For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மருந்து மோசடி கும்பலுக்கு உடந்தை - சென்னை ஜிஎச் பெண் ஊழியர் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: மருந்து மோசடி கும்பலுக்கு உடந்தையாக, சென்னை அரசு பொது மருத்துவமனையில் இருந்து மருந்துகளை திருடி சப்ளை செய்து வந்த பெண் ஊழியர் போலீசிடம் சிக்கியுள்ளார்.

தமிழகத்தில் வெடித்துக் கிளம்பிய மருந்து மோசடி விவகாரத்தில் மீனாட்சி சுந்தரம் உட்பட முக்கிய குற்றவாளிகள் 11 பேர் ஜாமீனில் வெளி வரமுடியாத படி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து நடத்தி வரும் நிலையில், நேற்று சென்னை அரசு பொது மருத்துவமனையின் பெண் துப்புரவு தொழிலாளி தனம் என்ற தனலட்சுமி, சுரேஷ்பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தனலட்சுமி மருத்துவமனை மருந்து குடோனில் இருந்து நல்ல மருந்து, மாத்திரைகளையும், காலாவதி மருந்து, மாத்திரைகளையும் திருடி விற்றுள்ளார்.

ஒவ்வொரு முறை மருந்து சப்ளை செய்யும் போதும் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை பணம் கிடைக்கும் என்றும், கடந்த 5 ஆண்டுகளாக இந்த வேலையில் ஈடுபட்டு வருவதாகவும் தனலட்சுமி போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

சுரேஷ்பாபு காலாவதி மருந்து சப்ளைக்காக போலி முத்திரை மற்றும் போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்து உதவியுள்ளார். தனலட்சுமிக்கு உடந்தையாக வேறு யார் யார் உள்ளனர் என்பது பற்றி விசாரணை நடக்கிறது.

தனலட்சுமியும், சுரேஷ்பாபுவும் நேற்று மாலை எழும்பூர் 2வது கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு ஸ்ரீதேவி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

மாஜிஸ்திரேட்டு உத்தரவின் பேரில் அவர்கள் இருவரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அச்சக உரிமையாளர் கைது

இதற்கிடையே, சிவகாசியில் இருமல் மருந்துக்கு போலியாக லேபிள் தயாரித்த அச்சக உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் திருப்பாபுலியூர் பகுதியில் உள்ள ஒரு மருந்து கடையில் கடந்த மாதம் சுகாதார அதிகாரிகள் திடீர் சோதனை செய்த போது பிரபல இருமல் மருந்தின் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அந்த மருந்தை ஆய்வுக்கு அனுப்பிய போது அது இருமல் மருந்து இல்லை என்றும், போலியாக தயாரிக்கப்பட்ட மருந்துக்கு பிரபல இருமல் மருந்து லேபிள் ஒட்டி விற்பனை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

இது தொடர்பாக, திருப்பாபுலியூரை சேர்ந்த முருகேசன், வள்ளியப்பன், ஆனந்த் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடந்த விசாரணையில் போலி மருந்து பாட்டிலுக்கு தேவையான லேபிள்கள் சிவகாசியில் உள்ள ஒரு அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டதாக கூறினர்.

இதைத் தொடர்ந்து சிவகாசி முனீஸ்வரன் காலனியில் உள்ள ஒரு அச்சகத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு போலி லேபிள்கள் அச்சடிக்கப்பட்டது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து அந்த அச்சகத்தின் உரிமையாளர் பொன்னுப்பாண்டி என்கிற ஆல்பர்ட்டை (39) போலீசார் கைது செய்தனர். அங்கிருந்த 1 லட்சம் போலி லேபிள்கள், அவற்றை தயாரிக்க பயன்படுத்திய லேப்டாப் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X