயிஷா,. என்னைப் போல பகிரங்கமாக பேச முன்வராதது ஏன். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறும் ஆயிஷா, தொலைபேசியில் மட்டும் அதிக நேரம் பேச முடிவது எப்படி என்றார் சோயப் மாலிக்.

சோயப்புடன் இறுகிய முகத்துடன் நின்றிருந்த சானியா மிர்ஸாவிடமும் செய்தியாளர்கள் கேள்விகள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த சானியா, நாங்கள் கெளரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எனது வருங்காலக் கணவரை இந்த மாதிரியான செய்திகளில் நான் பார்ப்பது வருத்தமாக இருக்கிறது.

அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்று நிரூபிக்கப்பட வேண்டும் என விரும்புகிறோம். இதற்காகாகத்தான் அவர் ஹைதராபாத் வந்துள்ளார். எங்களது குடும்பத்திற்கு உண்மை என்ன என்று தெரியும். விரைவில் அது விசாரணையின் மூலம் வெளியுலகுக்குத் தெரிய வரும்.

ஒரு இந்தியராக சோயப் மாலிக்கிடம் இந்திய அரசும், காவல்துறையும் விசாரிக்க அனுமதிப்பது எனது கடமையாகும்.

எங்களது திருமணம் திட்டமிட்டபடி ஏப்ரல் 15ம் தேதி நடைபெறும் என்றார் சானியா.

சோயப்புக்கு உதவுவோம் – பாகிஸ்தான்

இதற்கிடையே, சோயப் மாலிக் பாகிஸ்தானியர் என்பதால், அவருக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையிலிருந்து மீள சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் பாகிஸ்தான் அரசு மேற்கொள்ளும் என்று அந்த நாட்டு அரசு கூறியுள்ளது.

ரூ. 5 கோடி பேரம் பேசினார் சோயப் – அகமது சித்திக்கி....

இதற்கிடையே, புகாரை வாபஸ் பெறுமாறும், ரூ. 5 கோடி பணம் தருவதாகவும் சோயப் தன்னுடன் பேரம் பேசியதாக ஆயிஷாவின் தந்தை அகமது சித்திக்கி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ரூ. 5 கோடி தருகிறோம், புகாரை வாபஸ் பெறுங்கள் என்று சோயப் மாலிக் பேரம் பேசினார். ஆனால் நான் மறுத்து விட்டேன்.

எனது மகளுக்கு விவாகரத்து தர வேண்டும், ஆயிஷாவுடன் நடந்த திருமணத்தை சோயப் மாலிக் ஒத்துக் கொள்ள வேண்டும். இதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். எங்களுக்கு வேறு எதுவும் தேவையில்லை.

சோயப்பின் முதல் மனைவி எனது மகள் ஆயிஷாதான். சானியாவைத் திருமணம் செய்து கொண்டால் அவர் 2வது மனைவி ஆவார்.

பாகிஸ்தான் சட்டப்படி முதல் மனைவியின் சம்மதம் இல்லாமலோ அல்லது விவாகரத்து செய்யாமலோ ஒருவர் இன்னொரு திருமணம் செய்தால் ஒரு வருட சிறைத் தண்டனை, ரூ. 50 ஆயிரம் அபாரதம் விதிக்க சட்டத்தில் இடமுண்டு என்றார் அகமது சித்திக்கி.

சமரச முயற்சியில் ஆந்திர கிரிக்கெட் நிர்வாகி

இதற்கிடையே, சோயப் மாலிக், ஆயிஷா இடையே, சமரசத்தை ஏற்படுத்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் நிர்வாகி வெங்கண்ண சாமுண்டேஸ்வரநாத் களம் இறக்கப்பட்டுள்ளார்.

இவர் இந்திய கிரிக்கெட் அணியில் மேலாளராக இருந்தவர். நேற்று சானியாவின் வீட்டுக்கு இவர் சென்றார். அங்கு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.

பின்னர் வெளியில் வந்த அவரிடம், செய்தியாளர்கள் வருகை குறித்துக் கேட்டபோது, எனக்கு சானியாவை சிறு வயது முதலே தெரியும். எனவே அவரை வாழ்த்தவே வந்தேன் என்றார்.

ஆனால் சோயப் மாலிக் மற்றும் சானியா தரப்பு செய்தியை ஆயிஷா தரப்பிடம் தெரிவித்து சமரசம் செய்யவே சாமுண்டேஸ்வர நாத் அழைக்கப்பட்டுள்ளதாக பேச்சு எழுந்துள்ளது.

20 அறைகள் புக்கிங்

இதற்கிடையே, ஹைதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா ஹோட்டலில் சோயப் – சானியா கல்யாணத்தையொட்டி 20 அறைகள் புக் செய்யப்பட்டுள்ளனவாம்.

மேலும் மாப்பிள்ளை, பெண்ணுக்கான டிரஸ் வடிவமைப்புக்காக டெல்லியிலிருந்து ஒரு டிசைனர் வரவுள்ளாராம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X